பொருளடக்கம்

12. அழுக்காறு

கட்டுரை 12 / 50

அழுக்காறு

Azhukkaaru

அச்சுப் பக்கம் 59–60

scan 59 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது”

பொறாமைக் குணம் கொண்டவர்களை வீழ்த்துவதற்கு வேறு பகையே வேண்டா; அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்!

அழுக்காறு ஊரின் நடுவே ஓடுவதற்கோ, அல்லது ஊருக்குள்ளே ஒரு பகுதியில் தேங்கிப் பெருகுவதற்கோ; அறிவுடையோர் அனுமதிக்கமாட்டார்கள்.

அழுக்காற்றின் நீரைக் குடிப்பதும் - அந்த நீரில் குளிப்பதும் - அழுக்காற்றிலிருந்து கிளம்பும் நாற்றம், காற்றில் கலந்து ஊருக்குள் நுழைவதும், மக்களின் நலத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கும் என்பதால்

அது உடலுக்கும் உயிருக்கும் தீமையென்று ஒதுக்கி வைக்கிறோம். ஒதுங்கிச் சென்று விடுகிறோம்.

பொறாமைக் குணமும், அழுக்காறு எனப்படுகிறது. அந்தக் குணம் இல்லாத பண்பு ஒருவர்க்கு வாய்க்குமானால் அதற்குமேலான பேறு எதுவும் இருக்க முடியாது என்கிறார் அய்யன் வள்ளுவர்.

ஆறு என்பதற்கு வழியென்றும் பொருள் உண்டு - நதி என்றும் பொருள் உண்டு - ஆற்றுப்படுத்தல் என்பது; வழிப்படுத்தலையும், போக்குதலையும் குறிக்கக்கூடியது.

இவற்றில் எதுவும் அழுக்குடன் சேர்தல்கூடாது. அழுக்கும் இவற்றுடன் சேர்ந்து, அழுக்காறு என்றோ; அழுக்கு வழியென்றோ; அழுக்கு நதியென்றோ ஆகிவிடும்போதுதான் அது நாம் இறங்கிப் பார்க்கவே முயற்சி செய்யக்கூடாத “தீயநெறி” என்று தெளிவாகிறது.

ஊருக்குள் அழுக்காறு எனில்; அது அந்த ஊரின் ஆரோக்கியத்திற்குப் பெருந்தீமை என்பது போல்; அழுக்காறு எனும் பொறாமைக் குணம் மனித உள்ளத்தையே மாசுபடுத்தக் கூடியது.

பொறாமை, எப்போது ஏற்படுகிறது?

நமக்குக் கிடைக்காத ஒன்று பிறருக்குக் கிடைக்கும்போது ஏற்படுகிறது! நமக்குக் கிடைத்திருப்பதைவிட சற்று உயர்வானதாக ஒன்று பிறருக்கு கிடைக்கும்போது பொறாமைக் குணம் வளைத்துப்போட்டு வாட்டுகிறது! அந்தப் பிறர்; நண்பராகவே இருப்பினும் அவருக்கு விதிவிலக்கு அளிக்காமல்; பொறாமை தனது செயல்பாட்டில் கண்ணுங் கருத்துமாக இருந்து கடமையாற்றுகிறது.

ஒரே துறையில் இருப்போரிடம் இந்தப் பொறாமை நோய் எளிதாகப் பற்றிக்கொள்ளும் இயல்பு கொண்டதாய் இருக்கிறது - இசைத்துறை, கலைத் துறை, எழுத்துத்துறை, பேச்சுத்துறை, அரசு அலுவலகத்துறை, அறிவு ஆராய்ச்சித்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை, அரசியல்துறை, பொருளாதாரத்துறை, சமுதாயத்துறை இன்னோரன்ன துறைகளில் ஒரே துறையில் இருப்போரிடையேதான் இந்நோய் நீக்கமற நிறைந்திருப்பதை அறிய முடிகிறது. அவ்வளவு ஏன்; ஒரே கொள்கை - ஒரே குறிக்கோள் எனவரைத்து ஒரே கொடியின் நிழலில் அணிவகுப்போரிடையே அந்த அணியின் எதிர் அணியினரால்கூட ஏற்படுத்த முடியாத பிளவை; அனுமதியின்றி

நுழையும் அழுக்காறு எனும் பாவியால் ஏற்படுத்திவிட முடியும் என்கிறது குறள்! கணவன் மனைவி உறவிலேகூட இதனால் கலாம் விளைந்த நிகழ்ச்சிகளும் உண்டு.

சந்திர மண்டலத்திற்குச் சென்று தடம் பதித்து வரும் அமெரிக்க நாட்டு விஞ்ஞானியைப் போற்றிப் புகழ்கிறோம்; அதைப் போன்றொரு சாதனையை நமது ஊரில் அடுத்த தெருவில் வசிக்கும் சந்திரன் என்பவர் சாதித்துக் காட்டினால் அவரைப் புகழ்வதற்கு முன்பு பொறாமை முந்திக்கொண்டு விடுகிறது. அவரைப் போற்றிப் பாராட்டுவதுகூட வேண்டாம்; அவர் மீது பொறாமை கொள்ளாமலாவது இருக்க முடிகிறதா?

இதிலிருந்து தெரிவது என்ன? பக்கத்தில் இருந்து நமக்குப் பழக்கமானவர், பல்கலை அறிவாளியாக இருப்பினும், பக்கத்தில் இருக்கிறார் என்பதே பலவீனமாகிவிடுகிறது.

வானில் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியைக் காண்பதில் காட்டும் ஆர்வம்; வண்ணச் சிறகுகளுடன் நம் வீட்டுக் கொல்லையில் நடமாடிக் கொண்டிருக்கும் சேவலின் மீது செல்வதில்லையல்லவா?

இப்படியும் நம்மவர் திறனுக்கும் சிறப்புக்கும் நன்மதிப்புக் குறைக்கப்படுகின்ற நிலைகண்டு நெஞ்சு பதைத்திடும் வேளையில்; அனுமதியின்றி நுழையும் ‘அழுக்காறு’ எனும் பாவிக்கும் இடம் அளிப்பது என்பது; ‘கொள்ளை நோய்’க்கும் விருந்து வைப்பது போலத்தான் ஆகிவிடும்.

பிறருக்கு வரும் நலமும், வளமும், புகழும், பாராட்டும், அனைத்தும் நமக்கு வந்ததாகக் கருதி மகிழ்வதே; அக்கொள்ளை நோய் நம் எல்லைப் பக்கமே எட்டிப்பார்க்க முடியாத தடுப்பு முறையாக அமையும்.

10 - 6 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்