பொருளடக்கம்

5. ஜனநாயக நெறி

கட்டுரை 5 / 50

ஜனநாயக நெறி

The Way of Democracy

அச்சுப் பக்கம் 36–37

scan 36 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

வாக்காளர்கள், மின் இயந்திரங்களின் பொத்தானை அமுக்கி, தாங்கள் விரும்புகிற ஒரு கட்சியின் அல்லது தனிப்பட்ட ஒரு வேட்பாளரின் பெயருக்கு முன்னால் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்திற்கு வாக்களிப்பது இன்றைக்கு இந்திய நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிற பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தலுக்கான முறையாகி விட்டிருக்கிறது. குறிப்பிட்ட வயதுடையோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற பொதுவான நிலையில் இந்நாளில் நடைபெறுகிற தேர்தல்கள்; சில பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே கலந்து வாக்களிக்கிற நிலையிலும், பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்கிற நிலையிலும், ஒரு வரையறைக்குட்பட்டதாக அமைந்திருந்தது என்பதை மறந்துவிட முடியாது. உத்திரமேரூர் பட்டயம் என இன்றைக்கும் பேசப்படுகிற அந்தக் காலகட்டத்தில் ஊர்த் தலைவர்களையும், ஊராளும் குழுக்களுக்கான உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க அப்பதவிக்குரிய ஒழுக்கமும் தகுதியும் எத்தகையதாயிருத்தல் வேண்டுமென நிர்ணயித்து, பொது மண்டபத்தில் ஊர்மக்கள்; ஓலைகளில் பெயர்களை எழுதி, அவற்றைக் குடத்திற்குள்ளிட்டு; அதனை எடுத்து எண்ணிக் கணக்கிட்டு தேர்வு பெறுவோர் பெயரை அறிவித்திடும் “குடவோலை” முறை இருந்திருக்கிறது.

எந்த முறையாயினும் அதில் பெரும்பான்மையோர் கருத்து ஏற்கப்பட்ட தேர்தல் முறையானது; எந்த வகையானது என்பதில் மட்டுமே வேறுபாடுகள் கொண்டதாக விளங்கியதே தவிர; பெரும்பான்மையோர் கருத்து அறியும் அடிப்படை மாறிடவில்லை.

வாக்காளர்கள் பட்டியல்களில் வாக்களிப்போர்க்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம், அதேபோல அந்த வாக்குகளைப் பெறத் தகுதியுடையோர் என்ற பிரதிநிதித்துவம் வாய்ந்த பட்டியல் - அதில் நிலமுடையோர், நிலமில்லாதார், படித்தோர், பாமரர், பட்டதாரிகள், பட்டம் பெறாதோர் என்றெல்லாம் பாகுபாடு செய்து வாக்குரிமை வழங்கப்பட்டோர் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

அதாவது பெரும்பான்மையான குடி மக்களுக்குக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை 1952 வரையில் இந்தியத் திருநாட்டில் நீடித்தது எனலாம்.

1950 ஆம் ஆண்டு இந்திய நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகுதான் எல்லா மக்களுமே, சம நிலையில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்து கொள்ளவும் - அதிலும் குறிப்பாக அண்ணல் அம்பேத்கர் கொடுத்த குரலின் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி முறைத் தேர்வும் என விதிமுறையும் வகுக்கப் பெற்றது.

தொல் பழங்காலத்திலிருந்து இதுவரையில் தங்களை வழிநடத்த, தங்களுக்காகக் குரல் கொடுக்க, தங்களைப் பாதுகாக்க, ஒரு தலைவன் வேண்டும் என்ற நிலையும் - அவன் மன்னனாக இருப்பின் அவன் தலைமையில் முடியாட்சி முறையும்; அந்த வரலாறு முடிந்து வந்த நிலையில் மக்களே அரசைத் தேர்வு செய்கின்ற குடியாட்சி முறையும்; என நிலையானதொரு மாற்றம்; இறுதியாக இந்தியாவில் ஏற்பட்டது.

வள்ளுவர் காலத்தில் அல்லது சங்க காலத்தில் முடியாட்சி முறைக்குக் கூறப்பட்ட இலக்கணங்கள்; இன்றைக்குக் குடியாட்சி முறைக்கும் பெரும்பாலும் பொருந்துவனவாக இருப்பதை நோக்குமிடத்து; ஆளுவோர் - ஆளப்படுவோர் எனும் இரு சாராருக்குமிடையே அமைந்திட வேண்டிய அணுகு முறைகளும், அறநெறிகளும் பற்றிப் பெரிதும் பேசப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஆள விரும்புவோர் - அதற்கு அவர்களை அனுமதிப்போர் என இரு வகையினராக; அதாவது இன்றைய நிலையில்

வேட்பாளர் - அவரது வேட்கையை ஆதரிப்பது அல்லது ஆதரிக்காதது என முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த வாக்காளர் என்ற இரு பிரிவினரின் கையில்தான் “ஜனநாயகம்” எனப்படும் மக்களாட்சித் தத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர முடியும்.

உணர்ந்து அதற்கேற்ப நமது வாக்காளப் பெருமக்கள் செயல்படுகிறார்களா அல்லது செயல்பட விடப்படுகிறார்களா என்பதை சிந்தித்துப் பார்த்தால்; மெல்ல மெல்ல ஜனநாயகத்தின் நாடி நரம்புகளில் ஏதோ ஒரு நச்சு மருந்து அதிகார பலம், ஐஸ்வரிய வலிமை, வன்முறை வெறியாட்டம், ஊழல் சக்தி இவைகளின் மூலம் - ஊசி கொண்டு ஏற்றப்படுவதைப்போல ஏற்றப்பட்டு மக்களாட்சித் தத்துவமும், அதை நம்பியிருக்கும் மக்களும் ஏமாற்றப்படுவதை அறிய முடிகிறது! அறிந்து அகம் நோக முடிகிறதேயல்லாமல் வேறெதுவும் செய்ய முடியவில்லை!

மக்களாட்சி யாருக்காக? மக்களுக்காக!

ஆனால் அதனை அமைக்கும் உரிமை, அந்த மக்களிடமிருந்து தந்திரமாக அல்லது தடித்தனமாக பறிக்கப்படுகிறதென்றால்; அப்படிப் பறிக்கப்படாமல் பாதுகாத்திட; அதைப் பறிப்போரை எதிர்த்து மாபெரும் புரட்சி நடத்த மக்கள் தயாராக வேண்டாமா?

மக்களாட்சித் தத்துவம்; மதபேத பித்துக் கொண்ட மதோன்மத்தர்களிடம்,

சர்வாதிகார வெறி பிடித்தோரிடம் தப்பித் தவறி சிக்கிக் கொண்டால்; அதை அந்தக் கொடியவர்களிடமிருந்து விடுவிக்கும் வரையில் “ஜனநாயகத்துக்கு சுதந்திரம் கிடையாது” என்ற உண்மையை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்தால்தான்; ஜனநாயகம் உயிர் பெற்றே இருக்க முடியும்! இல்லையேல் அதன் உடலைத்தான் நாறிப்போக விடுத்து நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

7-5-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்