கட்டுரை 2 / 50
அதிக உயரம் தாண்டுவதற்கு
To Clear a Greater Height
அச்சுப் பக்கம் 24–26
scan 24 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
உடன்பிறப்பே,
ஜெயக்குமார் என்ற இளைஞன், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து என்னைப் பார்த்தான். எழுதியிருப்பதைப் படித்துப் பார் என்று ஒரு தாளைக் கொடுத்தான்.
இடையிடையே பிழைகள் சில தலை நீட்டிடும் வண்ணம் வாக்கியங்கள் அமைந்திருந்தாலும்; ஏதோ ஒரு கருத்தை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் அந்த இளைஞனுக்கு இருப்பது புரிந்தது.
“தலைவரே ஓயாமல் உழைக்கிறீர் - உழைத்துக் கொண்டே இருக்கிறீர் - உறங்காமல் உழைக்கிறீர் - நானும் உழைக்கிறேன் - ஆனால் உறங்காமல் இல்லை. உறங்குகிறேன். உறங்கினால்தானே, நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரையின்படி இளைஞர்கள் கனவு காண முடியும்”
பக்கத்தில் இருந்த பேராசிரியர் அவர்கள் அதைப் படித்துவிட்டுப் பாராட்டிப் புன்னகை புரிந்தவாறு அந்தத் தாளை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
அண்ணா அறிவாலயத்திலிருந்து வீடு வந்து சேரும் வரையில், காரில் என் கவனம் அந்தத் தாளின் மீதே இருந்தது. திரைப்படக் காட்சிகளில் தெரிவது போல அந்த இளைஞனின் முகமும் தாளில் நிழலாடியது.
வியப்பு! வியப்பு! அதுவும் விரிவடைந்த வண்ணம்! அடடே; குடியரசுத் தலைவர் அறிவுரைப்படி நடப்பதற்காக அவன் உறங்குவது மட்டுமல்ல; என்னையுமல்லவா உறங்கச் சொல்லி மறைமுகமாக உபதேசம் செய்கிறான்.
உறங்காமல் நான் உழைக்கிறேன் என்பது பெரும்பாலும் எழுதுகிற பணி - மக்களைச் சந்திக்கப் பயணம் செய்கிற பணி - இவைபோன்ற பணிகளையாற்றும்போதுதானே!
ஊரும் உலகமும் உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அண்ணா உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அப்படியே பழகிக் கொண்டுமிருக்கிறேன். வைகறை தலைகாட்டி; “வை பேனாவை கீழே” என்று வாங்கி வைக்கிற வரையில் எழுதுவதிலே இருக்கிற நிம்மதி - உற்சாகம் - வேறு எப்போதும் இருப்பதில்லை. இளங்காற்று தவழ்ந்து வரும் அந்த மெல்லிய ஒலியைத் தவிர; வேறு எந்த ஓசையுமற்ற இயற்கையான அமைதி; எழுதுவதற்கு எவ்வளவு பெரிய ஊக்குவிப்பு தெரியுமா ?
அண்ணா வாயிலாக அதையும் பழகியிருக்கிறேன் - அமளி துமளி, சாலையில் வாகனங்கள் போகும் பேரொலி - அச்சகத்தில் அங்குமிங்கும் ஆள் நடமாட்டம் - பார்வையாளர்கள் கூட்டம் - அவற்றுக்கிடையே அய்யா பெரியார் அமர்ந்து அசைவின்றி எழுதிக் குவிப்பாரே; அப்படியும் பழகியிருக்கிறேன் - அதையும் அருகிலிருந்து பகலிலும், இரவிலும் ஈரோடு ‘குடியரசு’ அலுவலகத்தில் பார்த்துப் பார்த்து!
வேறுபாடான இந்த இரண்டும் தெளிவாக்குவது என்ன ? பூங்கா வழிப் பயணத்துக்கு மட்டுமல்ல; புதர் மண்டி புயல் வீசும் காட்டுப் பயணத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்!
மாண்புமிகு அப்துல் கலாம்; “இளைஞர்கள் கனவு காண வேண்டும்” என்று சொன்னதை இந்தச் சின்னத் தம்பி அப்படியே நேரடியாகப் பொருள் கொண்டு விட்டான்!
“திட்டினாயே, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்” என்றால்; அந்தச் சொற்களைக் கையால் எடுத்து, திட்டு வாங்கியவர் கையிலே கொடுத்து; திட்டியவர் அவர் கையால் அவற்றைப் பெற்றுக் கொள்வது என்று பொருள் அல்ல - திரும்பப் பெற்றுக் கொள்வதாக வாய்மொழியாகத் தெரிவித்தாலே இவ்வளவு காரியங்களும் நடைபெற்றதாகத்தான் கருதிட வேண்டும்.
‘விழி! எழு! உணர்வு கொள்!’ என்றால் தூங்கிக் கொண்டு இருப்பவரைத் தட்டி எழுப்பிச் சொல்லும் வார்த்தைகள் என்று யாரும் கருதுவதில்லை; சமுதாயத்தில் விழிப்புணர்வையும் வீரத்தையும் ஊட்டி, அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழச் செய்திடும் ஆணையாகவே கருதப்படுகிறது.
அதேபோலத்தான், அப்துல் கலாம் அவர்கள்; “இளைஞர்களே! தாலாட்டுப் பாடுகிறேன்; உறங்குக! பின்னர் என் தாலாட்டு கேட்டு உறங்கும்போது எதிர் காலம் பற்றிக் கனவு காண்க!”
என்று சொல்லவில்லை.
“கனவு காண்க என்பதற்கு சிந்தனை செய்க - சிந்தித்துச் செயல்படுக!” என்பன போன்ற பொருள்களே பொருந்துவனவாகும்.
இளைஞர்கள் காணும் கனவுகள் வித்தியாசமாக இருக்கும் - அப்படித்தான் இருக்க வேண்டும் - அப்போதுதான் பலவிதத் தேவைகள் உள்ள இந்தத் தேசத்துக்கு அந்தக் கனவுகளின் பலன்கள் பரிபூரணமாகும்.
இளைஞர்கள் அறிவுலக மேதைகளாகக் கனவு காணலாம் - அற்புதமான பொறியாளராக - ஆரோக்கியமிக்க சமுதாயத்தை உருவாக்கும் மருத்துவராக - வரலாறு படைப்பவராக - வரம்பிலா வானத்தை, வற்றாத கடலை ஆராய்பவராக - சாதி மத பேதங்களற்ற சமத்துவ சீலராக -
கவிஞராக - ஓவியராக - கல்லில் சிலை வடிப்பவராக - ஆக்கப்பூர்வப் பணிகளில் அக்கறை கொண்ட அரசியல்வாதியாக - புலவராக - புரவலராக - ஒளிர வேண்டுமெனக் கனவு காணலாம்.
முதல் கனவு; இளமையில் நான் காண விரும்பாத கனவு - கல்லூரி வரையில் படிக்க வேண்டும் - அது கலைந்த கனவாகவே ஆகிவிட்டது - என் மொழி, இனம், நாடு, மக்கள் இவற்றின் ஏற்றமே எப்போதும் என் கலையாத கனவாகி விட்டது - இப்படிக் கனவு காண்போர் சமுதாயத்தில் விதி விலக்குகளாகத்தான் “ஏற்பு முத்திரை” குத்திக் கொள்ள முடியும்.
நன்கு கற்றுத் தெளிந்து தேர்ந்து நாம் ஈடுபாடு கொண்ட துறையில் நடு நின்ற நாயகமாய் நாடு போற்றத் திகழ்வோம்; என்பதே ஒவ்வொரு இளைஞனும் காண வேண்டிய கனவு - அந்தக் கனவு காண்பதற்காக உறங்க வேண்டிய அவசியமில்லை - மாறாக; அந்தக் கனவு கண்டிட விழித்தெழுக! விழித்தெழுந்தால் மட்டுமே; கனவுகள் நிறைவேறும் - எதைப் பற்றியும் கனவு காண்பது எளிது; அந்தக் கனவு, கடின உழைப்பின்றி நிறைவேறும் என்பது அரிது!
எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழிகளில் ஒன்று; “நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்” என்பதாகும்.
அன்புள்ள,
மு.க.
29-4-2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்