கட்டுரை 13 / 50
மிகுதிக்கண்...
When the Limit Is Crossed...
அச்சுப் பக்கம் 62–64
scan 62 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அளவளாவுதல் - அந்தரங்கங்களைப் பேசிக் கொள்ளுதல் - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுதல் - அதைப் பகிர்ந்து கொள்ளுதல் - மகிழ்ச்சியிலும், துன்ப துயரங்களிலும் பங்கு கொண்டு ஆறுதல் வழங்குதல் ஆறுதல் பெறுதல் - படிப்பில் விளையாட்டில் ஈடுபடுதல் -
இவைகளும், இவற்றைப் போன்றவைகளும் “நட்பு கொள்ளுதல்” - “நண்பர்களாயிருத்தல்” என்ற செயல் அடிப்படையில் நடப்பவை.
நட்பைப் போன்ற அரிய ஒன்று இல்லையென்றும், அதைப் போல் பாதுகாப்புக்கு ஏற்ற ஒன்றைக் காண்பது எளிதல்ல என்றும் பழகப் பழக இன்பம் தரக்கூடியதென்றும் ஒத்த மனஉணர்வில் உற்பத்தியாகக் கூடியதென்றும் நட்பினைப் பற்றி நயம்பட உரைக்கும் அய்யன் வள்ளுவரே,
நட்பு என்பது நண்பர்கள் சிரித்து மகிழ்வதற்காக அல்ல என்றுரைத்து; அவர்களில் யாரேனும் நல்வழி தவறி அல்வழி செல்வாராயின் இடித்துரைத்துத் திருத்திடப் பயன்படக் கூடியதென்றும் - நட்பின் தலையாய இலக்கணத்தைக் கூறுகிறார் என்றே பழைய உரைகள் பலவும் விளக்குகின்றன.
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு”
எனும் இக்குறளில் கூறப்படும் “மிகுதிக்கண்” என்பது “நல்வழி தவறுதல்” என்ற பொருளில் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில்; ‘நகுதல்’ எனப்படும் சிரித்து மகிழ்ந்து பழகுவதே எல்லை தாண்டிவிடக் கூடாது என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளப்படலாம் அல்லவா?
என் நண்பர் ஒருவர் நல்லவர் - அன்பிற் சிறந்தவரும்கூட - நட்புக்கினியவர். அதேபோல என்னுடன் இளமை முதல் பழகிய மருத்துவ (டாக்டர்) நண்பர் ஒருவர் வெளியூரில் இருந்தார். அந்த ஊருக்கு நானும் நான் முதலில் குறிப்பிட்ட நண்பரும் சென்றிருந்தோம். மருத்துவ நண்பர் அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். சென்றோம். நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்து பல கதைகள் பேசினோம். மருத்துவ நண்பரிடம் சிகிச்சைக்கு வந்த சில பிரமுகர்கள் கூட்டத்தில் அமர்ந்து தங்கள் பிரச்சினைகளைக் கூறி உடற்பரிசோதனை செய்துகொண்டு மருந்து எழுதி வாங்கிக் கொண்டு போயினர். வந்தவர்களின் நோய் தீர்க்கும் பணியையும் எங்களுடன் உரையாடுவதையும் அந்த மருத்துவர் ஒருசேர நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் குறிப்பிட்ட நட்புக்கினியவர்; மெல்ல எழுந்து மருத்துவ நண்பரின் மேசையருகே சென்றார். மேசை மீதிருந்த மருத்துவ நண்பருக்குரிய “இதயத் துடிப்பு அறியும் கருவி” (ஸ்டெதஸ் கோப்)யைக் கையில் எடுத்தார். எடுத்ததுடன் நிற்கவில்லை என் நண்பர்.
சிகிச்சைபெற வந்து அமர்ந்திருந்த அத்தனை பேருக்கு மத்தியில் அந்தத் துடிப்பறியும் கருவியை, மருத்துவ நண்பரின் மார்பில் வைத்து, கருவியின் முனையைத் காதில் வைத்துக் கொண்டு, கை நாடியும் பிடித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்.
மருத்துவ நண்பருக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை; “ஓய்! நாகரிகமாக நடந்து கொள்ளும்!” என்று சொன்னபடி அந்தக் கருவியைப் பிடுங்கி மேசையில் வேகமாகப் போட்டுவிட்டார்.
சிகிச்சைக்கு வந்த பிரமுகர்கள் சிரித்துவிட்டார்கள் என்றாலும்; அந்த நிகழ்ச்சியினால் வாயடைத்துப் போனார்கள்.
பிறகு என் நட்புக்கினிய நண்பரிடம் நான் சற்றுக் கோபமாக; “ஏனய்யா; எதிலும் அளவு வேண்டாமா? என்னதான் நண்பர் என்றாலும் இவ்வாறு செய்யலாமா? ஒருவர் தொழிலில் இப்படிக் குறுக்கிடுவது அழகா?” என்று கேட்டவுடன் இவர், அவர் கையைப்பிடித்துக் கொண்டு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டு என்னோடு புறப்பட்டார்.
அதனால் நகுதற் பொருட்டுத்தான் நட்பு என்றில்லாமல் - அதுவும் எல்லை கடந்து விடுவதாயின் அதனை இடித்துரைத்து திருத்த வேண்டும் என்ற பொருளிலும் அய்யன் வள்ளுவர் “மிகுதிக்கண்” என்று குறிப்பாகக் கூறியிருப்பார் என்று நான் கருத நேரிட்டது.
நண்பர்கள் சிரித்து மகிழ்ந்து வேடிக்கை பேசி விளையாடுவதும் அளவோடு இருக்கவேண்டும்; அதில் ஒருவர் அளவு கடந்தால் மற்றொருவர் திருத்தித் தடுத்திட வேண்டும். அதுதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.
சில நண்பர்கள், உரிமையுடன் பழகுவதாகக் கருதிக்கொண்டு அப்பாவித்தனமாக எதையாவது செய்து வீண் வெறுப்புக்கு ஆளாகிவிடுவார்கள். அதற்கும் உதாரணமாக என் நட்புக்கினியவராக இருந்தவரையே மீண்டும் நான் குறிப்பிட வேண்டியுள்ளது.
தமிழகத்து மக்களின் உள்ளத்தில் தனியிடம் பெற்ற திரைப்படத் தயாரிப்புக்கூடம் ஒன்று சென்னையில் இப்போதும் உள்ளது. நான் கதை வசனம் எழுதிய படங்கள், பாடல் எழுதிய படங்கள் அங்கே தயாரிக்கப்பட்டன. அந்தச் சமயங்களில் நான் அங்கு போவதும் திரைப்படக் கலைஞர்களுடன் உரையாடி மகிழ்வதும் உண்டு. அந்தக் கலைக்கூடத்தில் இசையரங்கம் ஒன்றும் உண்டு. இசையமைப்பாளராகப் புகழ் பெற்ற ஒருவர் அந்த அரங்கத்தை நிர்வகித்தார். ஒருநாள் என் நட்புக்கினிய நண்பருடன் அந்த இசையரங்கிற்கு சென்றிருந்தேன்.
இசையமைப்பாளரும் நானும், திரைக் கலைஞர்களும் பல செய்திகள் குறித்து உரையாடி மகிழ்ந்தவேளையில்; இசையமைப்பாளர் ஒரு பாட்டுக்கு “மெட்டு” அமைக்க ஆர்மோனியக் கட்டைகளில் தனது விரல்களைப் பதித்தார். சில நிமிடங்களில் எனது இனிய நண்பர், அவர் அருகே அமர்ந்து ‘ஆர்மோனியப் பெட்டி’யைத் தன்னருகே இழுத்து வைத்துக் கொண்டு “எனக்கு என்ன கட்டை?” என்று ஆர்வம் மிகுந்திடக் கேட்கலானார். அது பொதுவாக இசைவாணர்களுக்கு ஆத்திர மூட்டக்கூடிய ஒரு செயல். அவர்களில் மிகப் பலர் இசையை “தெய்வமாகக்” கருதி அதற்கு மரியாதை செய்பவர்கள். இந்த நிலையில் பல கலைஞர்களும் வீற்றிருந்த அந்தக் கூடத்தில்; இசைக் கருவியான ஆர்மோனியத்தைத் தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு, “தனக்கு என்ன கட்டை?” என்று வேடிக்கை விளையாட்டாகக் கேட்டது எல்லோரையும் வேதனைப்படுத்திவிட்டது என்பதை அவர்கள் முகக் குறிப்பால் உணர்ந்து கொண்ட நான் “உமக்கு; என்ன கட்டை? புத்திதான் கட்டை” என்று விளையாட்டுப் போலவே சொல்ல, அனைவரும் என் பதிலைக் கேட்டு சிரித்து மகிழ்ந்து; என் நண்பரின் செயலைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
“தனக்கு என்ன கட்டை?” என்பதோடு விட்டிருந்தால் ஒன்றுமில்லை. இசையமைப்பாளரிடமிருந்து ஆர்மோனியப் பெட்டியை இழுத்து வைத்துக் கொண்டு அவ்வாறு கேட்டது “மிகுதிக்கண்” என்ற வேண்டாத செயலுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டதல்லவா? எனவே “அளவு கடப்பது; வேண்டாத செயல்” எனப்படுகிறது.
1 - 7 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்