கட்டுரை 8 / 50
மனிதனின் மறுபக்கம்
The Other Side of Man
அச்சுப் பக்கம் 46–47
scan 46 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
மறுபக்கம் என்பது; ஒரு பக்கம் என்று வந்தாலே; தன்னாலே காணக்கூடியது. கண்டாலும் காணாவிட்டாலும் இருக்கக் கூடியது. எந்தவொரு அசையாப் பொருளுக்கும், அசையும் பொருளுக்கும், அணுவினும் சிறியது முதல் பெரிய உருவமான யானை வரையுள்ள உயிரினங்களுக்கும் மறுபக்கம் உண்டு. யானையை விடப் பெரிய உயிரினங்களும் உலகில் இருந்தன; அவற்றுக்கும் மறுபக்கம் உண்டு. பூமிக்கும், வானுக்கும், வானில் நாம் காணக்கூடியதும் காண இயலாததுமான கிரகங்கள் எனப்படும் எல்லாக் கோள்களுக்கும் மறுபக்கம் இருந்தே தீரும். கடல்களுக்கும் கணக்கிலா நதிகளுக்கும், வாய்க்கால்களுக்கும் மறுபக்கம் இருப்பதை அறிய முடிவதுடன்; காற்றுக்குக்கூட அது வீசும் கனபரிமாணத்தைக் கொண்டு கண்டுபிடித்துவிட முடிகிறது அதன் மறுபக்கத்தை!
அந்த மறுபக்கங்களையெல்லாம் விடுத்து; நான் இப்போது சொல்ல வருவது மனிதனுடைய மறுபக்கத்தைப் பற்றியதாகும்.
மனிதனைப் பார்த்து நேராக நின்றால் அவன் முகமிருக்கும் பக்கத்திற்கு நேரான முதுகுப்பக்கம் மறுபக்கம். அந்த மனிதனின் வலதுபுறமாகப் பக்கவாட்டில் பார்த்தால்; அப்போது அவனது இடதுபுறத்துப் பக்கவாட்டு; மறுபக்கமாகி விடுகிறது. உருவங்களைத் திருப்பி வைத்துப் பார்ப்பதால் கண்ணுக்குத் தோன்றும் மறுபக்க ஆய்வு அல்ல இது. மருத்துவமனையில் உடல்நிலை ஆய்வுக்காக எல்லாப் பக்கங்களையும் பார்க்கும் போது ஒவ்வொன்றுக்கும் மறுபக்கம் உண்டு.
இப்படியே வளர்த்திக் கொண்டு போகாமல் நேரடியாக நான் பேச விரும்பும் மறுபக்கத்தைப் பற்றிப் பேசுவோமே!
அறிவுஜீவி என்றும் அறிவாளியென்றும், ஒப்பற்ற சிற்பியென்றும், உயர்வான ஓவிய நிபுணன் என்றும், எழுத்தில் இணையற்றவனென்றும், நடிப்பில் நிகரற்றவனென்றும், இசையில் ஈடற்ற மேதையென்றும், கவிஞர்களில் சிகரமென்றும், கலைஞர்களில் மிக உயரமென்றும், ஆன்மீகத்துறை அருள்மிகு ஞானியென்றும், ஆசாபாசங்களை விடுத்த அன்புருவத் துறவியென்றும், அஞ்சாநெஞ்சங்கொண்ட புரட்சிக்காரன் என்றும், வள்ளல் என்றும், வாய்மையின் வடிவமென்றும், விவேகியென்றும், வித்தகனென்றும், விஞ்ஞானப் பேரறிவாளனென்றும், இறைவழி நிற்போன் என்றும், ஏழைக்கு அருள்செய் அன்பனென்றும், சமூகசேவகன் என்றும், தலைவனென்றும், தன்னலமற்ற தொண்டனென்றும், புனிதனென்றும், புத்தாவதாரமென்றும், பக்தசிரோன்மணியென்றும், பகுத்தறிவுச் சுடரென்றும் ஆடவர் பெண்டிர் என இருசாராரில் எவர் போற்றப்படினும் புகழப்படினும் அவரின் மறுபக்கத்தை மாற்றாரோ; மற்றவரோ கண்டறிந்திட இயலாவிடினும்; அவர்தம் மனச் சான்றுக்கு அவராலேயே திரையிட முடியாது; திரையிட்டாலும் அந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு அல்லது விலக்கிக் கொண்டு, அந்த மறுபக்கம் திசையெட்டும் தெரிவதும் உண்டு.
மனிதனுடன் தொடர்புடையது அவனுடலில் இயங்கும் உயிரின் அடிப்படையில் பல உணர்வுகள் எனினும் அந்த உணர்வுகளுக்கும், உணர்வுகளால் ஏற்படும் விளைவுகளுக்கும் பிறப்பிடமாக இருக்கக் கூடியவை அறிவும் குணமும்தான். அந்த அறிவு நல்லறிவாகவோ; புல்லறிவாகவோ இருக்கலாம். அதேபோன்று, குணமும் நற்குணமாகவோ, துர்க்குணமாகவோ இருக்கலாம்.
குணமும் அறிவும் கூட்டு சேரக் கூடியவை. நல்லறிவும் நற்குணமும் கூட்டு சேர்ந்திடின் அந்த மனிதனின் மறுபக்கத்தில் “மாசு” மிகக் குறைவாகவே காணப்படும். அதுவும் எளிதில் அகன்று விடக்கூடும்.
இதற்கு முற்றிலும் மாறாக; துர்க்குணமும் நல்லறிவும் இணைந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இதைவிட மோசமாகப்
புல்லறிவும், துர்க்குணமும் கூட்டு சேர்ந்துள்ள குரூரமான மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
நல்லறிவு - நற்குணம் - புல்லறிவு - துர்க்குணம் - இவற்றில் எது எதனுடன் கூட்டு சேருகிறது என்பதைப் பொருத்து; மனிதனின் மறுபக்கம் அமைகிறது என்று கணக்கிடலாம். அதுவும் அவனது செயலைக் கொண்டுதான் கணக்கிட இயலும். அதுகூட அச்செயல் அம்பலத்துக்கு வந்த அளவுக்கு மட்டுமே!
எனக்குள்ள குறைபாடு பற்றியும் பலவீனம் பற்றியும் எனக்குத்தானே தெரியும் என்றாலும்; என் செயல்களை வைத்து; பிறரும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அப்போதுகூட ஒன்றிரண்டு ஒளிந்து கொண்டுதான் அந்தப் பிறரையும் ஏமாற்றும்.
நல்லறிவு என்பதற்கு நிறைந்த அறிவு எனப் பொருள் கொண்டால்; அந்த அறிவாற்றல், துர்க்குணத்தைத் துணை சேர்த்துக் கொண்டு, இயங்குவதால் பெருங்கேடுதான் விளையும்.
பாலில் விஷத்தைக் கலந்தாலும், விஷத்தில் பாலைக் கலந்தாலும் - பால்தான் கெடும் என்பது போலவே, நல்லறிவுடன் துர்க்குணத்தைக் கலந்தாலும் - துர்க்குணத்துடன் நல்லறிவைக் கலந்தாலும் அறிவுதான் கெடும் என்பதை உணர்ந்து நடப்பதே உத்தமம்.
என்னதான் வளைந்து வளைந்து, சுற்றிச் சுழன்று நமது முழு உடலையும் பார்த்திட முனைந்தாலும் மறுபக்கத்தைக் கண்ணாடியில்லாமல் பார்க்க முடியாதது போலவே; நம்மைப் பற்றிய மறுபக்கத்தையும் முழுமையாகப் பார்க்க முடியாது.
“உன்னையே நீ அறிவாய்” என்று கிரேக்கத்துக் கிழவன் சாக்ரடீஸ் வழங்கிய அறிவாயுதம் எனும் ரசம் பூசிய கண்ணாடியின் உதவியால் மட்டுமே நமது மறுபக்கத்தைப் பார்த்து தேவைப்படும் திருத்தம் செய்து கொள்ள முடியும்.
15-5-2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்