கட்டுரை 47 / 50
கலசங்கள், கலங்கரை விளக்கங்களாகலாம்!
Finials Can Become Lighthouses!
அச்சுப் பக்கம் 204–208
scan 204 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நான், என் இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள்; பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள் கொண்ட அப்புத்தகம், “கவிதை மழை” எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள அன்பு நண்பர் ‘சின்னக் குத்தூசி’ அவர்கள்; அந்த அணிந்துரையின் ஆரம்பமாக -
“தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன்” என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அருப் தருமோ சிவராமு என்கிற பிரமிள்!”
என்று எழுதியுள்ளதையும் படித்து விட்டு, “பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன்தான் - வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்” என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.
நான் அன்றாடம் உடன்பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் பல நூற்றுக்கணக்கான கடிதங்களில் “மு.க.” என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும் - தமிழில் மற்றவர்களுக்கு எழுதும்
கடிதங்களில் எல்லாம்; மு. கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப்புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.
1937–38ஆம் ஆண்டில் 13 அல்லது 14ஆம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும் “செல்வ சந்திரா” எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் “T. M. கருணாநிதி” என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால்; எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட; அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என் கையெழுத்திலேயே;
“தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரிகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக் கிறது”
என்பதை எத்துணை நெஞ்சத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன்; என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான் செய்கிறது.
கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப் பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என் தமிழ் எழுத்துத் திறனும் வடிவும்; இன்று ஓரளவு தரமாகத் தென்படுகிறதென்றால் - இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண்போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது!
சுய புராணம் என்று கருதி; யாரும் மனத்துக்குள் சிரிக்கக் கூடாது - முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட; எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின் சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட - இன்றைய “சிந்தனையும் செயலும்” சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல
எனக்கு உண்டு. எடுத்துக் காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்!
“கண்ணதாசா! என் எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!”
எனத் தொடங்கி,
“இளவேனிற் கவிதைகளால் இதய சுகம் தந்தவனே! உன் இதயத் துடிப்பை என் நிறுத்திக் கொண்டாய்?”
எனக் கதறியமுது,
“கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ! கல்லறைப் பெண்ணின் மடியிலேயும் அப்படித்தான் தாவி விட்டனையோ; அமைதிப் பால் அருந்தித் தூங்கிவிட?”
என இரங்கல் பாடி ஏங்கித் தவித்தேனே;
அந்த ஆருயிர் நண்பர் கண்ணதாசன், கவிதைப் புகழ்மலையின் உச்சியிலே கொடி நாட்டியவர்;
அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக; இதோ ஓர் ஆதாரபூர்வமான தகவல்.
இத்தகவல்; 16-10-2005 என்று தேதியிட்ட “குங்குமம்” வார இதழில் 20ஆம் பக்கத்திலும், 74ஆம் பக்கத்திலும் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல். சீனிவாசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ். கண்ணப்பனின் மனைவி திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்
களிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின் கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம். அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, விடுதியில் தன் உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார். அவர் கையெழுத்துடன் கூடிய அக்கடித நகலை இத்துடன் இணைத்துள்ளார்.
(கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடிதத்தின் நகல்)
என் நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது
“தலையணை உறை”யை “தலகாணி உறை”
என்று எழுதியிருப்பதுதான்; நாம் கவனிக்கத்தக்கது.
ஆறாம் வகுப்புப் படிக்கும்போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து - “தலையணை உறை” என்பதைத் “தலகாணி உறை” என்று தவறாக எழுதியதற்காக; தமிழ்த் தாய் அவரைச் சபித்துச் சாயமிட்டு விட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!
தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்தி விட்டாள்!
அதன்படி கண்ணதாசன்; சுய வலிமையைப் பயன்படுத்தினான் - அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார் - பாடுபட்டார் - தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்களை ஆக்கிக் கொண்டு - முயற்சியால் முன்னேறினார் - முறையாகத் தமிழ் கற்றார் - சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.கா.மு. ஷெரிப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக் கூத்து மேலாளர், மறக்க முடியாத நண்பர் சுலைமான் என்பார்; என்னிடம் கண்ணதாசனைக் காட்டி;
“சார்! இவர் இங்கே “சண்ட மாருதம்” பத்திரிகை ஆசிரியர் “எழுந்தால் காளமேகம்தான்!” என்பது போல “இவர் எழுந்தால் சண்டமாருதம்தான்” என்று புகழ்ந்ததை; இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.
தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக் கூட்டத்தில் ‘கவிஞர்’ என்ப புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.
காலத்தின் கோலம் மாறி முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும்; “உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.
திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்கலாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்குநோக்கித் தெண்டனிட்டன!
கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ; அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!
“தலையணை உறை” என்பதை “தலகாணி உறை” என்று எழுதியவர்; தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால்;
இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலா மன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால்; கலசங்கள் கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?
எனவே என் வேண்டுகோள்;
இளைஞர்கள்; மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளி விட;
வரலாறு படியுங்கள் -
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள் -
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள் -
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள் -
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள் -
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள் -
தியாகிகளைப் பாராட்டுங்கள் - நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப்
படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை
வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.
27 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்