பொருளடக்கம்

17. வசிய மருந்து

கட்டுரை 17 / 50

வசிய மருந்து

The Enchantment Drug

அச்சுப் பக்கம் 78–80

scan 78 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

ஆடவரை வசியம் செய்து தன் பக்கமிழுத்து, தன் பக்கமே வைத்துக்கொள்ள சில மருந்துகள் உண்டு என்று சிலர் பொய்யுரைத்து; அதையும் சில பெண்கள் நம்பி, அந்த மருந்துகளை வாங்கி, ஆண்களுக்குக் கொடுத்து, அதன் காரணமாகவே அந்த ஆண்கள் நோய்வாய்ப்படுவது உண்டு. அப்படி மருந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி; அதனால்தான் ஒரு ஆடவர் நோயுற்றிருக்கிறார் என்றும் கூறி அந்த மருந்தை அவர் வயிற்றிலிருந்து எடுப்பதாகவும், எடுத்துவிட்டால் பிறகு நலம் பெற்று விடுவார் என்றும் சில சாமியார்கள் அல்லது போலி வைத்தியர்கள் நிரம்பப் பணம் வாங்கிக் கொண்டு அந்த சிகிச்சையைத் தொடங்குவார்கள்.

மருந்து வைத்து மயக்கிவிட்டாள், அவன் மயங்கிக் கிடக்கிறான் என்று மருமகளை மாமியார்கள், நாத்தனார்கள் சபிப்பதும் உண்டு.

மருந்து வைத்து வசியம் என்பது எத்தகைய ஏமாற்று வேலை என்று விளக்கி தமிழ் மருத்துவம் பற்றி பல அரிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ள டாக்டர் திருமலை நடராசன், ஆர்.ஜி.எம்.பி., (சித்தா) என்பவர்; அவர் எழுதிய “சித்த மருத்துவக் களஞ்சியம்” என்ற நூலில் “மருந்து வைத்தல் வசிய நோய்” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்; தனக்கேற்பட்ட அனுபவத்தையே குறிப்பிட்டிருக்கிறார். அது வருமாறு:-

“மருந்தால் ஒருவரை தன் பக்கமிழுத்து விட இயலுமா என்பது முக்கிய கேள்வியாகும்.

இன்றுங்கூட இந்நோய் தனக்குள்ளதென்று நம்பி என்னிடம் வருவோர் உண்டு.

இவர்களுக்கு என்ன சொன்னாலும் அவர்கள் சொன்னதையே சொல்லுவார்கள்.

ஒருவரை தன் வசப்படுத்தக் கூடிய மருந்துகள் பத்து வகைப்படும் என்றும், சில மருத்துவ நூற்களில் குறிப்பிடப்பட்டு மருந்துகள் செய்முறையும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளில் ஒன்றைக் கூட ஒருவரும் இன்று முறையாகச் செய்யவே முடியாது என்று உறுதியாகக் கூறலாம். இம்மருந்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் சிலவற்றை அறிவதும், புரிவதுமே சற்றும் இயலாத செயல்.

ஒரு சிலர் தொழிலாகக் கொண்டு செய்யும் கொடிய சதி இதுவாகும்.

பெரும்பாலும் பெண்கள் ஆண்களுக்கு மருந்து வைத்து மயக்கிவிட்டார்கள் என்றே கேட்க முடிகிறது. இந்நோயாளிகளையும் காண முடிகிறது. ஆண்கள் பெண்களுக்கு மருந்து வைத்து மயக்கி விட்டான் என்று கேள்விப்படுவது அரிதாக இருக்கிறது. இந்த வசிய மருந்துகள் ஆண்களுக்கு மட்டுந்தான் வேலை செய்யுமா? பெண்ணிற்குக் கொடுத்தால் பலனிருக்காதா? சிந்திக்க வேண்டும். மருந்து என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதாகும்.

வைப்பு மருந்து நோயால் பீடிக்கப்பட்டோர் கூறும் குறிகள் - வயிற்றுவலி, மயக்கம், உணவின் மீது விருப்பமில்லாமை, மருந்து வைத்தவர் வீட்டிற்குச் சென்றால் வலி இல்லை, பசி ஏற்படுகிறது, உடம்பு பலவீனமாக இருக்கிறது, அந்த வீட்டை விட்டு வரவே முடியவில்லை, தன் வீட்டு நினைவே இல்லை என்பதாகச் சொல்கிறார்கள்.

இதோடு இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த மருந்து; வைத்த கட்டியாகவே வயிற்றிலிருக்குமாம். எடுத்தால் வெளியில் கட்டியாக வருகிறதாம்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மருந்து எடுப்பதைக் காணச் சென்றேன். கடுமையான பேதி மருந்தைக் கொடுத்தார், அந்த மருந்தெடுக்கும் மகா மருத்துவர். மருந்துள்ளவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு துடித்துப்போனார். பேதி ஏற்பட்டது. மலக் கழிவு, திடலில் நடைபெற்றது. ஒவ்வொரு பேதியாகும்போதும் அந்த மகா மருத்துவர் ஒரு குச்சியால் மலத்தைக் கிண்டிப் பார்த்தார். நானும் உடனிருந்தேன். எட்டு முறைகள் பேதியானது. கடைசியில் மகா மருத்துவர் குச்சியால் மலத்தைக் கிண்டிப் பார்த்தார். குச்சியோடு உருண்டை ஒன்றைப் போட்டு அதை தன் கையால் எடுப்பதை நான் தெரிந்தும் தெரியாததுபோல் பார்த்துவிட்டேன். அந்த உருண்டையை கழுவி என்னிடம் முதலில் காட்டினார். கையில் வாங்கிப் பார்த்து ஒரு நொடியில் அந்த உருண்டை இன்னதென்று தெரிந்து கொண்டேன்.

சில நாட்களில் அதே நபருக்கு மீண்டும் வயிற்று வலி. அதே மகா மருத்துவரிடம் சென்றார்கள். இன்னும் கொஞ்சம் மருந்திருக்கிறது என்று மீண்டும் மருந்து எடுக்கப்பட்டது. நானும் சென்றேன். மகா மருத்துவர் மீண்டும் ஒரு மருந்து துண்டை எடுத்தார். முன் எடுத்த மருந்தின் அளவிலும் மிகச் சிறியதாக. இம்முறையும் நான் எதும் சொல்லாது திரும்பிவிட்டேன்.

ஒரு நாள் அந்த மகா மருத்துவரைக் காணச் சென்றேன். கண்டேன். நீங்கள் மருந்தெடுக்கும் விதம் பிரமாதம் என்றேன். ரொம்ப சந்தோஷம் என்றவர், இது ரொம்ப கஷ்டங்க என்றார். என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “என்ன கஷ்டம். மெழுகை கரித் தூளில் உருட்டி மலத்தில் போட்டு எடுப்பதற்கு?” என்றேன், அசந்து போய் விட்டார். வயிற்றுப் பிழைப்பு சார் என்று பரிதாபமாகச்

சொன்னார். சார் இன்னொன்று உங்களுக்குத் தெரியுமா? சில பேருக்கு உண்மையிலேயே குணமாயிடுது சார்; ஆமாம் என்றேன். இனி மேலும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்றேன். “செய்வினை பண்ணிட்டாள், மருந்து வெச்சவள்” என்று சொல்லி மந்திரம் பண்ண வேண்டியதுதான் என்றார். மந்திரம் பண்ணியும் நோய் தீரவில்லை என்றால்? பெரிய மந்திரக்காரனிடம் தள்ளிவிட வேண்டியதுதான் என்றார். என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களை சமுதாயம் புரிந்துகொள்ளாமல் வளர்க்கிறதே என்று திரும்பிவிட்டேன்.

எதற்கு இவ்வளவும் எழுத நேரிடுகிறது என்றால் நோயை அறியாது பேயை நம்புகிறார்களே; என்னைக்கு இவர்கள் திருந்துவார்களோ?”

மருந்துகளின் பெயராலும் மடமையிருளில் மக்கள் தள்ளப்பட்டார்கள்; ஏன் இப்போதும்கூட அந்த நம்பிக்கையில் மக்கள், கிராமப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - அவர்களையெல்லாம் - திருத்தி, அறிவோடு வாழச் செய்வதற்கு படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். பகுத்தறிவு பரப்புவதைத் தங்கள் பணியாகக் கொள்ள வேண்டும்.

18 - 7 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்