பொருளடக்கம்

16. ஒழுக்கம்

கட்டுரை 16 / 50

ஒழுக்கம்

Conduct

அச்சுப் பக்கம் 75–76

scan 75 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

ஊரார் அறிந்தால் நம்மை எவ்வளவு உதாசீனப் படுத்துவார்கள், பகைத்து விட்டார் பழித்துரைக்கும்படி ஆகிவிடுமே, அவர்கள் நம்மைப் பார்ப்பதே ஒருமாதிரி இருக்குமே, என்றெல்லாம் நினைத்து; அத்தகைய நிலை, தம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒழுக்கமாக இருப்பதென்பதை ‘கற்பு’ என்று கூறிவிட முடியாது.

கொலை செய்தால், கொள்ளையடித்தால், தண்டனை கிடைக்கும் என்பதற்காக அச்செய்கையைத் தவிர்ப்பதற்கும் பிறர் பழிப்பரே என்பதற்காக ஒழுக்கத்திலிருந்து வழுவாதிருப்பதற்கும் அவரவர் மனச்சாட்சியை வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தால் அதற்கு மதிப்பு என்று எதுவுமே கிடையாது. தென்றலுக்கு எப்படிக் குளிர்த்தன்மை இருக்கிறதோ, கோடை வெயிலுக்கு எப்படி வெப்பம் இருக்கிறதோ; அதுபோல இயற்கையாகவே ஒழுக்கம் எனும் பண்பு; ஆடவர் பெண்டிர் இருபாலார்க்கும் இருப்பதுதான் போற்றுதற்குரியதாகும்.

இல்லையேல்; குளிர்காலத்தில் சுற்றுப்புறத்தைச் சூடாக வைத்துக் கொள்ளவும்- கோடை காலத்தில் சிலுசிலுப்பாக வைத்துக் கொள்ளவும் ஏற்ற கருவிகளை அமைத்துக் கொள்வதுபோலவே; தம்மை ஒழுக்கமுடையவர்களாக ஆக்கிக்கொள்வதும் ஆகிவிடும்.

திருட்டு என்பதை எண்ணிப்பார்த்து; “ஏயப்பா; அது தீச்செயல்! சிக்கிக்கொண்டால், சிறைத் தண்டனை” எனும் அச்சத்திற்காக அடங்கி, அதன் காரணமாக அந்த எண்ணத்தையே விட்டொழிப்பதைக் காட்டிலும்; அந்த எண்ணமே மனத்தில் தோன்றாமலிருப்பதுதானே “மாண்பு” எனப் புகழப்படக்கூடியது; மதிக்கப்படக்கூடியது!

களவு மாத்திரமல்ல; எந்தவொரு தீய செயலையும், கொலை, கற்பழிப்பு போன்ற கொடுஞ்செயலையும், அவற்றால் ஏற்படக் கூடிய விளைவுகளை நினைத்துப் பார்ப்பதால் தவிர்ப்பது என்று அல்லாமல்; அந்தக் கெடு நினைப்பு இயற்கையாகவே தோன்றாமலிருப்பதுதான் ‘நேர்மை’ எனப்படும்! அந்த நேர்மையாளர்கள் தான் மனித நேயமுடையார் வரிசையில் வைத்துச் சிறப்பிக்கப்படுவர்.

இயற்கையாக அமையாமல் - விளைவுகளுக்கு அஞ்சி; அமையாமல் - ஒழுக்கமுடைமைக்கு எதிராக, மனித நேயத்திற்கு விரோதமாக, இன்னாச் செயல்கள்; விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பார்த்திடத் தவறியோ; அல்லது எண்ணிப் பார்த்த பிறகும்கூட நடைபெறுமேயானால் அதற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி சமுதாய ஒழுக்கம் பாதுகாத்திடக் காலம் காலமாக வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த முறைகள் உலகின் பல பகுதிகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவைகளாகவும் இருக்கின்றன.

அவை எத்தனை வகையாக இருப்பினும்; அவற்றின் மூல நோக்கம், குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதின் மூலம் மேலும் அக்குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதுதான்.

ஆனால், தண்டனைகளோ; சமுதாயம் பழிக்குமே என்ற அச்சமோ, சட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையோ - குற்றங்களைத் தடுப்பதற்குப் பயன்படுத்துவதைவிட; தனி நபர் ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் துணைநிற்பதைவிட; இயற்கையாகவே ஒழுக்கமாக இருப்பதுதான் இருபாலாரையும் கற்புள்ளவர்களாகவும், மனித

நேயமுள்ளவர்களாகவும், மாண்புள்ளவர்களாகவும், நேர்மையாளர்களாகவும் பெருமைப்படுத்தக் கூடியதாகத் திகழ முடியும்.

பண்பாடு போற்றும் பாங்கு; பழைமைச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல; பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கும் முற்போக்குப் புதுமைச் சமுதாயத்திற்கும் உரியதாகும் என்ற பொதுவான சிந்தனையின் அடிப்படையில் இந்தக் கருத்துக்கள் செயல் வடிவம் பெறுவது “உன்னையே நீ அறிவாய்” என்ற சாக்ரடீசின் போதனையைப் புரிந்துகொண்டு, தன்னையே உணர்ந்து “தன்னை வென்றால் தரணியை வெல்ல முடியும்” எனும் நம்பிக்கை கொண்ட மக்கள் சமுதாயத்திற்குப் புது வழியை, புரட்சிகரமான வழியைக் காட்டக் கூடியதாகும்.

14 - 7 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்