பொருளடக்கம்

9. விண்ணைத் தொட்டு மண்ணில் புதைவதா?

கட்டுரை 9 / 50

விண்ணைத் தொட்டு மண்ணில் புதைவதா?

Touching the Sky, Buried in the Earth?

அச்சுப் பக்கம் 49–50

scan 49 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

உலகம் எவ்வளவோ திருந்திவிட்டது என்கிறோம் - நாடு நாகரிகத்தை நாடி நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனப் பெருமிதம் கொள்கிறோம் - இன்னமும் இன்னமும் முன்னேற வேண்டுமென விரும்புகிறோம் - நாமும் வாழ்ந்திருந்து, பார்த்து இன்புறக் கூடிய வாய்ப்பு இருக்கிற அளவுக்கு நிகழ்காலம் நீண்டு கொண்டே போகப் போவதில்லை என்பது தெரிந்திருந்தும் - எதிர்காலம் என்பதுகூட நம்மைப் பொருத்தவரையில் அவசரமாக முடிகிற காலமா? அல்லது ஆர அமர அமைதியாக அதிக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற காலமா? என்பதைப் பற்றி அறியாமலோ அல்லது அதுபற்றிக் கவலைப்படாமலோ மேலும் மேலும் மனித சமுதாயத்தில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு அதன் உச்சியில் ஏறி நின்று உலகத்தைக் காணவேண்டும், கண்டு மகிழ வேண்டுமென விழைகிறோம்.

விஞ்ஞானப் புதுமைகளால் விளைந்திடும் வளர்ச்சிகளும் மகிழ்ச்சியளிக்கின்றன - விஞ்ஞான வித்தகத்தினாலும் கட்டுப்படுத்த முடியாத இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் வீழ்ச்சிகளும் எஞ்சியிருப்போர் இதயங்களை நெகிழ்ச்சியுறச் செய்கின்றன - வராமலே தடுக்க முடியாவிடினும், வந்துவிடுவதற்கு முன்பு தற்காப்பு தேடிக் கொள்ளவும் - வந்தபின் விளைந்திடும் பாதிப்புகளுக்குப் பரிகாரம் காணவும் - அறிவுலகம் முழுமையும் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து அயராது சிந்தனை செய்து கொண்டிருக்கிறது - செயல்படவும் துடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியெல்லாம் மனித சமுதாயம் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாக விரிந்து பரந்து செழித்துக் குலுங்கும்போதுதான்; அந்தச் சோலையில் குறுக்கும் நெடுக்குமாகக் குழி பறித்துக் கொண்டு தேங்கி நிற்கும் கழிவுநீர்க் குட்டைகளாகவும்; அந்தக் குட்டைகளும் குருதிப் புனலை அள்ளித் தெளித்த நிலையிலும் காணப்படுகின்றன.

உலகின் எல்லா நாடுகளிலும், எல்லாப் பகுதிகளிலும் இந்தக் குட்டைகளையும் குருதி ஊற்றுக்களையும் நமது மானிட சமுதாயத்தினிடையே காணும் வேதனை இருக்கத்தான் செய்கிறது.

அந்த வேதனைகளும் வெட்கக்கேடான நிகழ்வுகளும் வெளிநாட்டுச் செய்திகளாக மட்டுமல்ல; நமது இந்தியத் திருநாட்டுச் செய்தியாகவும் வரத் தவறுவதில்லை. எத்தனையோ நிகழ்ச்சிகள் - செய்திகள் - நான் தொடங்கியுள்ள பீடிகைக்கும், இந்தச் செய்திக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கத் தோன்றும். தொடர்பு இல்லைதான் - ஆம்; பீடிகைக்கும் அதையொட்டிச் சொல்வதாக நான் கருதும் நிகழ்ச்சிக்கும் தொடர்புபடுத்த முடியாதுதான்! ஆனால் ஒன்று; உலகில் இயற்கையுடன் போராடி அற்புதங்களை ஆற்றிட முனைகிற மனிதர்கள்; அதற்கேற்ற அறிவியல் முன்னேற்றம் - ஆய்வுகள் - ஆராய்ச்சிகள் - கலாச்சார மேம்பாடுகள் - சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் - அதற்குரிய செயல்கள் என இப்படிப் பல்வேறு துறைகளிலும் பரிணமிக்க வேண்டுமென முனைகிற கால கட்டத்தில்; அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக; நடந்துள்ளதும் இதோ, இந்திய நாட்டு விடுதலைக்காக இன்னுயிரை ஈந்த இணையற்ற வீரன் பகத்சிங் உலவிய பஞ்சாப் மண்ணில், இரக்கமற்றதும் - பண்பாட்டைப் புதைத்துவிட்டதும் - இருதயத்தை தூக்கி எங்கேயோ வீசிவிட்டது போன்றதுமான ஒரு நிகழ்ச்சி நடைபெற்று, அது ஏடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளதையும் கண்டு துடித்துப் போனேன்.

“பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள ஒரு சிற்றூர் - அந்த ஊரில் திருமணத்திற்கு தயாராக இருந்த ஒரு பெண்மணி. அவளை, அவளது தாயார் பாலி

என்ற வாலிபனுக்கு மணம் முடித்து தருவதற்கு ஒப்புதல் அளித்திருந்தாள். அந்தத் தாய் அதன்பிறகு உடல் நலிவுற்று அதன் காரணமாக இறந்துவிட்டாள்.

தாயார் இறந்தபின் அந்தப் பெண்ணின் தந்தை சின்னா சிங் என்பவர் அவளை; பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு வேறொரு மணமகனுக்குத் திருமணம் செய்திடப் பேசி முடித்தார்.

ஆனால் அந்தப் பெண்; தனது அன்னையின் ஆசைப்படி அவள் முடிவு செய்திருந்த பாலி என்ற மணமகனைத்தான் மணப்பேன் என்று உறுதிபட கூறிவிட்டாள்.

அதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தார் ஆத்திரமடைந்து; அவளுக்கு மொட்டையடித்து சித்ரவதை செய்தது மாத்திரமல்லாமல்; அவள் ஆடைகளை அகற்றி நிர்வாணமாகவும் ஆக்கி அந்த கிராமத்துத் தெருக்களில் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர்.”

இந்தக் கொடுமையைக் கண்டித்து வழக்கு - கைது - எல்லாம் நடைபெற்றிருக்கிறது என்றாலும்கூட; நடந்த கொடுமை நடந்ததுதானே!

காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து எத்தனை காத தொலைவுதான் நடந்து, கடந்து முன்னேறியிருந்தாலும்; அந்தக் காட்டுமிராண்டிக் காலத்திலும் நாம் வாழ்ந்தவர்கள்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தகைய கொடுமை குறிப்பாகப் பெண்களுக்கு இழைக்கப்படுமேயானால்; இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் போடப்பட்டுள்ள பீடிகை; ஒரு புறத்தில் விண்ணைத் தொடத் துடிக்கிற அறிவு வளர்ச்சி - இன்னொரு புறமோ - மண்ணில் புதைந்து விட்டதால் ஏற்பட்ட மனிதாபிமான வீழ்ச்சி என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம்; பொருந்திவரத்தானே செய்கிறது?

16-5-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்