பொருளடக்கம்

7. சுயமரியாதைத் திருமணம்

கட்டுரை 7 / 50

சுயமரியாதைத் திருமணம்

Self-Respect Marriage

அச்சுப் பக்கம் 42–44

scan 42 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

“அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிட; பிரதமருக்குத் தாங்கள் கடிதம் எழுதியதோடு; 1967ல் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தின் நகல் பிரதியையும் பிரதமருக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளதைப் பற்றி “தினமலர்” ஏட்டில் ஒரு கண்டனக் கட்டுரை வெளிவந்துள்ளதே?”

“மிக்க மகிழ்ச்சி! எங்கே இந்த நண்பர்கள், இந்தப் பெரிய செய்தியை இருட்டடிப்பு செய்துவிடுவார்களோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன் - மறுப்பு அல்லது கண்டனம் என்ற பெயரிலாவது செய்தியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்களே; அதற்காக இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு! தந்தை பெரியார் அவர்களால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தை ஆயிரக்கணக்கானவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நானே எனது 60 ஆண்டுக்கால பொதுவாழ்வில் ஆயிரத்துக்குக் குறையாத திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறேன். பெரியாரும் அண்ணாவும் மற்றும் நமதியக்கத் தலைவர்களும் நடத்தி வைத்துள்ள திருமணங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்குமென்று கணக்கிடவே இயலாது. பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.

ஆனாலும்; 1967 வரையில் அத்தனை சுயமரியாதைத் திருமணங்களும் சட்ட சம்மதம் பெற்றதாக அங்கீகரிக்கப்படவில்லை. சுமார் 40 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டில் நடந்த

சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட சம்மதம் பெறாமல் இருந்து; அதற்காக தி.மு. கழகம் சட்டமன்றத்தில் வாதாடியும் போராடியும்கூட நிறைவேற்றப்படாமல்போன அந்தக் கோரிக்கை; 1967ல் அண்ணா ஆட்சியிலேதான் நிறைவேறியது. அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலே கலந்து பேசித்தான் அந்தப் புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டுவந்து பேரவையிலே நிறைவேற்றினார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாகம் வரலாற்றுப் புத்தகத்தில் நான் எழுதியுள்ள ஒரு பகுதியை நினைவூட்டுகிறேன்.

அது வருமாறு:-

“தந்தை பெரியார் அவர்களே இந்தச் சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழகத்தில் முதன்முதல் தவழவிட்ட தாய் ஆவார். புரியாத மொழியில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத சாத்திரச் சடங்குகளுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பழைய திருமண முறை ஒன்றை புறக்கணித்துவிட்டுப் புரிந்த தாய்மொழியில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறிக் கொண்டு மந்திரம் ஏதும் ஓதுதல் இன்றி மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்கிற புதிய சீர்திருத்தத் திருமண முறை ஒன்றைத் தோற்றுவித்தார் பெரியார்.

தொடக்கத்தில் இந்தப் புதிய மணமுறைக்கு எழுப்பப்பட்ட தடைச் சுவர்கள், சொல்லடிகள், கல்லடிகள் ஏராளம். அவற்றையெல்லாம் மீறிப் பல்லாயிரக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் சுயமரியாதைத் திருமண முறைப்படியே தங்கள் இல்லறத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஆனால், சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குச் சட்டப்படி சொத்துரிமை முதலான பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. ஒன்றிரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டபோது அத்தகைய திருமணமே செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதுமே சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்ட வடிவம் தருவதைத் தனது முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்றாக மேற்கொண்டது. அதற்குரிய மசோதாவைச் சட்ட அமைச்சர் நண்பர் மாதவன் 1967 ஜூலைத் திங்களில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அவருடைய தலைமையிலேயே அமைந்த ஆய்வுக் குழுவுக்கு அது அனுப்பப்பட்டுப் பின்னர் சட்டமாக நிறைவேறியது.”

பிற மாநில அறிஞர் பெருமக்களும், பெரும் பதவிகளில் இருப்போரும், கல்வியாளர்களும், இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புப் பெறும்போதெல்லாம்; இதனை வியந்து, பாராட்டியிருக்கிறார்கள். சட்ட சம்மதம் வேண்டுமென்று கேட்டது சுயமரியாதைத் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்த அல்ல - என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குத் தெளிவான விளக்கம் என்னவென்றால்; யாரும் விருப்பப்பட்டு தங்கள் திருமணத்தை சீர்திருத்த முறையில் - சுயமரியாதை முறையில் - நடத்திக் கொண்டால்; அது சட்டப்படி செல்லத்தக்கதே என்பதுதான்! சுயமரியாதை முறையை மேற்கொள்வதும் அல்லது புரோகித முறையை மேற்கொள்வதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது - அல்லது அவர்களின் பகுத்தறிவு ஆர்வத்தைப் பொருத்தது - இதில் ஒன்றும் கட்டாயமில்லை.

‘தினமலர்’ கட்டுரையில் சுயமரியாதைத் திருமணம் என்பது; அனைத்திந்திய அளவுக்கு பேசப்படுகிற சிறப்பு பெறவில்லையென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்ன செய்வது; இந்தியாவில் தோன்றிய புத்தர் கொள்கை; இப்போது இந்தியா தவிர்த்த பிறநாடுகளில்தான் பரவிச் செழித்திருக்கிறது! புத்தர் கொள்கைக்கு செய்யப்பட்ட இருட்டடிப்புத்தான்; பெரியார் கொள்கைக்கும் செய்யப்பட்டது; அதுவும் தமிழ்நாட்டில்! ஆனால் இப்போது “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பிய முழுமதியாக” பெரியாரின் தன்மான இயக்கக்

கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல; மதச்சார்பற்ற நிலையை இந்திய அரசே ஏற்றுத் தீர வேண்டும் என்ற அளவுக்கு வளர்ந்து, வலுப்பெற்றிருக்கிறது.

அதேபோலத்தான்; வாழ்வின் தொடக்கமான திருமண விழாவே; சுயமரியாதை உணர்வோடு அமையுமேயானால், மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக; இன்று உடனடியாக இல்லாவிடினும் காலங்கடந்தாவது; எப்படி தமிழ்நாட்டுக்கு இந்தத் திருமண முறையை சட்டப்படி ஏற்றுக்கொள்ள சுமார் 40 ஆண்டுகளாயிற்றோ அதுபோல இந்தியா முழுதும் இம்முறை படிப்படியாக கடைப்பிடிக்கப்படும் காலம் வந்தே தீரும்.

அதற்காக அகில இந்திய அளவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை, “தினமலர்” கட்டுரையாளர்; ஆதரித்து எழுதி ஆக்கபூர்வமாகத் துணைநிற்க முன்வராவிடினும்; அறவே இருட்டடிப்பு செய்து மறைத்துவிடாமல் மறுப்புரைத்ததின் மூலம்; மறைமுகமாகவேனும் ஆதரவளித்திடும் நிலையை வரவேற்று மகிழ்கிறேன்.

எப்போதும் எதிர்நீச்சல் போடுவதுதான் -

எங்களுக்குப் பெரியார் அளித்த

பயிற்சி - அதில் இப்போதும் வெல்வோம்.”

13-5-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்