கட்டுரை 11 / 50
வெற்றி தோல்வி!
Victory and Defeat!
அச்சுப் பக்கம் 56–57
scan 56 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சங்க இலக்கியப் பூக்காடுகளில், சரித்திர ஏடுகளில் வாள் சுழற்றி போர்முனைகளில் வெற்றிகளைக் குவித்த வீரத்தமிழனையும், வெற்றி வாய்ப்பினை இழந்த மானமிகு தமிழனையும் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். அந்த இருவரில் என்னை மிகவும் கவர்ந்தவன் தோல்வியில் துவளாது மானங்காத்த தமிழனேதான்.
மண்ணையிழந்தான், மாளிகையிழந்தான், மாட்டிக் கொண்டான் சிறைச்சாலையில் என்ற நிலையிலும் தவித்த வாய்க்குத் தாகம் தீர்த்திடத் தண்ணீர், தக்க நேரத்தில் சிறையில் தந்திடவில்லையென்பதற்காகத் தனது மானமே போயிற்றென்று செத்துப் போனானே ‘சேரமான் கணைக்கால் இரும்பொறை’ என்ற தமிழன்; எளிதில் உச்சரிக்க முடியாத அந்தப் பெயரை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டு அவனைப் போற்றுவதற்குக் காரணம்; தோல்வியினால் அவன் துவண்டுவிடவில்லை என்பதும், மானத்தை உயிரினும் மேலாக மதித்தான் என்பதும்தானே!
வெள்ளாட்டு மந்தைபோல் கட்டுப்பாட்டு உணர்வுடன் வீரர்களின் பட்டாளம் களம் நோக்கிச் சென்றபொழுது அந்தப் படைவரிசையில் எல்லா வீரர்களையும்போல ஒருவனாக இருந்தபோதிலும்; தன் மகனுக்கு மட்டும் சற்று அதிகமாகவே தேறல் எனும் பானத்தை மன்னன் வழங்கினானே; அந்தப் போரில் உயிர்விட்டோர் வரிசையில் ஒருவனாகி, பாடையில் படுத்து மன்னனின் பாராட்டைப் பெறாமல் அந்த மகன் இன்னமும்
உயிரோடு இருக்கிறானேயென்று ஒரு தாய் புலம்புவதாக்க; கவித்தாய் ஒளவை கண்கலங்குகிறாள்; அந்த வீரத்தாயை நினைத்தால் இப்போதும் என் விழிகளை நீர்த்திரை மறைக்கிறது.
வெற்றிபெற்று வெங்கொடுமைச் சாக்காட்டுக் களத்தில் வாகை சூடி வரும் மகனைக் காண்பதைக் காட்டிலும்; அவன் விழுப்புண் பெற்று போரில் மாண்டோரில் ஒருவனாகச் சவ ஊர்வலத்தில் வருவதையே பெரிதும் விரும்பும் அந்தத் தமிழ்ப் பெருமாட்டியை அல்லவா வணங்கத் தோன்றுகிறது நமக்கு!
“வெள்ளை வெள்ளாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே” ‘புறநானூறு’ - (ஒளவையார்) (செச்சை = கிடாய் மண்டை = தேறல் எனும் மது கால் கழி கட்டில் = காலில்லாத கட்டில் (பாடை)
மனித உறுப்புக்களான கால், கை, கண், மூக்கு, செவி என்பவை இல்லாத வெறும் சதைப்பிண்டமாக பிறந்தாலும்கூட; அந்த உடலில் போரில் பட்ட புண் இருப்பதுதான் வீர மரபின் இலக்கணம் என விதி வகுத்து, அவ்வாறே வாள் கொண்டு கீறி புண் செய்து, அதன் பிறகே மண்ணுக்குச் செலுத்திடும் தமிழ் மரபின் தன்மான வீர உணர்வு காட்டும் செயல் நம் மெய்சிலிர்க்க வைக்கிறது!
இகழ்ந்துரைத்தனர் தமிழ் மன்னர்களை என்பதற்காக; இமயம் வரையில் படை கொண்டு சென்று குயிலாலுவம் எனும் இடத்தில் கனக விசயர் எனும் ஆரிய மன்னர்களை வென்று; அவர் தலையில் கண்ணகி சிலைக்கான கல் தூக்கி வைத்து வெற்றி முரசு கொட்டி வந்த சேரன் செங்குட்டுவனைவிட;
தோல்வியால் துவண்டுவிடாமல் மானங்காத்த மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை நம் மனத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறான்.
அவனைவிட மேலான இடத்தைப்பெற வேண்டியவன் தன் மகன் என ஒரு தாய் கருதுகிற காரணத்தினால்தான்; படை வரிசையில் பல வீரர்கள் இருந்தபோதிலும், அவளுடைய மகனுக்கு அந்த மன்னனே முன்வந்து தேறல் பானம் அவன் கையால் அளித்ததை நினைவிற்கொண்டு; அந்த மகன், போர்க்களத்தில் இன்னமும் விழுப்புண் பெற்று மண்ணின் பெருமைகாத்து மடிந்திட முன்வரவில்லையே என்று கலங்குவதாக ஒளவைக் கிழவி புலம்புவது; புறநானூறு பாடலாகிறது!
பாராள்வோன் கையால் பானம் பெற்றதற்கே தன் மகன் போரில் வீரமரணம் அடைய வேண்டுமென விரும்புகிற தாய்; ஒருவேளை மகன் மன்னனிடம் பலன்களும், பதவிகளும் பெற்றிருந்தால் அவனிடம் இன்னும் என்ன எதிர்பார்ப்பாளோ?
எனவே, அந்நாள் இலக்கியங்கள், வரலாறுகள் மட்டுமின்றி இந்நாளிலும் அரசியல், சமுதாய, பொது வாழ்வில் ஈடுபடுவோர் எவராயினும்; அவர்கள் எப்படியாவது தமது குறிக்கோளில் வெற்றிபெற வேண்டும் எனக் குறுக்கு வழி தேடாமல் - மான உணர்வு மங்காமல் பெறுகின்ற தோல்வியும்; விழுப்புண் பெற்று அடைகின்ற வீழ்ச்சியும்கூட வெற்றிப் பட்டியலில்தான் வைக்கப்படும் என மன நிறைவுகொள்ள வேண்டும். அதுதான் மறுக்க முடியாத உண்மையும்கூட! அந்த உண்மைக்கு ஒரு நாள் உயர்வு உண்டு; உறுதியாக உண்டு!
8 - 6 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்