பொருளடக்கம்

44. குரு பீடமும்; குறள் பீடமும்!

கட்டுரை 44 / 50

குரு பீடமும்; குறள் பீடமும்!

The Guru Peedam and the Kural Peedam!

அச்சுப் பக்கம் 192–193

scan 192 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

வாய்மை என்பதும், பொய்மை என்பதும் எதிர் எதிரானவை என்றாலும்; வாய்மையின் இடத்திலே பொய்மை வந்து அமருவதற்கு ஒரு வழியிருப்பதை அய்யன் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். என்ன வழி அது?

முதலில் வாய்மை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படுத்தாத ஒரு சொல்லை சொல்வதுதான் வாய்மை எனப்படும் என்கிறார் அய்யன் வள்ளுவர்.

யார் நன்மைக்காக சொல்லப்படுகிறதோ; அந்தச் சொல், அவரையன்னியில் பிறர் எவருக்கும் தீமையை ஏற்படுத்தலாகாது என்பதும் முக்கியமானதாகும். அந்தப் பிறரும், யாருக்கும் தீங்கு எண்ணாதவராக இருக்க வேண்டும் என்பதும் மறைந்து கிடக்கிறது.

“வாய்மை என்பது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்”

வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் ஆண்டவனின் அவதாரம் பரசுராமர் என்ற பாத்திரப்படைப்பு - வர்ணாசிரம தர்ம வெறிகொண்டு திரிந்தவர் என்று, பாரதத்தைப் படித்தால் புரிந்துகொள்ளலாம். அவரைப் போன்ற விந்தையில் சிறந்தவரே துரோணர் - முதலில் துரோணரிடம் வில் வித்தை கற்றுக்

கொள்ள கண்ணன் சென்றான். துரோணர் மறுத்துவிடவே கண்ணன், பரசுராமரிடம் சென்று வேண்டினான். பரசுராமர் சத்திரியனுக்கு வித்தை கற்றுத்தர மாட்டார் என்பதற்காகத் தன்னை பிராமணன் என்று பொய்யாகச் சொல்லி; அவரிடம் மாணவனாகச் சேர்ந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தான். ஒருநாள் பரசுராமர், கண்ணன் தொடையில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வண்டு, கண்ணன் தொடையைத் துளைத்தது. வலி பொறுக்காமல் அசைந்தால் குருநாதர் தூக்கம் கெட்டுவிடக் கூடுமேயென்று, கண்ணன் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தான். வண்டு துளைத்த கண்ணனின் தொடையில் ரத்தம் கொட்டி எங்கும் வழிந்தோடியது. திடுக்கிட்டெழுந்த பரசுராமர் - கண்ணனின் உறுதியையும் - அச்சமின்மையையும் கண்டு; “நீ பிராமணனாக இருக்க முடியாது - நீ சத்திரியன்தான் - பொய் சொல்லி என்னை ஏமாற்றிவிட்டாய் - அதனால் நீ என்னிடம் கற்ற வித்தை, சமயத்தில் உனக்குப் பயன்படாமல் போகக் கடவது!” என்று சாபமிட்டு அவனை விரட்டி விட்டார்.

பொய் சொன்னதால் கண்ணனுக்கு இந்தத் தண்டனை என்பதைவிட; அவன் பிராமணனாக இல்லாததால் இந்தச் சாபம் பெற நேர்ந்தது என்பதுதான் முக்கிய காரணமாகும்.

இதனைக்கும் கண்ணன் செய்த குற்றம் என்ன? பொய் சொல்லி; பரசுராமரின் மாணவனாகச் சேர்ந்தான் - குருநாதரின் உறக்கம் கெடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்; வண்டு துளைத்த வலியைக்கூடப் பொறுத்துக் கொண்டான்.

அவன் பொய் சொன்னது குற்றமென்று; பரசுராமர் தண்டிக்கிறார் - சாபம் கொடுக்கிறார்.

அந்தப் பொய்யினால் என்ன தீமை விளைந்தது? வில் வித்தை கற்றுக் கொள்வது; அக்கால வழக்கப்படி தீய காரியமா? இல்லையே! பிறகேன் தண்டனை?

கண்ணன் சொன்ன பொய்ம்மையை அய்யன் வள்ளுவராக இருந்தால் எப்படி, எந்தக் கோணத்தில் பார்த்திருப்பார்?

“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்”

தீங்கற்ற நன்மை விளைவிக்குமானால்; பொய்யான சொல்லுங்கூட வாய்மையின் இடத்தைப் பெற்றுவிடும்.

பாரதக் கதையின் குருபீடம்; வஞ்சம் தீர்ப்பதில் குறியாகவும் - வர்ணாசிரமத்தின் வழித்தோன்றலாகவும் இருக்கிறது.

பழந்தமிழ்ப் பனுவல் குறள்பீடமோ; பொய்ம்மையைக்கூட வாய்மையிடத்து அமர்த்த அறவழியிருந்தால் அதனை வரவேற்கிறது!

24 - 10 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்