பொருளடக்கம்

6. வாக்குச்சீட்டின் வலிமை

கட்டுரை 6 / 50

வாக்குச்சீட்டின் வலிமை

The Power of the Ballot

அச்சுப் பக்கம் 39–40

scan 39 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

மக்களால் அந்த மக்களுக்காகவே அமைக்கப்படுகிற மக்களாட்சியை அமைத்திடுகிற பொறுப்பை ஏற்றிருக்கிற மக்கள்; அந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி, தங்களிடம்தான் இருக்கிறது என்ற உண்மையை; மேடைகளில் யாரோ பேசிடக் கேட்கிறார்கள். ஏடுகளில் அவ்வாறு எழுதியிருப்பதைப் படிக்கிறார்கள். அப்படிக் கேட்கும்போதோ அல்லது படிக்கும்போதோ ஒரு பெருமிதம் அவர்களுக்கு ஏற்படுவதாகத் தெரியவில்லை.

அதைவிட இன்னும் பெரிய வேதனை என்னவென்றால், அவர்களிடமுள்ள அந்த மகத்தான சக்தியை அவர்கள் வெளிப்படுத்தவோ, அல்லது பயன்படுத்தவோகூட அவர்களாக விரும்பி முன்வருவதில்லை என்பதை மிகுந்த வெட்கத்துடன் அந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒரு துளி என்ற நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.

மக்கள் சக்தியின் மாண்பு இவ்வாறு மங்கிப் போனதற்குக் காரணம் என்ன? மக்களாட்சி எனும் மண்டபம் கட்டுவதற்காக அவர்கள் தேர்வு செய்து நட்ட தூண்கள் சில ஆட்டம் கண்டு விடுவதும்; சில தரையில் பிடிப்பின்றித் தடுமாறுவதும்; சில தூண்கள் தம்மைத் தேர்வு செய்து பொருத்தியவர்களின் தலையிலேயே பலமாக இடித்து விடுவதும்தான் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

மன்னராட்சி,

ஏகேச்சாதிகார ஆட்சி,

பிரபுக்கள் சபையின் ஆட்சி,

மக்களாட்சி

எனப் பலவகை ஆட்சிகள் கூறப்படினும்; குறைந்த அளவு தவறுடையதும் - எல்லா மக்களும் ஆட்சியில் பங்கு கொள்வதால் அந்த ஆட்சியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தவறிழைத்தால் அவர்களைத் தண்டிக்கவோ, நீக்கவோ வழியுண்டு என்பதுமான - மக்களாட்சி எனும் ஜனநாயக ஆட்சி முறையே சிறந்தது என்ற முடிவை ஏற்றுக்கொள்கிறார் அரிஸ்டாட்டில்.

எனவே இருக்கின்ற ஆட்சிமுறைகளில் சிறந்த முறையெனக் கருதப்பட்டு; கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஜனநாயக முறை நமது இந்தியத் திருநாட்டில் செயலாக்கம் பெற்றுள்ள முறையாகும். இந்த முறையிலும் களையென முளைத்துள்ள சீர்கேடுகளை அகற்றிட வேண்டுமேயானால் அதற்கும் அடிப்படையாக அந்த மக்களின் வலிமை அல்லது சக்திதான் தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்களால் அமைக்கப்பட்ட ஆட்சியில் தோன்றும் அவலங்களை, அறவே போக்கிட அவர்களால்தான் முடியும்.

பெரும்பான்மையோர் எனப்படும் மக்களின் எண்ணிக்கை பலம், எந்தக் கருத்துக்கு அல்லது எவரைத் தேர்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறதோ; அந்தப் பெரும்பான்மை எண்ணிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்கள் மக்களாகத்தானே இருக்கிறார்கள்.

அவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டத்தான் வாக்குச் சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்து அவற்றைக் கணக்கிட வேண்டிய தேர்தல் முறை செயல்படுத்தப்படுகிறது.

அந்த வாக்குச்சாவடிகளில் நுழைவதற்கே; இந்தக் காலத்தில் வாக்காளர்களான மக்களுக்கு வரவேற்புத் தோரணங்கள் அமைத்திட வேண்டியிருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால்; இந்த ஜனநாயகப் பணி ஆற்றுவதை வாக்காளப் பெருமக்களுக்கு வாய்த்திடும் ஒரு நாள் ஊதிய வேலையாகச் சிலர் கருதுவதும், அதற்கும் சிலர் இணங்கி; அதனைப் பெற்றுக்கொண்டு அந்தப் பணியினை

நிறைவேற்றுவதும்தான்! இதில் மறந்து போவதும் - மறந்துவிடுவதும் மக்களாட்சித் தத்துவம் அல்லவா?

“நீ இந்த நாட்டுக்காரன் - இந்த நாட்டில் மத்தியிலோ - மாநிலங்களிலோ - மாநகர் மற்றும் நகரங்கள், பேரூர் சிற்றூர்களிலோ அமைகின்ற ஆட்சி மன்றங்கள் உன்னால்தான் அமைகின்றன - நாட்டின் வளர்ச்சிக்கோ அல்லது தளர்ச்சிக்கோ நீ அளித்திடும் வாக்குத்தான் காரணம் - ”

என்று கூறி எந்த மக்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறதோ; அந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்கள் அதே மக்கள்தான் என்கிறபோது; ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி விடுகிறதல்லவா?

ஓர் அமைப்பை உருவாக்கிட - அந்த அமைப்புக்கு ஒரு தலைமை - ஓர் உறுப்பினர் - தேர்ந்தெடுக்கப்பட நம் கையில் தரப்படும் வாக்குச் சீட்டுக்குள்ள வலிமையையும், மாண்பினையும், நாமே உணரவில்லை எனில் நம்மையும் உள்ளடக்கிய இந்த மக்கள் கூட்டத்திற்கு எள் முனையளவு மதிப்பாவது உண்டென்று கூற முடியுமா?

எனவே மக்கள், தங்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் கருதிக் கொள்ளாமல்; இந்த நாட்டின் சிற்பிகள், சமுதாயத்தின் காவலர்கள், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எந்திரங்கள் - சுருக்கமாகச் சொன்னால் பாரதி மொழிப்படி, “எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்” என்பதை நிலைநாட்ட வேண்டும், நிலைநாட்டியே தீர வேண்டும்.

அப்போதுதான் புழுதுபட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகம்;

ஆழ உழுது விளைந்த கதிர் குலுங்கும் கழனியாக மாறும்!

9-5-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்