கட்டுரை 15 / 50
இன்பமும் துன்பமும்!
Joy and Sorrow!
அச்சுப் பக்கம் 69–73
scan 69 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“ஊர் சிரித்தது” என்றால்; யாரோ ஒருவர் - அல்லது யாரோ சிலர்; ஏதோ ஓர் இழிவுக்கு ஆளாகி அதனால் அந்த ஊரிலே உள்ளவர்கள், கேவலமாகப் பேசினார்கள் என்று பொருள்!
தொலைக்காட்சியில் நான் ஒரு நாடே சிரித்த காட்சியைக் கண்டேன். அந்த நாடு சிரித்தபோது இன்னொரு நாடு அழுது புலம்பிய காட்சியையும் கண்டேன். உங்களையும் உங்கள் நண்பர்களையும் குழப்புகிற பாணியில் சொல்லுவதாயின்,
ஒரு நாடு சிரித்தது,
ஒரு நாடு அழுதது,
உலகமே துயரத்தில் மூழ்கியது!
என்று மூன்று வாக்கியங்களில் அதனைக் குறிப்பிடலாம். குழப்பம் தீரவில்லையா? அதிகமாகிறதா? இதோ, முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்.
உலகப் புகழ்பெற்ற “ஒலிம்பிக் போட்டிகள்” நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாகும். போட்டி முடிவுகளையும், பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியலையும் அறிந்து கொள்வதற்கு அனைத்து நாடுகளில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் பரபரப்படைவதையும் “ஒலிம்பிக்” நடைபெறும் காலத்தில் நாம் உணர்ந்தேயிருக்கிறோம்.
2000ஆம் ஆண்டு சிட்னியிலும், 2004ஆம் ஆண்டு எதென்சிலும் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று, 2008இல் சீனாவில் பீஜிங் நகரில் நடைபெற்ற பிறகு 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் எங்கே நடத்துவது என்பதற்கான தேர்வு சிங்கப்பூரில் நடந்து, இலண்டனில் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2012இல் இலண்டனில் என்று அறிவிக்கப்பட்டவுடன்; செய்தி அறிய ஒரு பூங்காவில் அமர்ந்திருந்த ஆங்கிலேய ஆடவர், பெண்டிர், சிறார் அனைவரும் துள்ளிக் குதித்தும், ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு கூத்தாடியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது; பார்க்கோரைப் புல்லரிக்க வைத்தது.
இது இங்கிலாந்து நாட்டில்; இலண்டன் மாநகரில்!
அதேசமயம்; ஆவலை அகத்திலும் முகத்திலும் தேக்கிக் கொண்டு, செய்தி வரும் திசையில் செவிகளையும் விழிகளையும் செலுத்தியவண்ணம், பிரான்ஸ் நாட்டுப் பூங்காக்களில் அமர்ந்திருந்த மக்கள், ஒலிம்பிக் வாய்ப்பு, தங்கள் நாட்டுக்குக் கிடைக்காததைத் தங்கள் வீட்டுக்கே வந்த துக்கமாகக் கருதி, துவண்டுபோனதையும் காண நேர்ந்தது.
விளையாட்டுப் போட்டியிலேகூட தமது நாட்டுக்குச் சிறப்பு ஏற்பட வேண்டும், அதற்கான வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்பதிலே எத்துணை ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ளனர் அந்த மக்கள் என்பதைச் குறிப்பிடத்தான் “ஒரு நாடு சிரித்தது! ஒரு நாடு அழுதது” என்று முறையே இங்கிலாந்தையும் - பிரான்ஸ் நாட்டையும் வரிசைப்படுத்திக் காட்டினேன்.
கி.மு. 776ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் விளையாட்டின் தாயகம்; கிரேக்கம்தான்! அந்த கிரேக்க நாட்டின் சுதந்திரம் ரோமானியரால் பறிக்கப்பட்ட பிறகு, கி.பி. 393 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுவிட்டன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பியரி டி. கோபார்டின் எனும் பிரெஞ்சுக்காரரின் முயற்சியால் 1896 ஆம் ஆண்டுதான்
எதென்ஸ் நகரில் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் மறுமலர்ச்சி பெற்று நடைபெறத் தொடங்கின! இதனை; (1) An ancient Greek festival held at Olympia every four years, with athletic, literary, and musical competitions. (2) A modern international revival of this as a sports festival held every four years since 1896 in different venues என்று “ஆக்ஸ்போர்டு அகராதி” குறிப்பிடுகிறது.
ஒலிம்பிக் விழா முதலில் கிரீசில் உள்ள இயற்கை வளம் மிகுந்த ஒலிம்பியாவில் நடைபெற்றது. இது மதப் பண்டிகையாக நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியாவில் நடந்து வந்தது. இந்த விழாக் காலத்தில் கிரேக்க நகரங்களுக்கு இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும். அப்போது எந்த அரசர்களும் மற்ற அரசர்கள் மீது படையெடுப்பு நடத்தக் கூடாது.
இந்தப் போட்டியில் முதலில் பெரும்பாலும் ஓட்டப் பந்தயங்களே நடத்தப்பட்டன. ஏனெனில் எதிரி நாட்டு படையெடுப்பு பற்றிய தகவல்களை வீரர்கள் ஓடிச் சென்று தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை அப்போது நிலவியதால் இதற்கு முன்னோட்டமாக ஓட்டப்பந்தயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் வெல்பவர்களுக்கு வெற்றி வீரன் என்ற பட்டம் கிடைத்தது. அதோடு வெற்றி பெற்றவர்களுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட கத்தியால் வெட்டிய ஆலிவ் மரக்கிளை கிரீடமாக சூட்டப்பட்டது.
ஆரம்ப காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருந்தன. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் ஆடை அணியாமல் நிர்வாணமாக மட்டுமே பங்கேற்க முடியும். காலில் காலணிகள் அணியக் கூடாது. கிரேக்கர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன. பிற்காலத்தில் ரோமானியர்கள் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்க மட்டுமல்ல, அதனைப் பார்க்கக்கூட பெண்களுக்கு தடை போடப்பட்டு இருந்தது. அதனை மீறி எந்தப் பெண்ணாவது பார்த்தால் அவருக்கு மரண தண்டனைதான்.
நவீன கால ஒலிம்பிக் போட்டியில்; அது தொடங்கிய ஆண்டு, 14 நாடுகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்றவர்கள் 241 பேர். அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.
ஒலிம்பிக்கில் இந்தியா என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ஹாக்கி விளையாட்டுத்தான். 1908இல் ஹாக்கி அறிமுகமானது. 1928இல் இருந்து 1956 வரை இந்தியா ஆறு தங்கங்களை வென்று சாதித்தது. பின்னர் 1964, 1980ல் தங்கம் வென்று மொத்தம் 8 தங்கப் பதக்கங்களை வென்றது. வெள்ளி, வெண்கலம் 2.
ஒலிம்பிக் வரலாற்றில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா இதுவரை தனி நபர் போட்டிகளில் 4 பதக்கங்களையே வென்றுள்ளது. அவையும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களே! தனி நபர் பிரிவில் 1952இல் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ், 1996இல் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் லியாண்டர் பயஸ், 2000இல் சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸ் பளு தூக்கும் பிரிவு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில் பங்கேற்ற கர்ணம் மல்லேஸ்வரி 240 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்ற போது, போட்டி நடைபெறும் இடத்தில் மல்லேஸ்வரியுடன் இருந்தது, அவருடைய பயிற்சியாளர் மட்டும்தான். மற்ற இந்திய வீரர்களோ, உடன் சென்ற அதிகாரிகளோ அங்கில்லை. காரணம், இப்பிரிவில் நமக்கு எங்கே பதக்கம் கிடைக்கப் போகிறது என்ற எண்ணம்தான்.
2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா 35 தங்கம், 39 வெள்ளி, 29 வெண்கலம் உட்பட மொத்தம் 103 பதக்கங்களைப் பெற்று முதல் இடம் பெற்றது. சீனா 32 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலம் உட்பட 63 பதக்கங்களையும், ரஷ்யா 27 தங்கம், 27 வெள்ளி, 38 வெண்கலம் உட்பட 92 பதக்கங்களையும் பெற்றன. இந்தியா ஒரே ஒரு வெள்ளிப்
பதக்கத்தை மட்டுமே பெற்றதால் பதக்கப்பட்டியலில் 65வது இடத்தை அடைந்தது.
2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 17-8-2004 அன்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் பிரிவில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் போட்டியில் நமது இந்திய நாடு பெற்றுள்ள பதக்கப்பட்டியலைப் பார்க்கும்போது ‘பின்னணியில் நாம் முன்னணியில் இருக்கிறோம்’ என்று வருந்தத்தான் வேண்டியிருக்கிறது. இந்நிலை மாறிடவும், ஒலிம்பிக்கில் மட்டுமல்ல; உலகில் நடைபெறும் எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் நாம் ஒப்பற்றவர்களாக விளங்கிடவும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசே தீவிர முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.
யாரையாவது கோபமாகத் திட்டும்போதுகூட “ஏய்; விளையாடாதே” என்கிறோமே; விளையாட்டு என்பது அப்படியொரு வேண்டாத வார்த்தையாகவன்றோ ஆகிவிட்டது நமக்கு! எனவே விளையாட்டாகக்கூட விளையாட்டை வெறுக்கக் கூடாது என்பதை நாம் உணர்ந்து தெளிந்து பல போட்டிகளில் “இழந்த வெற்றிகள்” தரும் படிப்பினையாகக் கொள்வோம். அதுதான் இந்தியாவின் கௌரவம் காத்திட வழியாகும்.
ஒரு நாடு சிரித்தது, ஒரு நாடு அழுதது, உலகமே துயரத்தில் மூழ்கியது - என்று தொடங்கியிருந்தேன் - ஆம்; ஒலிம்பிக் போட்டியை 2012ஆம் ஆண்டில் நடத்தும் உரிமை இங்கிலாந்துக்குக் கிடைத்தது என்ற தகவல் கேட்டு தாங்கொணாத உற்சாகத்தில் அந்த நாட்டு மக்கள் இருந்திடும்போதுதான்; இந்தியாவில் அயோத்தியில் தீவிரவாதிகள் புகுந்ததும், அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதுமான நிகழ்ச்சி - தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் எனினும் தீவிரவாதம் தூண்டிவிடும் தீ பரவாதிருக்க வேண்டுமே என்ற தீராத கவலை நமக்கு!
இங்கிலாந்தில் ஒலிம்பிக்கை நடத்தப் போகிறோம் என்ற உவகையில் அவர்கள் இருக்கும்போதே, இலண்டன் மாநகரில் நான்கு முதல் ஏழு இடங்களில் குண்டுகள் வெடித்து ஏராளமானோர் பலியாயினர் - ஆயிரம் பேர் காயமுற்றனர் என்ற செய்தி! இதோ தமிழகத்தில் நாகர்கோவிலில் வடசேரி சந்தையில் நூற்றுக்கணக்கான கடைகள் தீயில் சாம்பலாகி ஆறு பேர் இறந்திருக்கிறார்கள்.
ஒலிம்பிக் ஒருபுறம் -
ஊரும் உலகமும்
தீராத வேதனையில்
ஆழ்ந்து கிடப்பது ஒருபுறம் -
இன்பமும் துன்பமும் இணைந்து வருவதே வாழ்க்கை என்பது மட்டுமல்ல; உலகின் பல நாடுகளின் வரலாறும் அப்படியேதான் அமைந்துவிடுகிறது. இனிய செய்திகளைக் கேட்டு இன்புறுவதற்கு ஒப்பாக திட நெஞ்சத்துடன் துன்பங்களைச் சந்திக்கவும் தோள் உயர்த்துவோம்.
9 - 7 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்