பொருளடக்கம்

19. ஆன்மிக ஆழ்கடல்

கட்டுரை 19 / 50

ஆன்மிக ஆழ்கடல்

A Deep Ocean of Spirituality

அச்சுப் பக்கம் 85–88

scan 85 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

குன்றக்குடி அடிகளார் என்று உலக முழுவதும் பரவியுள்ள தமிழர்களால் அழைக்கப்பட்டவர்; சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி ஆதீனகர்த்தா அருட்பெருந்திரு அடிகளார் தெய்வ சிகாமணி அருணாசல தேசிகர் என்ற பட்டப் பெயர்களுடன் திகழ்ந்தவர் அவர். அவர் ஆன்மிகத் துறையில் ஆழ்கடல். அக் கடலில் அறிவுத் தோணி செலுத்தி முற்போக்கு முத்துக்களையும் எடுத்து, மனித நேயம் சிறந்திடப் பூட்டி மகிழ்ந்தவர்.

பொதுமேடைகளில் அவரை விளிக்கும் போதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் “குன்றக்குடி மகா சன்னிதானம் அவர்களே!” என்றுதான் குறிப்பிடுவார். அதுபற்றிச் சில தீவிர பகுத்தறிவாளர்கள் பெரியாரிடம் கேட்டபோது பெரியார் என்ன பதில் அளித்தார் தெரியுமா?

“அடிகளார் - ஆன்மிகத் துறையிலே மட்டும் ஆழ்ந்து கிடந்து, அறிவுப் பெருக்கத்திற்கோ, தமிழர்கள் முன்னேற்றத்துக்கோ கவலைப்பட்டுப் பாடுபடாதவரா இருந்தால், சமூகப் பிரக்ஞையற்றவராக இருந்தால்; அவரை மகா சன்னிதானம் என்று மட்டும்தான் மக்களில் பலரும் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அடிகளார், வெறும் ஆன்மிக ஞானியாக மாத்திரம் இல்லாமல், பகுத்தறிவுச் சிந்தனையாளர் - சமுதாய சீர்திருத்தப் பணியாளர் - தமிழ் உணர்வாளர் - என விளங்கியிருப்பவர். அவரை “மகா சன்னிதானம்” என்றும் ஏற்றுக் கொண்டு நாம் அழைத்தால்தான்; அது நமக்கும் பெருமை -

அவருக்கும் பெருமை - அப்படித்தான் அழைக்க வேண்டுமென்று மற்றவர்களுக்கும் வழிகாட்டியாகும்.”

இந்தக் கருத்தைத்தான் தந்தை பெரியார் விளக்கமான விடையாகத் தந்தார்.

அவரை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது; தமிழ்ச்சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யும் பேறுபெற்றேன். அந்தப் பொறுப்பினை ஏற்றிட முதலில் தயக்கம் காட்டினார். அன்றைய சட்ட அமைச்சர் திரு. மாதவனை அனுப்பிவைத்து அதன் பிறகு அவர் ஒப்புதல் தந்து 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் அந்த நியமனம் நடைபெற்றது.

அதையொட்டி நன்றி தெரிவித்து குன்றக்குடி அடிகளார் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பி வைத்தார். அது அப்போது பல ஏடுகளில் வெளிவந்தது. “நெஞ்சுக்கு நீதி”யிலும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கவிதை வருமாறு:-

“தமிழில் தோய்ந்து தண்ணளி பெற்ற இனிய கலைஞ! நின்றன் கொற்றம் வழங்கிய சிறப்பில் மலர்ந்தன இவையே! வாழும் நெறியினை வகுக்கும் வள்ளுவம் கோல உலகில் குடி நின் றுயர பருவம் மடிமா என்பா ராமல் குடிசெய்தற் கென்றே குரல் கொடுத்தது! அக்குரல் தனக்கே அரும் இலக் கியமாய் வாழ்ந்து வேறுபா டின்றி இந்நலம் கருதிக் கங்கு கரையிலா அன்பு பொழிந்த பேரிஞர் அண்ணா கண்டோம். வாழுதல் கலையென மொழிந்தான் வள்ளுவன் வள்ளுவன் நெறியும் அண்ணா நெறியும்

வாழும் வகைத்திரு கால்களாம் என்றே கொண்ட கொண்டல் கொழிதமிழ்க் கலைஞர் புதிய புறநா னூற்றைப் படைக்கும் புரவலர்! புரவலர் புரவல ராக இருப்பதோ டன்றி இணையில்தா லத்தையும் வென்று நிற்கும் வியன்மிகு கவிஞராய் நிரந்தினி துரைக்கும் நீர்மைநா வலராய் ஏற்றம் மிகுந்த எழுத்தாள ருமாய் நாடொறும் நாடி நலம்புரி அமைச்சராய் நெஞ்சில் பழுக்கச் செஞ்சொல் உழுது அன்பெனும் வித்திட் டாரத் துய்த்திடும் அருமைக் கலைஞர் நமையே வையில இருக்கச் செய்தது என்ன கருதியோ? நெடிய நேரம் நினைந்த பின்னும் புலப்பட வில்லை; புலப்பட வில்லை! நமது ஆ தீனம் அஃதன் ணாமலை ஆதீ னம் ஆம் அண்ணா என்ற முதன்மைச் சொல்லில் மூண்ட காதலோ? பேசும் மொழியால் பெட்டுறு நெறியால் தமிழ இனத்தைச் சார்ந்தது கருதியோ? குன்றக் குடியைக் குன்ற விடாமல் நின்று விளக்கிட நினைத்தோ? இவரை ஏற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணமோ? ஒதுங்கி மடத்தில் உட்கார்ந் தவரை

மன்றில் நிறுத்தி வேடிக்கை பார்க்கவோ? பிறந்த மொழியைப் பயின்றநாள் தொடுத் தொண்டு நெறியின் சுவையே நியதி நம்மையும் தொண்டு நெறியில் நடத்தித் தூண்ட கருதியோ? தொன்மைச் சிறப்பின் தாரணி புகழும் தஞ்சை மண்ணிடை ஒருங்கே பிறந்தோம் எனும்பா சத்திலோ? சென்ற நாட்களில் சிலதுறை யேற்றுத் தொண்டு செய்ததில் தொடர்ந்த துன்பத்தை கண்டு களைந்திடுங் கருத்தது தானோ? தமிழ்மொழித் துறையில் தக்கபே ரறிவு இல்லை யெனினும் எழிற்றமிழ்ப் பற்று மிக்கோர் என்னும் விரிந்த கருத்திலோ? இழிசா தியெனக் கிடந்ததும் இனத்தை ஏற்றமுறச் செய் பெரியார் எம்மிடைக் கொண்ட பாசம் குறித்து நினைத்ததோ? எதுவென அறியோம்! யாதுசெய் வதென விளங்கவு மில்லை! வேண்டுவ தொன்று இன்றே போல்க, உமது கேண்மை! தாங்கு புகழார் தரணிக்கு நீ செய்யும் பணிக்குடன் நிற்கும் வாய்ப்பளித் தமைக்கு உளமார் நன்றி! உவந்துரை செய்தோம். என வினாக் குறிகளை வியப்புக்குறிகளாக்கி;

“எழுபிறப் பும்பாம் எம்முளம் கொள்வோம் உழுவலன்புத் திறத்தினை வாழ்த்துவோம்”

என்று நிறைவு செய்கிறார் அடிகளார் அந்தக் கவிதையை; நன்றிப் பெருக்குடன்!

அறிவியக்கத்தைச் சேர்ந்த நாம்; ஆன்மிகவாதிகளுக்கு ஒட்டுமொத்தமாக எதிரானவர்கள் அல்லர் என்பதற்கும் - ஆன்மிகவாதிகளும் அறிவியக்கத்தின் அப்பழுக்கற்றதும் ஏற்றத் தாழ்வற்றதுமான சமுதாயப் பணிபுரிபவர்களாக அமைந்திடல் வேண்டுமென்பதற்கும் - பெரியாரும், அண்ணாவும், அவர்கள் வழியில் தொண்டாற்றும் நாமும் எடுத்துக்காட்டாக விளங்குவதற்கு குன்றக்குடி அடிகளார் பற்றிய இந்தத் தகவல் ஒன்றே தக்க சான்றாகும்.

4 - 8 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்