கட்டுரை 45 / 50
இறையனார் குறளும்; இனியவை நாற்பதும்!
Iraiyanar's Kural and Iniyavai Narpathu!
அச்சுப் பக்கம் 195–197
scan 195 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
கையிருப்பின் அளவை அறிந்து அதற்குத் தக்கவாறு வரவுசெலவின் வாழ்க்கை; இருப்பது போலத் தோன்றி - குறைந்து, மறைந்துவிடும். அய்யன் வள்ளுவர், “ஒருவா தனிடமுள்ள வலிமையின் அளவையும், வளத்தின் அளவையும் அறிந்து அதற்குத் தக்கவாறு வாழ்ந்திடாவிட்டால் குறைந்து, மறைந்து விடும்” என்று சொன்னது வாழ்க்கையை அல்ல என்றாலும் கூட; வலிமையும் பொருளும் அழிந்துவிட்ட பிறகு வாழ்க்கையும் பயனற்றுத்தானே போய்விடும்.
வரவு, குறைவாக இருப்பினும் வரம்பு கடந்த செலவு இல்லாமல் பார்த்துக்கொண்டால் வறுமையெனும் கேடு வராமலே தடுத்துக் கொள்ள முடியும் என்றும்; “வலியுறுத்தல்” அதிகாரத்தில் இன்னொரு குறளில் அவர் விளக்கிடத் தவறவில்லை.
ஒருவரின் வாழ்க்கை இனிதாக அமைவதற்கு மேலும் வலிவூட்டும் அறிவுரைகளை, பூதஞ்சேந்தனார் எனும் புலவர் பெருமகனார், ‘இனியவை நாற்பது’ என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதுவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றேயாகும்.
“வருவா யறிந்து வழங்க லினிதே வியருவார் பங்காகாத ஊக்க மினிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்த லினிது”
“வருவாய்க்குத் தக்கவாறு வழங்கி, இருவர்க்கிடையே பிரச்சினை என்றால்; ஒருவர்க்குச் சார்பாக நில்லாமல் மனச் சான்றின்படி நடுநிலையாகச் செயல்பட்டு, தனக்குப் பெரும் பயன் கிட்டுமென்றாலும் அதற்கான செயலை விரும்பி; ஆராயாமல் அவசரப்பட்டு ஈடுபடாமல், தனது இயல்பில் வேறுபடாமல் வாழ்வதே இனிது” என்கிறது இந்தப் பாடல்.
ஒருவர், மிகச் சிறிய அளவாக ஒரு சைக்கிள் கடை வைக்கிறார். சைக்கிள்களை வாங்கி விற்பதற்கோ, அப்படி விற்பதில் கழிவுத் தொகை பெற்று - அதைப் பெருக்கி; பிறகு அவரே சைக்கிள்களை வாடகைக்கு விட்டு; அதன் வாயிலாக ஆதாயம் அடைந்து, நாளடைவில் அந்தச் சைக்கிள் கடை அதிபர்; தனது வணிகத் திறமை வாயிலாக, வளம் சிறிது சிறிதாகப் பெற்று இறுதியாக நூற்றுக்கணக்கான பேருந்துகளின் உடைமையாளராக வளர்ந்து உயர்ந்து நிற்கிறார் என்றால்; விவேகமும் - விடா முயற்சியும் - வியாபாரத் திறமையும்தானே அதற்கு முழுமுதற் காரணமாகும்!
அவர் வளர்ச்சியுற்றால் “அதிர்ஷ்டம்” என்றும்; தளர்ச்சியுற்றால் “தலைவிதி” என்றும் எளிதாகச் சொல்லி விடுகிறது உலகம்.
எடுத்த எடுப்பில் மலையுச்சிக்கே போய்விட வேண்டும் என்று ஆசைப்படக்கூடாது.
மலையடிவாரத்துக்குச் செல்லாமல் மலையுச்சிக்குப் போய் விட முடியுமா?
மலையடிவாரத்தில் நின்று மலையுச்சியை அண்ணாந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
சிறிய சிறிய பாறைகள், கால் வைத்து ஏறிடவோ, கை வைத்துப் பிடித்துக் கொள்ளவோ - உச்சி நோக்கி இருப்பவைகளை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட தொலைவு மலையுச்சியை நோக்கிச் சென்ற பிறகு; கீழே குனிந்து பார்த்தால் தலை நடுங்குகிறது.
அந்த நடுக்கத்தை உதறி விட்டு நம்பிக்கையுடன் தொடர்ந்து மேலே மேலே என்று ஏற வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் முடிவில்தான் மலையின் முடியைத் தொட முடிகிறது.
சைக்கிள் கடை வைத்தவர்; பல நூறு பேருந்துகளின் அதிபராக - ஆயிரக்கணக்கான வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குபவராக - எப்படி ஆக முடிந்தது?
நீங்கள் பேருந்து அதிபர் - முதலாளி என ஆக வேண்டுமென்றோ; அந்தப் பேருந்துத் தொழிலில் தனியார் ஆதிக்கம் தலைகாட்டி விடாமல் தடுத்து, அவற்றைத் தேசியமயமாக்கிட வேண்டுமென்றோ எழுகிற இருவேறு நிலைகளில் குக்கிராமத்து மக்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களும் பயனடைகிற நிலையைத்தான் நான் பரிந்துரைப்பவன் என்பதற்கு; கடந்த காலத்தில் என் தலைமையில் நடைபெற்ற ஆட்சியே சான்றாக விளங்குவதால்; இப்போது நான் அந்தப் பிரச்சினை பற்றிப் பேசாமல் - எந்தவொரு தொழிலானாலும், வாணிபமானாலும்; அது ஓங்கி வளர்ந்திட தனிப்பட்ட முறையிலாயினும் அல்லது நிறுவன ரீதியிலாயினும் தடையில்லா உழைப்பு - தளராத முயற்சி - தன்னம்பிக்கை ஆகியவை முழுமையாகத் தேவை என்பதை வலியுறுத்திடவே பேசுகிறேன்.
என் இளப் பிராயத்தில் என் நண்பர் ஒருவர் ‘சிறுகக் கட்டிப் பெருக வாழப் போகிறேன் பார்’ என்று கூறிவிட்டு ஐநூறு ரூபாய் முதல் போட்டு, சிறிய அளவில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே பலசரக்குக் கடை ஒன்று வைத்தார். ஆரம்பத்தில் அமோகமான வியாபாரம். மகிழத்தக்க அளவுக்கு மாதாந்திர ஆதாயம்.
ஆனால் நாட்கள் நகர, நகர, நண்பரின் வீட்டுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற அனைத்துப் பொருள்களையும் அந்தக் கடையிலிருந்தே உரிமையுடன் எடுத்துக் கொண்டார்கள்; காசு, பணம் எதுவும் தராமல்!
அதனால் முடிவு என்ன ஆயிற்று? நண்பரின் கடைக்கு மூடு விழா நடத்த வேண்டிய அளவுக்கு ஆயிற்று!
எனவே அதிர்ஷ்டம் என்றோ; அன்று அவன் எழுதிய எழுத்தை மாற்ற முடியுமா என்றோ; ஏதன் மீதாவது யார் மீதாவது பொறுப்பைச் சுமத்தாமல் வெற்றிக்கும் தோல்விக்கும் நாமே பொறுப்பு என்கிற மன உறுதியுடன்; ஒரு பணியில் இறங்குகிற எந்த மனிதனையும் அயர்வோ, சோர்வோ அணுகாது; அய்யன் குறளை அடிமனத்தில் பதித்துக் கொண்டு ஆண்டோர்களாம் பூதஞ்சேந்தனார் போன்றோர்; அறிவுரைகளையும் பின்பற்றுகிற வரையில் அந்த மனிதனின் வாழ்வில் பின்னடைவும் ஏற்படாது!
பொருள் :-
பெட்டவை = விரும்பியவை.
25 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்