கட்டுரை 43 / 50
எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம்?
Where Is Heaven? Where Is Heaven?
அச்சுப் பக்கம் 188–190
scan 188 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இந்தப் பிறவி - அடுத்த பிறவி; இந்த ஜென்மம் - மறு ஜென்மம் - நல்ல தமிழில் சொல்வதாயின், இம்மை - மறுமை; இவற்றில் இம்மைதான் உண்மை! மறுமை என்பது வெறும் கற்பனை - மனிதன்; மறு பிறவியெடுப்பான் என்பது கற்பனை பென்றாலும்; அவன் மறைந்த பிறகு சொர்க்கத்தை அடைகிறான் அல்லது நரகத்தை அடைகிறான் என்பதைக் கற்பனையென்று கூறாமல்; நான் நம்பிடவே செய்கிறேன்.
இஃதென்ன; புதுக் குழப்பம்? மறு பிறவியையே நம்பாதவர்; சொர்க்கம் - நரகம் என்பவற்றை நம்புவது வேடிக்கையாக இருக்கிறதே? இப்படிக் கேட்கத்தான் தோன்றும்!
மனிதன், பிறந்தவுடன் உலகவாசியாகி விடுகிறான் - வாழும்போதே; சொர்க்கலோகம் அடைவதற்கோ - அல்லது நரகலோகம் அடைவதற்கோ அனுமதிச்சீட்டை முன்கூட்டியே பதிவு செய்து விடுகிறான். எப்போதாவதுதான் அந்த இரண்டு உலகங்களில் ஒரு உலகத்திற்கான அனுமதிச் சீட்டை; ஒன்றை மாற்றிக் கொண்டு ஒன்றைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். அப்படித் திரும்பப் பெற்றது சொர்க்கலோக அனுமதிச் சீட்டாகவும் இருக்கலாம்; அல்லது மிக அரிதாக நரகலோக அனுமதிச் சீட்டாகவும் இருக்கலாம். சொர்க்கம் என்றால் என்ன? அது எப்படியிருக்கும்? நரகம் எப்படியிருக்கும்?
அந்த இரு உலகங்களின் நகர அமைப்பு, சாலை அமைப்பு - வசிப்போரின் வாழ்க்கைக்கான வசதிகள் - இவற்றை வைத்து இரண்டையும் ஒப்பிட்டுக் காட்ட முன்வரவில்லைய - ஏறத்தாழ இந்த அமைப்புகள் எல்லாம் ஒன்றுக்கொன்று வேறுபடாமல் - சொர்க்கத்தைப் போலவே நரகமும்; நரகத்தைப் போலவே சொர்க்கமும் விளங்குவதைக் காண முடியும்.
அப்படியானால்; எந்த அடிப்படையை வைத்து - இது சொர்க்கம்; இது நரகம் என்று அடையாளப்படுத்துவது என்பதற்கு விடையாக அமைவது; அந்த இடங்களில் ஏற்கனவே குடியேறியிருப்பவர்கள்; தொடர்ந்து குடியேறியவர்கள் ஆகியோரின் பண்பை வைத்துத்தான் எது சொர்க்கம்; எது நரகம் என்பதை நிர்ணயிக்க முடியும்.
அந்தக் காலத்துக் கதையொன்றுண்டு; அதனை அடிக்கடி கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நினைவுபடுத்திப் பேசியுள்ளார்.
அக்கதைக்கு இப்போது வெருகேற்றி வழங்குகிறேன்.
வீட்டுக் கூடத்தில் முதியவர் ஒருவர் உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறார். அப்போது தெருவில் சவ ஊர்வலம் ஒன்று செல்கிறது என்பதை அறிவிக்கும் சங்குச் சப்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. முதியவர், தனது பேரன் முரளியை அழைத்து; “முரளி! தெருவுக்குப் போய் பார்த்து வா; மயானத்துக்குப் போகிற ஊர்வலத்தின் பின்னால் தொடர்ந்து போய்; இறந்து போனவர் சொர்க்கத்தை அடையப் போகிறாரா; நரகத்தை அடையப்போகிறாரா என்று தெரிந்து கொண்டு வா!” என்று கூறிப் பேரனை அனுப்பி வைக்கிறார்.
வீதிக்குச் சென்று, அந்த சவ ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து போன பேரன் திரும்பி வந்து “தாத்தா! அவர் சொர்க்கத்துக்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்!” என்று கூறினான்.
“நீ எப்படித் தெரிந்துகொண்டாய்?” தாத்தா கேட்டார்.
பேரன் பதில் சொன்னான்.
“ஊர்வலத்தின் பின்னால் போகிறவர்கள் என்ன பேசிக்கொண்டு போகிறார்கள் என்பதைக் கவனித்தேன். வீட்டு வாசல்களில் நின்ற பெண்கள் கண்ணீர் பெருக்கியதையும் கண்டேன். எதையும் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் நன்மை செய்தவர் - முகம் கோணாமல் அள்ளியள்ளி வழங்கியவர் - அகம் மலர அனைவரையும் அரவணைத்தவர் - முகஸ்துதி என்பது அறவே பிடிக்காதவர்.”
இப்படிப் பாராட்டப்படுகிற ஒருவருக்கு; நிச்சயம் சொர்க்கம்தானே கிடைக்கும்; அங்குதானே போவார் தாத்தா; என்றான் பேரன்!
“அடேய்; முரளி! சொர்க்கத்துக்கு அவர் போக முடியாது. ஏனென்றால் சொர்க்கமென்றே ஒன்று கிடையாது. எங்கேயிருக்கிறது; சொர்க்கம்; தெரியுமா?”
“என்ன தாத்தா முன்னுக்குப் பின் முரணாகச் சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவே இல்லையே!”
“இப்போது புரிந்து கொள்! - சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது - சவ ஊர்வலத்தில் சென்றவர்கள்; வீதியில் நின்று பார்த்தவர்கள் எல்லாம் பேசிக்கொண்டார்களே; கண் கலங்கினார்களே; அதுதான் அவர் சென்றடைந்துள்ள சொர்க்கம்.
இதற்கு மாறாக; ‘பீடை தொலைந்தது’ என்று ஊரார் ஆறுதலடைவார்களேயானால் அதுதான் அந்த நபருக்கு நரகம்”
பேரன், சிரித்துக் கொண்டே சொன்னான்;
“தாத்தா! இப்போது எனக்குத் தெளிவாகப் புரிகிறது. இம்மையுண்டு; மறுமையில்லை. மனிதன் பிறக்கும் போதே; உலகவாசிக்கான உரிமைச்சீட்டும் - அத்துடன் தனியாக சொர்க்கம் - நரகம் இரண்டில் ஒன்றில் குடியேறுவதற்கான இரண்டு அனுமதிச் சீட்டுக்களுடன் தான் வருகிறான். அந்த இரண்டில் எந்த ஒன்றைப் பயன்படுத்துவது என்பதை; அவன் இந்த உலகவாசியாக
இருக்கும்போதே; தனது வாழ்க்கையின் மூலம் தீர்மானிக்கிறான் - அவன் தீர்மானிக்கிறானோ இல்லையோ; அவனது வாழ்க்கையே அதைத் தீர்மானித்து விடுகிறது. நான் நினைப்பது சரிதானா தாத்தா?”
“நூற்றுக்கு நூறு சரிதான் - மறுமை என்பது மாயை; மடைமை! சொர்க்கம் - நரகம் என்பவை தனி உலகங்கள் இல்லை; நமக்குப் பிறகும் வாழும் புகழ்ச்சியே சொர்க்கம் - இகழ்ச்சியே நரகம்; எனத் தெளிவதே அறிவுடைமை!”
இருவர் பேச்சினிடையே பாட்டொலி கேட்கிறது. இருவரும் உற்றுக் கவனித்தனர் -
“எங்கே சொர்க்கம்? எங்கே சொர்க்கம்? அது இங்கே உண்டு; அங்கே இல்லை”
உடுமலை நாராயணக் கவிராயரின் பாடல் அது!
20 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்