பொருளடக்கம்

4. குருகுலம்!

கட்டுரை 4 / 50

குருகுலம்!

Gurukulam!

அச்சுப் பக்கம் 33–34

scan 33 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

குருகுலப் பயிற்சி என்பது பழைய காலத்து சங்கதியென்று பரிகசிப்போர் உண்டு. “ஒரு குரு - ஒரு மாணவன்” என்ற அளவிலே இருந்தது; இன்றைக்கு என்னதான் வகுப்புக்களில் பாடம் நடத்தினாலும் - தனியாக “டியூஷன்” எனும் ஆங்கிலப் பெயருடன் பத்து அல்லது பதினைந்து சீடர்களுக்குக் குறையாமல் பயிற்சியளிக்கும் குருநாதர்களை நாடித்தான் மாணவர்கள் போகிறார்கள். அதற்குப் பெயர் வேண்டுமானால் வேறு மாதிரி இருக்கலாம். குருகுலப் பயிற்சி என்பதுதான் அதற்கு அடிப்படை. சீடனை உட்கார வைத்து காலையிலும் மாலையிலும் ஏன் அர்த்த ஜாமத்திலும் கூட குருவானவர் “அகார சாதகம்” செய்திட நாள்தோறும் கற்றுக் கொடுப்பதில்லை.

எப்படி வழிகாட்டுகிறவன்; பயணியுடன் சேர்ந்து பயணம் செய்வது இல்லையோ; அது போலவே, குரல் வளமாகவும், தொண்டை வயப்படவும் அகார சாதகத்தைச் செய்திட ஓரிரு நாட்கள் கற்றுக் கொடுத்து விட்டு; பயணிக்கும் பாதை காட்டி விட்ட திருப்தியில் குருநாதர், இனி சீடன் பாடு என எண்ணியவாறு, தன்பாடு கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

குருவுக்கு உடம்பு பிடிப்பது - அவரது உடைகளை வெளுப்பது - குரு பத்தினி கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று இட்ட பணிகளை இனிதே முடிப்பது, இவையெல்லாம் இந்நாளில் விலக்கப்பட்டு விட்ட வழக்கமாகி; குருநாதருடன் ஒன்றியிருந்து பயிற்சிபெறும் பழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதைக் காண முடிகிறது.

அதனை அறவே வெறுத்திடவும் இயலவில்லை. இளமைக் காலத்தில் ஈரோட்டுப் பெரியார், காஞ்சி அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோர் பேசும் கூட்டங்களே எனக்குப் பகுத்தறிவு வகுப்பு - ஓரளவு சுயமரியாதைப் பாடம் கற்றிருந்தேன் எனினும், என்னை அந்தப் பயிற்சியில் மேலும் தெளிவு பெற்றவனாக ஆக்கிக்கொள்ள பெரியாரின் ஈரோடு குடியரசு அலுவலகக் குருகுல வாசம் மிகவும் பயன்பட்டது என்பதில் இரு வேறு கருத்துக்கே இடம் கிடையாது. எனக்கு முன்னர் அந்தக் குருகுல வாசம் அண்ணா போன்றோர்க்குப் பெரிதும் உதவியது. நண்பர்கள் தவமணிராசன், கருணானந்தம், சனார்த்தனம் ஆகியோர் என்னுடன் ஈரோடு குருகுலவாசிகள்தான். அன்பு இளவல் வீரமணி அவர்களும் குருகுலப் பயிற்சி பெற்று குருவின் பீடத்திற்கே உரிய தகுதியும், வாய்ப்பும் பெற்றவர்தான்.

அறிவியல் துறையில், சங்கீதப் பேரரசில், ஓவியம், காவியம், சிற்பம் எனும் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றோர் யாராயினும்; அவர்கள் இப்போது எவ்வளவு முதுமை சுமப்போராயினும் - அவர்களைப் பேட்டி கண்டால் அவர்கள் தனியாகப் பயிற்சி பெற்ற குருகுலம் பற்றிய புதுமைகளைச் சொல்லாமலிருக்க மாட்டார்கள்.

இசைப்பயிற்சி; வாய்ப்பாட்டு - நரம்புக் கருவி, தோல் கருவி, இவற்றில் நிறைவு பெற; குரு பீடத்துடன் நீங்காமல் இருந்து நித்த நித்தம் கற்றுக் கொள்வது போலவே; கற்பித்தல் நேரம் என்று குறிப்பாக எதுவும் குறிக்கப்படாமல்; இரவு உணவுக்குப் பிறகு வெளி மாடியின் நிலா முற்றத்தில் - பகல் நேரத்தில் அலுவலக அறையில் - காலை அரும்பிடாத வைகறைப் பொழுதில்கூட இல்லத்துத் தாழ்வாரத்தில் - இப்படி அவ்வப்போது வாய்ப்பான வேளையில், வாய்ப்பான நேரத்தில் ஈரோட்டுக் குருகுலத்தில் படித்த பயனை இன்றும் பெற்றிருப்பது எத்துணை பெருமை - எத்துணை சிறப்பு - எத்துணை உறுதியை எனக்களித்து உதவுகிறது!

நன்கு கற்றுத் தேறினும் - நற்சான்றுகள் எண்ணற்றவை பெற்றிருப்பினும் - நண்பனையே சில நேரங்களில் குருவாக

பாவித்து ஐயப்பாடுகளை அகற்றிக் கொள்ளும்போதுகூட குருகுல அனுபவத்தைத்தான் அங்கே நாம் காண முடிகிறது.

பெரியார், அண்ணா என கொள்கை போதிக்கும் குருமார்களின் மாற்றத்தை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இருவரும் ஒரே விதமான பகுத்தறிவு மற்றும் இனமான உணர்வு, பாடத்தைத்தான் போதித்தார்கள். ஆனால் அவற்றை நான் ஆசிரியனாக இருந்து கற்பிக்கும் வாய்ப்பு ஏற்படின் அப்போது கடைப்பிடிக்க வேண்டிய வழியை இருவரும் இருவிதமாகச் சொல்லிக் கொடுத்தார்கள். நோய் போக்கிட ஒரே மருந்து - தேனில் குழைத்துத் தந்திடும் முறையை அண்ணாவும் - எதிலும் குழைக்க வேண்டாம்; அப்படியே சூரணத்தை விழுங்கிடுக என்று பெரியாரும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இரண்டு முறைகளுமே குருகுலத்துடன் நெருங்கியிருந்து கற்றுக் கொண்டது; மருந்து செய்வது ஒரே முறைதான்! அதை அருந்தும் முறைகள்தான் இருவகை! எனவே, ‘குருகுலம்’ என்பது பழைய பாணி எனத் தோன்றினாலும்; நம்மை ‘அறிவாயுத பாணி’ களாக ஆக்கவல்ல சிறப்புப் பயிற்சி தரக் கூடியதாகும்; என் அனுபவத்தில் கண்ட உண்மை இது!

3-5-2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்