கட்டுரை 3 / 50
என் பெயர் புரட்சி!
My Name Is Revolution!
அச்சுப் பக்கம் 28–31
scan 28 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
‘புரட்சி’ - மேலுதடு, கீழ் உதடு இரண்டு உதடுகளாலும் அழுத்தப்பட்டு; அதை மீறிக் கொண்டு வெளிக் கிளம்பி; நாவினால் பல் வரிசையை முரசு அடிப்பது போல் தட்டிக் கொண்டு என் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதே அதிலே ஓர் உத்வேகம்!
சிகப்பு உடையை அணிந்துகொண்டு நான் வெளிக் கிளம்பினாலே; என்னைச் சுற்றிக் கிழிசல் உடைகளும், கந்தல் உடைகளும், கைகளையே கட்டாரிகளாக உயர்த்திக் கொண்டு வர; அவற்றையெல்லாம் காராக்கிரகத்தில் தள்ளுவாயா? கடும் தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்குவாயா? கணத்தில் முடிந்துபோகும் மரண தண்டனையை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்று வரலாற்றில் இடம் பெறுவேன் என்பதற்காக அந்தத் தண்டனையைத் தந்திடுவாயா? எப்படியோ; என் பெயர் புரட்சி என்பதற்குப் பொருத்தமான தண்டனையை எனக்கு அளித்திடு!
பிரான்சு நாட்டில் லூயி மன்னனுக்கு எதிராக நான் பொங்கியெழுந்தபோது முதலில் இரக்கம் எனும் ஒரு பொருளை; கல்லறையில் புதைத்துவிட்டு; அதன் பிறகே அன்றிருந்த ஆதிக்க வர்க்கத்தை “கில்லட்டின்” கருவியின் முன்னே நிறுத்தினேன்.
இல்லையேல்; அந்த அதிகார வெறியர்களை மடக்கிப் பிடித்து, மரணப் படுகுழியில் தள்ளுவதற்கு முன்பே; “அய்யோ பாவம்; பன்னீரில் குளித்தவனாயிற்றே; இன்று செந்நீரில் குளித்திட வேண்டியிருக்குமே! பாவையரைப் பதுமைகளாக்கிப் படுக்கையறையில் விளையாடுபவனாயிற்றே; இன்று அவனை சாவு மென்று தின்னும்போது, பழைய நினைவுகளால் பாவம்
துவண்டு போவானே! மதுவை அவன் குடிக்கிறானா; அல்லது மதுதான் அவனைக் குடிக்கிறதா என மலைத்திடும் அளவுக்கு, மங்கையர் மடியில், தோளில், தொடையில், தொட்டுக் கொண்டும், ஒட்டிக் கொண்டும் கிடப்பவனாயிற்றே; வெட்டுப் பாறையில் “கில்லட்டின்” அவனைத் துண்டாக்கப் போவதை நினைத்தாலே; துடித்துப் போவானே!” இப்படியெல்லாம் உருகிடும் நிலைமை எனக்கு ஏற்பட்டால்; எனக்குப் புரட்சியெனும் பெயரே பொருந்தாது!
பிரஞ்சுப் புரட்சியிலிருந்து ருஷ்யப் புரட்சி தொடங்கியதாகவும் - அந்த ரஷ்ய மக்கள், தங்களுக்கு வெற்றி கிட்டுமென்ற நிலையிலும் அந்தத் தருணத்திலும் கூட தியாகம் செய்யக் கூடியவர்கள் என்பதை அவர்கள் நடத்திய புரட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன என்கிறபோது, இன்றைய காலகட்டத்தில் பொருந்தாத இடங்களில் எல்லாம் என்னைப் போட்டுப் புதைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே என்னுடைய இயல்பை நானே மாற்றிக் கொள்ள முன்வந்து விட்டேன்; அதற்கு முதல் காரியமாக நானிருந்த இடத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.
சுட்டுக் கொல்லுமிடத்தில்,
வெட்டி வீழ்த்துமிடத்தில்,
மண்டியிடினும்; அவன் மன்னனாயின்,
தண்டிக்கப்படுவான் என்ற இடத்தில்
இரத்த வாடை வீசிட கர்ச்சனை புரிந்து கொண்டிருந்த நான்; இப்போது இட மாற்றத்துக்குப் பிறகு; ஆயுதமேந்தி அடக்குமுறைகளை எதிர்கொண்ட நிலையைத் தவிர்த்து விட்டு; வேறொரு வகையான ஆயுதத்தைப் பயன்படுத்த முடிவு செய்து விட்டேன். இதன் பெயர் அறிவாயுதம்! அன்பாயுதம்! அமைதி ஆயுதம்!
என் பழைய பெயரான புரட்சிக்கு உரிய பணியே, உயிர்களைக் குடித்து, உடல்களைக் காலிப் புட்டிகளாக அடுக்கி, அதன் மீது வெற்றிக் கொடி நாட்டுவதுதான் -
இப்போது நான் அறிஞர்
பெருமக்கள் வளர்க்கும் அறிவுப் புரட்சியாக -
ஆதிக்கத்தை அகற்றும் அரசியல் புரட்சியாக -
விவேகிகள் வளர்க்கும் விஞ்ஞானப் புரட்சியாக -
விவசாயிகளின் வேளாண்மைப் புரட்சியாக -
சாதி மத பேதத்தைச் சாய்த்திடும் சமூகப் புரட்சியாக -
காலமெலாம் கொடி நட்டு ஆண்ட;
எம் இனத்தை இன்றைக்கு சீரழிக்க
முனையும் சிலந்திப் பூச்சிகளை விரட்டும் இனமானப்
புரட்சியாக -
ஆணவம் - அநீதியின் கூச்சல்
அவைக்களம் வரையில் அடாவடித்தனம்
என்பதை அடக்கி ஒடுக்கும் அறிவுப் புரட்சியாக -
நட்டக்கல்லை தெய்வமென்று நாலு புட்பம்
சாத்தியே சுற்றி வந்து மொண மொண
என்று சொல்லும் மந்திரம் ஏதடா
எனக் கேட்ட சிவ வாக்கிய
சித்தரின் சீர்திருத்தப் புரட்சியாக -
கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்
போக என்றும்; சாத்திரக் குப்பையிலே
சாயாதீர் என்றும் பாடிய
இராமலிங்கரின் ஆன்மீகப் புரட்சியாக -
ஆயிரம் தெய்வங்கள்
உண்டென்று தேடியலையும்
அறிவிலிகாள் என்று
பாரதி பாடிய; பகுத்தறிவுப் புரட்சியாக -
“காதலுக்கு வழி வைத்து
கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்”
எனக் கவிதை யாத்த
பாவேந்தரின் சுயமரியாதை புரட்சியாக -
இந்தப் புரட்சிகளின் மூலம்
புதிய சமுதாயம் பூத்துக்
குலுங்கிட நடக்கும் அறப்
போரில் இன்னுயிர் தரநேரினும்
அந்தத் தியாகத்துக்கும்
தயாராகத் தன்னைத்தானே
அர்ப்பணிக்கும் தியாகப் புரட்சியாக -
இப்படிப் பல புரட்சிகளாக உருவெடுத்திருக்கிறேன் - என்னை ஒரு பெயருடன் இணைப்பதால் மட்டுமே; அந்தப் பெயருக்கு, என் குணம்; மணம் தருமெனக் கருதாதீர்! பிணம் கூட நாள் கடந்தால்; ஒரு வகை மணம் உமிழும் - அதைப் புரட்சியின் இயல்பு என எண்ணினால்; உம்மைத்தான் புத்தி பேதலித்தவன் என்பார்கள்!
எதிர்க்கருத்துக் கொண்டவர்களை -
அக்கருத்து வென்றிடக் களம் காண்பவர்களை;
கொன்று குவித்து வாகை சூடுவதல்ல புரட்சி -
ஒரு காலத்தில் அதைத்தான் புரட்சி என்றார்கள்!
இன்று மாற்றுக் கருத்துடையவர்களையும் மாற்றி நம் அணிக்குத் துணையாக ஆக்குவதே மாபெரும் வெற்றிப் புரட்சி!
இல்லையேல் மாசுதான் நமை வந்து அடையும் -
என்ன பார்க்கிறீர்கள்;
புரட்சி இப்படி திடீரென ‘சைவ பட்சணி’ ஆகி விட்டதே என்றுதானே!
போதும்; நான் ‘மாமிச பட்சணி’யாக இருந்து மகாத்மா காந்தியடிகளையே வாயில் போட்டு விழுங்கி, “வந்தே மாதரம்!” என்று பாடினேனே அது போதும்!
நாட்டுக்குத் தேவை தொழிற் புரட்சி!
தொழிலுக்குத் தேவை அறிவுப் புரட்சி!
அறிவுக்குத் தேவை உரிமைப் புரட்சி!
உரிமைக்குத் தேவை
உறுதி! உறுதி! உறுதிப் புரட்சி!
உறுதியுடையோர் பக்கமே நானிருப்பேன்!
இறுதி வரை இலட்சியம் காப்போர் இதயத்தில் மட்டுமே நான் இருப்பேன்!
அப்படி இல்லாதார் மடியை விட்டு “அட; நீ பொல்லாத ஆள்” என்று சொல்லி இறங்கி விடுவேன் -
‘புரட்சி’ என்னும் நான் சிரஞ்சீவியாகவே இருப்பேன் -
பூவில் வாசமாக....
புயலில் கூட பொறுமையாக
உன்னைப் போற்றி வளர்ப்பேன்!
வணக்கம், வருகிறேன்.
எங்கே போகிறாய் என்று கேட்கிறீரா?
எங்குமில்லை; தங்குமிடம் எது எனக்குத் தகுதியோ;
அங்கேதான் போகிறேன்.
அங்கேயே இருப்பேன்.
1-5-2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்