பொருளடக்கம்

10. மனிதனும் மறுபிறவியும்

கட்டுரை 10 / 50

மனிதனும் மறுபிறவியும்

Man and Rebirth

அச்சுப் பக்கம் 52–54

scan 52 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“மனிதன் தானாகப் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன், என்ற தந்தை பெரியாரின் கருத்து, சிந்தனையைச் சிலிர்க்க வைக்கக் கூடியதாகும். தந்தை பெரியாரின் இந்தக் கருத்துக்கு ஒரு வடிவமாக நம்மிடையே திகழக் கூடியவர் கலைஞர் அவர்கள்”

என்று இந்த ஆண்டு என் பிறந்த நாளுக்கான ‘முரசொலி’ மலரில் ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் - அதனையொட்டி தீட்டப்படுவதே; இன்றைய எழுத்தோவியம்:-

அடுத்த பிறவியில் நான் இப்படிப் பிறக்க வேண்டுமென்றும் - எப்படிப் பிறந்துவிடக் கூடாதென்றும் - மனத்தை அழுத்தும் சுமைக்கு ஏற்றவாறும் அல்லது வாழ்வில் நுகரும் சுவைக்குத் தக்கவாறும் கூறுவோர் உண்டு - கற்பனைக் கதைகளில்; கடும் புராணிகக் கருத்து மலிந்த நூல்களில்; காணமுடியும் இவற்றை!

“காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக!”

என்று அன்னைத் தமிழாள் வேண்டியதற்கிணங்க,

“பிறந்திட்டான் நம் அண்ணனாக; அறிவு மன்னனாக,

பொதிகை மலைத் தென்றலாய் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்ப் பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய் வந்துதித்தான் அண்ணன் - கீழ் வானுதித்த கதிர் போல -”

என்று நான் பாடிய இரங்கற் கவிதாஞ்சலியில் தமிழன்னை வேண்டுகோளையேற்று, வள்ளுவர், அண்ணாவாகப் பிறந்தார் காஞ்சியில் என்பதுகூட கருத்தை வலியுறுத்துவதற்காகக் கையாளப்பட்ட கவிதை அலங்காரக் கற்பனையே தவிர; விஞ்ஞானப் பகுத்தறிவு விரும்பியேற்றுக் கொள்ளக்கூடிய உண்மையல்ல என்பதை அகழ்ந்து சிந்தித்தால் அறிய முடியும்.

கவிதையெழிலுக்காகவும் கருத்தை நினைவில் நிற்குமாறு வலுப்படுத்துவதற்காகவும் எழுதியது என்று; என்னைப்போல வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத படைப்பாளிகள் பலர் மறுபிறவியெனும் மூடநம்பிக்கைக்குத் தங்களை அறியாமலே முத்திரை குத்தியிருக்கிறார்கள்.

* “அடுத்த பிறவியில் நீ நரியாகப் பிறப்பாய்” எனச் சாபமிடுவது -

* “அந்தச் சாபம், யாரால் எந்தக் காலத்தில் விமோசனம் பெறும்?” என்று ஆரூடம் சொல்வது -

* “பார்வதி தேவியே! நீ அடுத்த ஜென்மத்தில் மீனவப் பெண்ணாகப் பிறந்து, மீனவனாகப் பிறக்கும் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்க!” என்பதும் அதற்கு,

பார்வதியும் தலையாட்டி சம்மதிப்பதும் -

அவ்வாறே கதை நடந்தது என்பதும் -

நமது பழைய புராணங்கள்!

* “மரணமடைந்தோர்க்கு ஆண்டுதோறும் திதி, திவசம் என்ற பெயரால் புரோகிதர் மூலம், அரிசி, காய்கறிகள், காசு பண தட்சணையெல்லாம் அனுப்புகிறோமே; இறந்தோர்தான்; மறு ஜென்மம் எடுத்த- திருப்பாரே; அங்கனமாயின் அவருக்கு புரோகித மந்திரப்படி அனுப்பிய அரிசி, பருப்பு, காய்கறி, பணமெல்லாம் எங்கே போய்ச் சேரும்? யார் வாங்கிடுவர்?”

இந்தக் கேள்விகளை நம் உள்ளங்களில் எழுப்பிக் கேட்க வைத்த பெரியார்தான்; மனிதனின் பிறப்பு அவனது வாழ்வு இவற்றைப் பற்றி குறள் வடிவில் ஒரு சிந்தனைச் சிற்பத்தை நம் இதயத்தில் செதுக்கி இருக்கிறார்.

“மனிதன், தானாகப் பிறக்கவில்லை. அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்”

எத்துணை உயரம் - உயரம் - உயரமான - உயர்ந்த தத்துவம் - ஒப்பற்ற தத்துவம்!

“நான் இன்னாருடைய கர்ப்பத்தில் உதித்து இவ்வாறு பிறக்கப் போகிறேன்”

என்பதெல்லாம் - புராணீகம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டுக்கதை - கற்பனையூற்று - கவிதைக்குப் பூசும் தங்க முலாம்.

மனிதன், தானாகத் திட்டமிட்டுப் பிறப்பதாக இருந்தால்; மாடாகப் பிறப்பதா? மந்தியாகப் பிறப்பதா? மயிலாகப் பிறப்பதா? குயிலாகப் பிறப்பதா? அல்லது மறுபடியும் மனிதனாகவே பிறப்பதா என்பதற்கு விடை கண்டு, அவ்வாறு பிறக்கக்கூடும்.

மனிதன், தானாகப் பிறக்கவில்லையென்று பெரியார் ஒரேயடியாக அடித்து, அது இயற்கையின் தொடர் விளைவு ஆகிவிடுகிறது என்பதை அறிவுறுத்துகிறார் என்றால்; எந்த உயிரின் உற்பத்திக்காகவும் உருவாகும் கருவை வளர்க்கவும் அழிக்கவும் உருமாற்றவும்தான் மனிதன் கற்றிருக்கிறானேயல்லாமல், விதையின்றி எப்படி மரம் வந்து விடாதோ; அதுபோலவே சினையின்றி மனிதன், தானாக வெட்ட வெளியில் அந்தரத்தில் தோன்றும் அவதாரமாக வெளிப்பட்டுவிடவில்லை; ஆம் அப்படி ஒரு மனிதன்கூட தானாகப் பிறக்கவில்லை.

பிறந்த மனிதன் எவனுக்கும்; “இப்படிப் பிறக்கப் போகிறோம்” என்று முன்கூட்டியே தெரிந்ததில்லை - அதனால் தான் தானாகப் பிறக்காதவனுக்கு - எப்படிப் பிறக்கப் போகிறோம் என்று தெரிந்து பிறக்காதவனுக்கு - பிறந்த பிறகு தனக்காக வாழ வேண்டுமென்று தன்னலம் வரக்கூடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கண்டிப்பு எனலாம்.

பிறந்ததே உன் செயல் அல்ல; அது இயற்கைச் சக்கரத்தின் சுழற்சியில் நடைபெற்ற ஒன்று என்கிறபோது, நீ மற்றவர் செயல்களுக்கும் சேர்த்து உரிமை கொண்டாடி, தன்னலம் நாடுவது வேடிக்கையாக இல்லையா? பிறப்பு எனும் இயற்கையளித்த விளைவுக்குத் தன்னலப்பற்று என்பது கூடவேகூடாது என்பதே இதன் கருத்து!

6-6-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்