பொருளடக்கம்

14. வலிவும், பொலிவும்!

கட்டுரை 14 / 50

வலிவும், பொலிவும்!

Strength and Radiance!

அச்சுப் பக்கம் 66–67

scan 66 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

மூக்கு நுனிக்கு நேராக எதிரேயுள்ள சுவரில் அல்லது பலகையில் அல்லது திரைத் துணியில் ஓர் ஒளி வட்டம் அமைந்திருக்கவேண்டும். அது இருள் நடுவே முழுமதியாகவோ; அல்லது உதய காலத்து சூரியனாகவோ இருக்கலாம். அதற்கு முன்னால் கால்களை மடக்கிக் கொண்டு தரையிலோ, தொங்க விட்டுக் கொண்டு நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளலாம். இதில் முக்கியமாக கவனித்து பயிற்சி பெற வேண்டியது, கண் பார்வை ஒரே திக்கில் ஆடாமல், அசையாமல் செலுத்தப்பட்டு; அந்த ஒளி வட்டத்தை வைத்தகண் பெயர்க்காமல் பார்த்துக் கொண்டேயிருப்பதுதான். இதனை வாயை மூடிக்கொண்டு மெளனமாகவும் செய்யலாம்.

மனத்தை நிலைப்படுத்த இந்தப் பயிற்சி உதவுகிறது என்றும் இதனை தியானத்தில் ஒருவகையென்றும் கூறுகிற பயிற்சி ஆசிரியர் திரு. டி.கே.வி. தேசிகாச்சார் அவர்கள் இந்தத் தியானம் இன்னும் நேர்த்தியாக அமைந்திட; “நாராயண நமஹா!” என்று வாய் திறந்து உச்சரித்தல் நலம் என்று குறிப்பிட்ட போது; நெடில் எழுத்தில் தொடங்கும் “நாராயண” என்பது “நமஹா” என்று சொல்லி “சூரியனை” வணங்கும் நிலையை; ‘ஞ’ என்ற நெடில் எழுத்தில் தொடங்கும் “ஞாயிறு போற்றுதும்” என மாற்றி அமைத்துக் கொண்டாலும் ஒரே விளைவுதானே என்று நான் கேட்டு; பயிற்சியாளரும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டதால்; தியானப் பயிற்சியை மெளனமாகவும் அதைத் தொடர்ந்து “ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!” என்ற சிலப்பதிகார வரியை ஓங்கி உச்சரித்தும்தான் நாள்தோறும், பயிற்சியாளர் முன்னிலையில் இருவிதமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பேராசிரியர் அன்பழகனார் வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு; மிக முக்கியமாக இந்தத் தியானப் பயிற்சி பற்றிப் பேசினார். நாள்தோறும் ஒரு ஐந்து நிமிடமாவது கண்களை மூடிக் கொண்டு; சிந்தனையைச் சிதறவிடாமல் - கடவுளைப் பற்றிய ஒரே நினைவுடன் - இல்லையெனில் பெரியார், அண்ணா - என்றாவது ஒரே நினைவை மட்டும் நெஞ்சில் நிறுத்தி தியானத்தில் ஈடுபட்டால் மன அமைதிக்குப் பெரிதும் பயன்படும் என்று வலியுறுத்தினார்.

இந்த அறிவுரையை அப்போது நான் பின்பற்றி அந்தப் பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நேரமில்லாதது போல ஒரு சாக்கு - ஆனால் இப்போது நாள் தவறாமல் நடைப் பயிற்சி, யோகாப் பயிற்சியுடன், தியானப் பயிற்சியும் “ஞாயிறு போற்றுதும்” என்ற போற்றிப் பாடலுடன் மேற்கொள்கிறேன்.

சில சமயங்களில் பரபரப்புடன் பேசும்போது நாக்கு, திக்கிவிடுகிறதல்லவா - அதனைப் போக்கிக் கொள்ளக்கூட வல்லின “ற” என்ற எழுத்தும் அந்த எழுத்தொலியும் பயன்படுகிறது. ஆம்; “ற” என்ற எழுத்தொலியை நுனி நாக்கை உள்நாக்கு வரையில் மடித்து, ஒலித்தால் “றற” என்று அழுத்தம் திருத்தமான ஓசை எழும். இப்படிப் பலமுறை; ஒவ்வொரு முறையும் ஒரு தடவை எனத் தொடங்கி படிப்படியாக ஐந்து தடவை பயிற்சி செய்தால் நாக்குத் திக்குதல் மெல்ல மெல்ல நீங்கும் என்பது பலருடைய அனுபவம்.

எல்லாப் பயிற்சிகளையும் விட முக்கியமான பயிற்சி; “வைகறையில் துயிலெழுதல்” எனும் பயிற்சிதான். ‘அவர் காலையில் ஒன்றரை மணி வரையில் தூங்குவார்’ - ‘பத்து மணிக்குத்தான் இவருக்குப் பொழுதே விடியும்’ - என்பதெல்லாம் இன்றைய நாகரிக வாக்கியங்களாக அமைந்தொழிப்பதை அறிய முடிகிறது. என்றாவது ஒருநாள் - முதல் நாளிரவு தூக்கமின்மையால் மறுநாள் அயர்ந்து தூங்கிவிடுவது என்பது தவறல்ல; ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் அதுவே

நாள்தோறும் வழக்கமாகி; அவர்கள் “உதயசூரியனை” வாக்குச் சாவடியில் வைக்கப்படும் வேட்பாளர் சின்னங்களில் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது என்றால் அது நிச்சயமாக உடல் நலத்துக்கு ஏற்றதல்ல.

எனவே நடைப்பயிற்சி மூலம் முக்கியமாக உடலின் எடையைக் குறைப்பது - மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசப் பைகளை முறையாக இயக்கச் செய்வது - குருதியோட்டத்தைச் சீராக்கிக் கொள்வது - அதன் அடிப்படையில் இருதயத்துக்குப் பாதுகாப்பு உருவாக்குவது - யோகாப் பயிற்சி மூலம் எலும்புகள், நரம்புகளுக்கு வலுவூட்டுவது - தியானப் பயிற்சி மூலம் மன அமைதி காண்பது; இவை போன்றவை வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை உணர்ந்து; எத்தனையோ துறைகள் பற்றிய நூல்களைப் படிக்கின்ற நாம்; உடல் நலத்துறை குறித்து விளக்கமளிக்கின்ற நூல்களையும் படிக்கின்ற ஆர்வத்தைப் பெறுதல் வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நோயற்ற மக்கள் - வலிவுடைய மக்கள் கொண்ட ஒரு சமுதாயமே நாட்டின் பாதுகாப்பு அரணாகவும் அமைய முடியும். அதற்கு அடியெடுத்துக் கொடுக்கும் முயற்சியாகவாவது இக்கட்டுரை இருக்குமானால் இதனை எழுதியதின் பயனை அடைந்தவனாவேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத எத்தனையோ நல்ல வழிமுறைகள் வாழ்வுக்கு வலிவும் பொலிவும் சேர்ப்பவை உள்ளன. அவற்றையும் தேடிப் பிடித்து பயன்படுத்திக் கொள்ள இஃதோர் தூண்டுதலாகட்டும்.

8 - 7 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்