பொருளடக்கம்

18. சோதிட சோகம்!

கட்டுரை 18 / 50

சோதிட சோகம்!

Astrological Sorrow!

அச்சுப் பக்கம் 82–83

scan 82 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இராமனுக்கு முடிசூட்டு விழா நடத்த நல்ல நாள், நல்ல நேரம் எதுவென்று பார்த்துக் கணித்துக் கொடுத்தவர் சாதாரணமானவர் அல்ல. சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சகலகலாவல்லவர் - வசிஷ்டர் - அவர் குறித்த நாளில் நாடாளச் செங்கோல் ஏந்த வேண்டிய இராமன்; மரவுரி தரித்து மனையாள் சீதையுடனும், இளையோன் இலக்குவனுடனும் காட்டேற நேரிட்டதே என்பதை இராமாயண இதிகாசத்தில் படித்த பிறகும், ஆரூடம், சோதிடம், நாள் நட்சத்திரம், சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் என்று பஞ்சாங்க நம்பிக்கையில் அறிவைப் பறிகொடுத்துவிட்டு அலைகின்ற மானுடர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நிலையை அறிவியக்கத்துக்குக் கிடைத்துள்ள தோல்வி என்றும் - மூட நம்பிக்கையாளர்க்கு கிடைத்திடும் வெற்றி என்றும் எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றனர்.

அத்தகைய நம்பிக்கையின் காரணமாக எத்தகைய கொடுமைகள் பல குடும்பங்களைக் குலைத்திருக்கின்றன; பலரது வாழ்க்கைக் கெடுத்திருக்கின்றன - எத்துணை ஏமாற்றத்துக்கு மக்களை ஆட்படுத்தியிருக்கின்றன - எத்தர்கள் எத்துணையோர் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றனர் என்பதைச் செய்திகளாகச் செவிமடுத்தும்கூட; இன்னும் அந்த நம்பிக்கைகளுக்கு இடமளித்து நாசமாகின்றவர்கள் தொகை வளர்ந்து கொண்டேதானே போகிறது.

இதோ ஒரு செய்தி! கோவை உடையாம்பாளையத்தில் என்.ஜி.ஆர். வீதியென ஒன்று! ஆம்; அந்த வீதியின் பெயர் எனக்குப் பழைய நினைவைக் கிளறுகிற பெயர்!

என்.ஜி. இராமசாமி என்ற தொழிற்சங்கத் தலைவர் - பொதுவுடைமைப் பகுத்தறிவுவாதி - எதிரிகளால் அரசியல் பகை காரணமாக கொலையுண்டவர் - அவரது மைத்துனருக்குரிய வீட்டில்தான் 1946-47களில் சிங்காநல்லூரில் (அண்ணாசாமி வீடு) நான் குடியிருந்தேன்.

அந்த என்.ஜி.ஆர். பெயரில் உள்ள வீதியில் இரகுபதி என்பவர் ஓட்டல் நடத்தி வருபவர் - அவரது மனைவி சந்திரகலா - இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது; குழந்தையும் பிறந்து அதற்கு ‘விக்னேஸ்வரன்’ என்ற பெயரும் சூட்டினார்கள். நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் ஒரு சோதிடன் குறுக்கிட்டான்.

குழந்தையின் ஜாதகத்தை அவனிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார் இரகுபதி.

“குழந்தை விக்னேஸ்வரனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து; அதனால் தந்தையை விட்டு அந்தக் குழந்தையைப் பிரித்து வைக்க வேண்டும் - இப்படி ஜாதகம் சொல்லுகிறது”

என்றான் சோதிடன்.

அதன் பிறகு நடந்தது என்ன? இதோ 2005 ஜூலை 21ந்தேதி வெளிவந்த பத்திரிகை கூறுகிறது:-

“ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மன வருத்தம் அடைந்த ரகுபதி, அன்று முதல் அந்த ஒன்பது மாதமே நிறைந்த கைக் குழந்தை விக்னேஸ்வரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினார். அடிக்கடி குடித்துவிட்டு வந்த ரகுபதி, மனைவியிடம் குழந்தையைத் திட்டி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையைக் கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டுக்கு

வந்தார். குழந்தையை மோட்டார் சைக்கிளில் வைத்து வெளியே அழைத்துச் செல்வதாக ரகுபதி மனைவியிடம் கேட்டார். ஆனால் மனைவி சந்திரகலா மறுத்து விட்டார். பின்னர் மனைவியிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கி, தான் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் கை, கால், இடுப்பில், ஓங்கி, ஓங்கி அடித்துள்ளார். பின்னர் கட்டிலில் தூக்கிப் போட்டு கட்டிலிலும் குழந்தையைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் பச்சிளம் குழந்தை தலைசரிந்து மயக்கம் அடைந்தது. பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் குழந்தையைச் சேர்த்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து, தந்தை ரகுபதியை கைது செய்து சிறையில் அடைத்தார். குழந்தையை இழந்து தவித்த தாய் சந்திரகலா அழுது புலம்பினார்”

இப்படி ஒன்றா? இரண்டா? எத்தனையோ கொடுமையான நிகழ்ச்சிகள்! அறிவை இழந்து; அதன் காரணமாக விளையும் அவலங்கள்!

ஜாதகம் - சோதிடம் என்பவை உண்மையானால் “குழந்தை பிறந்த ஜாதகப்படி; அந்தக் குழந்தை ஒன்பது மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்; அந்த ஒன்பது மாதத்திற்குள் குழந்தையின் தகப்பனே அதைக் கொலை செய்து விடுவான்” என்றல்லவா அந்தச் சோதிடன் சொல்லியிருக்க வேண்டும். எனவே இதுபோன்ற சோதிடப் புரட்டர்களால் விளையும் விபரீதங்களைத் தடுக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் இன்னும் எவ்வளவு வேகமாக - விரிவாகப் பரவ வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்போமாக; அதற்கேற்பச் செயல்படுவோமாக!

1 - 8 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்