பொருளடக்கம்

42. வருமுன் காப்பதா? வந்தபின் காப்பதா?

கட்டுரை 42 / 50

வருமுன் காப்பதா? வந்தபின் காப்பதா?

Protect Before It Comes? Or After It Comes?

அச்சுப் பக்கம் 182–186

scan 182 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

கி.பி. 2004 - கடந்த ஆண்டு கடற்கோள் எனப்படும் சுனாமித் தாக்குதலால் சுமத்ரா தொடங்கி, அந்தமான் நிக்கோபார் எனத்தொடர்ந்து தமிழ் நாட்டுக் கடற்கரையோர நகர மக்களும், சிற்றார் பேரூர் மக்களும் உயிர் உடைமைகளை முறையே இலட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் இழந்தது பற்றியும் -

கி.பி. 2005 - இந்த ஆண்டும் இயற்கையின் சீற்றம் பூகம்பமாக - நில வெடிப்பு, நில நடுக்கம் என்பவைகளாக எழுந்து, இந்தியாவின் வட மாநிலங்களில் சில பகுதிகள், ஜம்மு-காஷ்மீர் - மற்றும் பக்கத்து நாடான பாகிஸ்தான் போன்றவற்றில் - மக்கள் உயிர் இழப்பே ஒரு இலட்சத்தைத் தாண்டும் என்ற கணக்கும் - மண்ணோடு மண்ணாகப் பல நகரங்களும், ஊர்களும் புதையுண்டு போயின என்ற கொடுமைகள் நிறைந்த செய்திகளும் அடங்கிய பேரிழப்பைச் சந்தித்துள்ளதை நானும் - முனைவர் நாகநாதனும் சிந்தித்தவாறே, வழக்கம்போல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது; எங்கள் உரையாடலில் இந்தப் பேரிழிவு விளைவிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணம் தேடவும் முற்பட்டு; அதுபற்றி அறிவியல் மேதைகள் தமது ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்தும் விவாதிக்கிற வாய்ப்பினைப் பெற்றோம்.

அப்போது முனைவர் நாகநாதன்; உலகம் போற்றும் பொருளியல் அறிஞரும் நோபல் பரிசு பெற்றவரும், இந்தியக் குடிமகன் என்பதில் பெருமைப்படுபவருமான அறிவியல் மேதை

அமெர்த்தியா சென் எனத் தொடங்கி - அறிவியல் அறிஞர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஒயிட் போர்டு, விஜயோஷி மாட்சுமோ, மஹமூப் உல்ஹக் ஆகியோரைப் பற்றியும், அவர்கள் இந்தப் பேரிழிவுக்கான இயற்கைச் சீற்றங்களுக்குக் கூறிய காரணங்கள் குறித்தும் விவரித்துவிட்டு; அவர்கள் கொண்டிருந்த ஆய்வுக் கருத்துக்களின் அடிப்படையில்தான் அண்மையில் நான் எழுதியுள்ள இயற்கைச் சீற்றம் குறித்த “வலி அறிவிக்கும் வாயில்லா மொழி” எனும் கட்டுரை அமைந்துள்ளது என்றும் விவரித்தார்.

அவர் விவரித்த அந்த விளக்கங்கள் கருமுகில் கூட்டம் வானில் பரவியிருப்பது போல் எனக்குத் தோன்றிய காரணத்தால் - இந்த முகில்கள் எல்லாம் சேர்ந்து எல்லோர்க்கும் பயன்படும் ஒரு கட்டுரை மழையாகப் பொழிந்தால் நலமாக இருக்குமே என்று நான் கூறிடவே அவ்வாறே அவர்; “அணு ஆயுத பூஜையும் - அச்சுறுத்தும் பேரழிவும்” என்ற தலைப்பில் அருமையான அறிவுபூர்வக் கட்டுரையாக வழங்கியுள்ளார். அது ‘முரசொலி’யிலும் வெளிவந்துள்ளது. பாராட்டிப் பல கடிதங்கள்! தொலைபேசிகள்!

அந்தக் கட்டுரையில் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஒயிட் போர்டு என்பார்; உலகில் அணு ஆயுத பரிசோதனைகளுக்கு முன்பும் பின்பும் எனக் கணக்கிட்டு 1950க்கு முன்பு; ஆண்டுக்கு சராசரி 68 முறை நில அதிர்வுகள் என்றும், 1950க்குப் பிறகு ஆண்டுக்கு சராசரி 127 முறை நில அதிர்வுகள் என்றும் - அதிர்வு அளவும் 5.8 ரிக்டர் என இருந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கையே புலம்பி அழுவது போலன்றோ நான் எழுதியிருந்தேன் -

“இயற்கையாம் என்னை என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ஆகாரத்துக்கான பசி என்றால்; மார்பைச் சப்பி மழலையர் பாலை அருந்திக் களிப்பர் - உங்களுக்கேற்பட்டிருப்பது அறிவுப் பசியன்றோ; அதனால் மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்திட, மார்பில் ஊறும் பால்

எங்கிருந்து உற்பத்தியென்றே தேடுகின்றீர்! அதனால் ஏற்படும் உபாதையில் நான் அழுகின்றேன் - துடிக்கின்றேன் - அலை மோதுகின்றேன் - வெகுண்டெழுந்து வெடிக்கின்றேன் - இயற்கையான எனக்கு இந்தச் செயல்பாடுகள் என வலியை அறிவிக்கும் வாயில்லா மொழி!”

இயற்கை, சினந்து சீற்றங்கொண்டு உயிர்களையும், உடைமைகளையும் பெருமளவுக்குப் பேரிழிவுக்கு உட்படுத்திய பிறகுதான்; வந்தபின் காப்போராக அரசுகள், அருள்நெறித் தொண்டு நிறுவனங்கள் - துயர் துடைப்புப் பணியாற்றத் துடித்தெழ முடிகிறது. வருமுன் காப்பதற்கான ஏற்பாடுகளை; நாமேதான் செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசுகள் எதுவாயினும் எடுத்திடத் தயங்காமல் முன்வரவேண்டும்.

நிலநடுக்கமோ; அல்லது பேரலைத் தாக்குதலோ வரும்போது; அதன் காரணமாக ஒரு பத்தாயிரம் பேர் ஒரு பகுதியில் மாண்டு போயினர் என்றால் - நில நடுக்கம் - பேரலை இவற்றின் நேரடித் தாக்குதலுக்கு ஆளாகி மண்ணுள் புதைந்தோ; அல்லது மூழ்கியோ போகிறவர்கள் எண்ணிக்கையாக அந்தப் பத்தாயிரமும் இருப்பதில்லை. ஊன்றியுள்ள காலுக்குக் கீழே நிலம் அதிர்ந்தோ, வெடித்தோ புதைந்து போகிறவர்கள் அந்தப் பத்தாயிரத்தில் சில நூறு பேர்கள்தான் இருப்பார்கள். மற்றும் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்டோர்; நில அதிர்ச்சியால் - வெடிப்பால் - பேரலைத் தாக்குதலால் - அவர்கள் வாழ்ந்திடும் வீடுகள் இடிந்து நொறுங்கி அந்த இடிபாடுகளில் சிக்கித் திணறி மூச்சை இழப்பவர்களேயாவார்கள்.

வேண்டுமானால் தொலைக்காட்சிகளிலே பாருங்கள்; இந்த அதிர்வுகளும் நடுக்கங்களும் ஆரம்பத்தில், உயர்ந்த வீடுகளை - மாடிக் கட்டிடங்களை - ஒரு நொடியில் அசைத்து இடித்து; அங்கே வாழ்பவர்களைத்தான் பிணக்குவியலாக்குகிறது என்ற நிலையை உணர முடியும்.

இதற்குத்தான்; வந்தபின் காப்பதற்கு துயர் தணிப்புப் பணிகளை மேற்கொள்வது ஒருபுறமிருந்தாலும் இத்தகைய

அழிவுகளை அனுமதிக்காமல் கதவைத் தாளிடும் முறையில் நாடுகளைப் பரிபாலிக்கும் அரசுகளும் - நாமும்; வருமுன் காப்பவர்களாக வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஆடம்பரத்தை வெளிச்சம் போடும் மாடி வீடோ, மாளிகையோ, இயற்கைச் சீற்றத்தினால் தாக்குண்டு நொறுங்கும்போது - நம் மேலே இரும்பு உத்திரங்களும் - கல்தூண்களும் - கருங்கல் சுவர்களும் விழுந்தால் நசங்கித்தானே ஆக வேண்டும்.

எனவே; இயற்கைச் சீற்றத்தைத் தடுத்துவிட முடியாது; ஆனால் அந்தச் சீற்றத்தினால் விளையும் பேரிழவை ஓரளவாவது கட்டுப்படுத்திட முடியும்.

எரிமலை, பூகம்பம், கடற்கொந்தளிப்பு இவற்றால் உடனடி அழிவு ஏற்பட்டு விடாமல் இருக்க; அதே போல பேரழிவும் விளையாமலிருக்க ஜப்பான் போன்ற நாடுகள் - கடந்த கால அனுபவங்களால்; முதலில் தாங்கள் வாழும் இல்லங்களை அவற்றுக்கேற்ப அமைத்துக் கொள்கின்றன.

எல்லாம் இழந்து, குந்திடக் குடிலின்றி நிற்போரைப் பார்த்து; நிரந்தர வீடுகள் கட்டித் தருகிறோம் என்று உறுதி கூறுவதைக் காட்டிலும்; தற்காலிக வீடுகளையே தற்காப்பு வீடுகளாகத் தொடக்கத்திலேயே அமைத்துவிட்டால்; அவைகள் இடிந்து வீழவோ; அதனால் மக்கள் மடிந்து போகவோ வேண்டிய நிலை தோன்றாமலே போய்விடும். இந்த வருமுன் காக்கும் திட்டத்தை உலகில் எல்லா நாடுகளும் உணர்ந்து பார்த்து உரிய நேரத்தில்; உதவாதினி ஒரு தாமதம் என்ற உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

கல்லால் கட்டப்படும் சுவர்களுக்குப் பதிலாக; மூங்கில் சட்டங்களால் ஆன சுவர்கள் எழுப்பி; வேய்ந்திடும் கூரைகளுக்கு மெல்லிய பலகைகளைப் பயன்படுத்தி - அமைக்கப்படும் வீடுகளில் எந்த இடிபாடு ஏற்பட்டாலும்; அதனால் வாழும் வீட்டுக்குத்தான் சேதமே தவிர; இன்னும் வாழ வேண்டிய மனிதர்க்கு மரண ஓலை வாசிக்கப்படமாட்டாது என்பதை அனுபவத்தில் அறிய முடிகிறது!

வளர்ந்த அல்லது வளர்ந்து விட்ட விஞ்ஞான மேதாவிலாசத்தை மேலும் விரிவாக்கிக் கொண்டு விண்ணைச் சாட முனைவதையும் - மண்ணை வென்றிட முயன்றிடுவதையும்; அதற்காகக் கோடானு கோடிப் பணத்தைக் கொட்டிக் குவிப்பதையும் சற்று ஒத்திவைத்து விட்டு;

அந்த விஞ்ஞானப் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு இயற்கைச் சீற்றம் எந்த வடிவில் - எந்தப் பெயரில் - எங்கிருந்து வந்தாலும்; அதனை முன்கூட்டியே அறிகின்ற ஆற்றலைப் பெற்றிடும் ‘அறிவியற்கலை’யைக் கற்றிட வேண்டியதே உடனடி வேலையாகும்.

“இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாட்டு அறிவியல் அறிஞர்கள் அணு குண்டு சோதனை நடத்துவதால் புவியின் மேல் ஓடு (Crust) பகுதிகள் பலவீனமடைகின்றன. இதன் காரணமாகவே நில அதிர்வுகள் தூண்டப்படுவதாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 1950க்குப் பிறகு, சக்தியின் அளவு அதிகரிக்கப்பட்ட, 30,000 அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இதற்காக பல இலட்சங் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.

5000 அணு ஆயுதங்கள் 15 மணித் துளிகளில் விரைந்து ஏவப்படுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சான்றாக, எதிர்பாராத வகையில் தற்செயலாக ரஷ்யாவின் அணு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்த அணு ஆயுதம் ஏவப்பட்டால் 8 அமெரிக்க நகரங்களில் உள்ள 70 இலட்சம் மக்களை நெருப்புப் புயல் எரித்து விடும். அதன் பின்பு கதிர்வீச்சின் விளைவுகள் ஏறக்குறைய ஒரு கோடி மக்களை மரணத்திற்கு அனுப்பிவிடும். எனவேதான் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்தும் வல்லரசு நாடுகளை ‘மரண வணிகர்கள்’ (Merchants of Death) என்று அமெர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.”

என்று தம்பி நாகநாதன்; தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விஞ்ஞானிகளின் முன்னேயுள்ள கேள்வி; “அய்யன்மீர்; உங்கள் கண்டுபிடிப்பு; மனிதர் நடமாடும் பாதையில் போடப்படும் வாழைப்பழத் தோலாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது அவர்களை வீழாது காத்திடும் கைப்பிடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?” என்பதுதான்!

16 - 10 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்