கட்டுரை 46 / 50
படகுக்கு ஒரு கணக்கு; நாட்டுக்கு ஒரு கணக்கா?
One Calculation for a Boat; Another for a Country?
அச்சுப் பக்கம் 199–202
scan 199 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
டாக்டர் அகிலன் இராமநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “பொது அறிவு உலகம்” எனும் மாத இதழ் - மூன்று நான்கு மாதங்கள் சேர்ந்தாற்போல எனக்குக் கிடைத்து; அவற்றின் எல்லா பக்கங்களையும் படிக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன்.
எழுத்துப் பிழைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. எழுத்தில் பிழையிருந்தால் வார்த்தைகளையோ, அல்லது வாக்கியங்களையோ “ஓ! இப்படித்தான் இருக்கும்” என்று நாம் ஒருங்குபடுத்திக் கொள்வது எளிதானதாகும். ஆனால் எழுத்துப் பிழைக்குப் பதிலாக எண்களிலே எங்கேனும் அல்லது ஏதேனும் பிழை ஏற்பட்டுவிடின் காலக் குழப்பமே ஏற்பட்டுவிடும் அல்லவா?
இக்குறையும் இனி வரும் இதழ்களில் போக்கப்பட்டு விடுமேயானால் “பொது அறிவு உலகம்” எனும் அந்த ஏடு; புதிய செய்திகளைத் தாங்கி விளங்கும் புதையலாக - கருத்துக் கருவூலமாக - வரலாற்றுப் பெட்டகமாக - தகவல்களின் களஞ்சியமாக - அறிவுச் சுரங்கமாக அமையும் என்பதில் அணுவளவு ஐயப்பாட்டுக்கும் இடமே இல்லை.
இனி அதில் உள்ள தகவல்களுக்குள் நுழைவோம். “இந்திய மானுட வளர்ச்சி ஒரு கண்ணோட்டம்” எனும் குறுந்தலைப்பில் வந்துள்ள ஒரு பெட்டித் தகவல் வருமாறு :-
(‘பெட்டி’ என்றதும் பின்னும் முன்னும் ஆவல் கலந்த வியப்புடன் திரும்பிப் பார்க்கக் கூடாது. “பெட்டித் தகவல்”
என்றால் நாலு புறமும் கோடிட்டு அதற்குள் தரப்படுகிற தகவல் என்று பொருளாகும். ‘பொருள்’ என்றால் ‘அர்த்தம்’ என விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.)
இந்திய மானுட வளர்ச்சி எந்த அளவுக்கு நமக்குத் திகிலூட்டுகிறது என்பதை இதோ இந்தப் புள்ளி விவரங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் மக்கள் தொகை 104 கோடியைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. நின்று கொண்டிருக்கிறது என்று கூறாமல் சென்று கொண்டிருக்கிறது என்கிறேனே; அதைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
பாரதியார் காலம்; தொல் பழங்காலம் அல்ல - நடந்து முடிந்த சுதந்திரப் போராட்டக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர்தான். அவரது கவிதைகளிலே இடம்பெற்ற இந்திய நாட்டு மக்களின் தொகை
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை - வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே”
*
“முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்”
என்ற பாடல்களின்படி பார்த்தால் 30 கோடி மக்கள் என்பது; இன்றைய மக்கள் தொகை 100 கோடியில் மூன்றில் ஒரு பங்காகத் தான் இருந்திருக்கிறது. அதுவும் பாகிஸ்தான் பிரியாததற்கு முன்பு! பர்மாவும் நம்மோடு இணைந்திருந்தபோது! அவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால்; முப்பது கோடிக்கும் குறைவாகவே இந்திய மக்கள் தொகை இருந்திருக்க முடியும். ஆனால் அந்த எண்ணிக்கை; எத்தனை மடங்கு அதிகமாகி நூறு கோடியைத் தாண்டிச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்த்திடவேண்டும்.
இந்த நூறு கோடியில் -
14 வயது வரையில் உள்ளோர் 32.2 சதவிகிதம்;
15 முதல் 64 வயது வரையில் உள்ளோர் 63 சதவிகிதம்;
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4.8 சதவிகிதம் என்றும் அந்தப் பெட்டிச் செய்தித் தகவல் கூறுகிறது.
பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 23.28
இறப்பு விகிதம் 1000 பேருக்கு 8.49
சராசரி ஆயுள் 63.7 ஆண்டுகள்
மொத்தத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் 59.5 சதவிகிதம்
விவசாயத்தில் ஈடுபட்டோர் 60 சதவிகிதம்
தொழில் துறையில் ஈடுபட்டோர் 17 சதவிகிதம்
சேவையில் ஈடுபட்டுள்ளோர் 23 சதவிகிதம்
வேலை வாய்ப்பற்றவர்கள் 8.8 சதவிகிதம்
உணவுக்குக்கூட சம்பாதிக்க இயலாதவர்கள் எண்ணிக்கை 4 கோடி பேர் என உயர்ந்துள்ளது.
இந்தியா முழுதுமுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை பத்தொன்பது கோடியே இருபது லட்சம்.
தனி நபர் ஆரோக்கியத்திற்காக இந்தியா செலவிடுவது 80 டாலர் - ஆனால் அதற்காக சீன நாடு செலவிடுவது; 224 டாலர்!
ஆண்டுதோறும் ‘மானுட வளர்ச்சி அறிக்கை’ வெளியிடுகிற ஐக்கிய நாடுகள் வளர்ச்சி நிறுவனம்; 2004ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் அந்த வளர்ச்சிக் குறியீடு கணக்கீட்டில் இந்தியா 127ஆம் இடத்தில் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையின்படி நார்வே முதல் இடத்திலும், சுவீடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா எட்டாவது இடத்திலும், இங்கிலாந்து பனிரெண்டாவது இடத்திலும் வருகின்றன.
ஒவ்வொரு நாடும் முக்கியமாக; மனித ஆயுள், கல்வியறிவு, வாழ்க்கைத் தரம் போன்றவைகளில் எப்படியுள்ளன என்பதை குறியீடுகள் மூலமே ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்தியா, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டு, உணவுப் பொருள்களின் இறக்குமதியைச் செய்து வருவதற்கும் - மக்கள் தொகை பெருகும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடவும் முடியாது; மறுத்து விடவும் முடியாது.
நீர்வளம், நிலவளம், கனிவளம் போன்ற இயற்கை வளங்கள் ஏற்கனவே ஓர் எல்லைக் கோட்டுக்குள் இருந்தவை மக்கள் தொகை வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு வளராத நிலையில்; மக்கள் எண்ணிக்கை மாத்திரம்; ஓர் என்பது ஆண்டுகளுக்குள் மூன்று நான்கு மடங்கு அதிகமாகிவிட்டால் நாட்டின் பொருளாதார முன்னேற்றமே முடங்கிப் போகவும்; வளர்ச்சியில்லை; தளர்ச்சிதான் என்று வருந்தி வாழப் போகவும் தான் வருங்காலத்து வழித்தோன்றல்கள் தயாராக இருந்திட வேண்டும்.
மூன்று பேருக்கு சமைக்கப்பட்ட உணவு; இரண்டு பேர் விருந்தினர் வந்து விட்டால்; ஐந்து பேருக்கு நிறந்து பரிமாறி விடலாம் - அதுவே பத்து பேர் என்று ஆகி விட்டால் சிலர் பட்டினி கிடந்தால்தானே; மற்றவர்க்குப் பரிமாற முடியும். இந்த விளக்கங்கள் எல்லாம் விரிவாகத் தரப்பட்டு, அரசின் சார்பிலேயே நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்; இப்போதெல்லாம் முழு வேகத்தில் இல்லாதது பெருங்குறையேயாகும்.
“காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்; இதிலென்ன குற்றம்?”
என்று சுயமரியாதை இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கேட்டது; வீட்டில் குழந்தைக் கட்டுப்பாடு வேண்டுமென்பதற்காக மட்டுமல்ல; நாட்டிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு கண்டிட; ஒவ்வொரு வீட்டிலுமுள்ள தம்பதியர் அக்கறை காட்ட வேண்டும் என்பது மிக அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
அக்காலத்திலேயே சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கர்ப்பத் தடைக்கு ஆதரவாகவும் - குடும்பக்கட்டுப்பாட்டினை வற்புறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுண்டு.
இக்காலத்திலும் சமூகப் பிரக்ஞையுடன்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு குடும்ப நலத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, நாட்டின் வளர்ச்சியில் - அக்கறையுடைய அனைவரும் முன்வரவேண்டும்.
படகில் எத்தனை பேர் பயணம் செய்ய வேண்டும் என்ற கணக்கை மீறினால்; படகு என்ன ஆகும்? பயணிகள் என்ன ஆவார்கள்?
படகுக்குரிய கணக்குக்குத்தான் நாட்டுக்கும் என்பதைப் பகுத்தறிவு அடிப்படையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
26 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்