கட்டுரை 48 / 50
நல்வழிக்கு நாட்டாரய்யாவின் உரை!
Nattarayya's Commentary on Nalvazhi!
அச்சுப் பக்கம் 210–212
scan 210 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நாட்டார் அய்யா என்று நாமணக்க நல்ல தமிழ் மணக்கத் தமிழ் ஆர்வலர்களால் அழைக்கப்பட்ட பெரியவர் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தமிழ்க் காவலராக வாழ்ந்தவர் மட்டுமல்ல; தமிழினம் சாதிக் கூறுபாடுகளால் சீரழிந்து விடாமல் திகழ்ந்திட வேண்டுமென்பதிலும் தீராத அக்கறை கொண்டிருந்தவர். அக்கருத்தை வலியுறுத்திக் கட்டுரைகள் நூல்கள் தீட்டியவர். ஒளவைப் பிராட்டியார் இயற்றிய “நல்வழி” அதிவீரராம பாண்டியர் இயற்றிய “நறுந்தொகை” ஆகிய நூல்களுக்கு அவர் எழுதியுள்ள அரிய உரை எளிமையானது மட்டுமல்ல எழிலார்ந்தது எனவும் பாராட்டப் பெற்றதாகும்.
அவர் வழங்கியுள்ள “நல்வழி” நூலுக்கான உரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது “முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று” எனத் தொடங்கும் பாடலைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன். பாடலின் முழுவதும் படித்து, நாட்டாரய்யா என்ன உரை எழுதியுள்ளார் என்பதையும் ஆவலுடன் அறிந்து கொள்ள விரும்பினேன்.
“முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு”.
என்ற பாடலுக்கு அவர் கண்டுள்ள உரை வருமாறு:-
“முப்பது வயதினளவிலே; காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றமும் ஒழியப் பெற்று, கேவலப் பொருளாகிய கடவுளை (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே அடையானாயின், அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகாத்தலின்றி) முலையினை மாத்திரம் உடையராகல் போல கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.”
“மூப்பு வருவதற்குள்ளே காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களை அகற்றி மெய்ப் பொருளை அடைந்து இன்புற முயலல் வேண்டும் என்பதே பொழிப்புரையாகும்” என்கிறார் உரையாசிரியர் ந.மு.வே. நாட்டாரய்யா! மேலும் இதனை எளிமையாகவும் தெளிவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்கு; “கல்வி மட்டும் கற்று; கடவுள் என்ற உணர்வைப் பெறாதவராய் இருப்பது; கணவருடன் இன்பம் அனுபவிக்காமல் ஒரு பெண், முலைகளை மட்டும் பெற்றிருப்பது போலவாம்!” எனப் பொருள் கூறுகிறார்.
மூன்றற்று என்பதற்கு நாட்டாரய்யா அவர்கள் விரித்துரைக்கும் பொருளாவது; காமம் - வெகுளி - மயக்கம் என்ற மூன்றும் அற்ற நிலை என்பதாகும்.
அடுத்து, “ஒரு பொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின்” என்பதற்கு அவர் உரை எழுதும்போது “கடவுளைத் தவறாமல் தன்னுள்ளே அடையானாயின்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் கடவுள் என்று மட்டும் நேரடியாகக் குறிப்பிடாமல் “கேவலப் பொருளாகிய கடவுளை” என்று குறிப்பிடுகிறார்.
எடுத்த எடுப்பில் எல்லோருக்கும் வியப்பே தோன்றும் - அஃதென்ன; கடவுளை கேவலப் பொருள் என்று கூறுவது? நல்வழி பாடிய ஒளவையார் அப்படியா பாடியிருப்பார் எனத் திடுக்கிடுவர்!
நானும் தமிழ் அகராதியைப் புரட்டத் தொடங்கினேன். “கேவலம்” என்பதற்கு அற்பம் - அவமானம் - தாழ்நிலை - உறுதி - ஒழுங்கு - இணையற்றது என்று பலவிதமான பொருள்களும்,
“கேவலப்படுத்துதல்” என்றால் “அவமதிப்புச் செய்தல்” என்ற பொருளும் அகராதியில் இருப்பதைக் கண்டு; இந்தச் சொல்லை எப்படிக் கடவுளுக்கு நாட்டாரய்யா அவர்கள் பயன்படுத்தினார்கள் என்ற வினா, நெஞ்சில் பெருரெடுத்திடவே மேலும் கூர்மையாக அகராதியை நோக்கினேன். அய்யம் நீக்கினேன். அகராதியில் “கேவலப் பொருள்” என்பதற்கு ஒரே பொருளாக “பரப்பிரம்மம்” என்று கூறப்பட்டிருக்கிறது. ஆம்; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - வெளியிட்டுள்ள கழகத் தமிழ் அகராதியைத்தான் சான்றாகக் கொண்டு சொல்லுகிறேன்.
இதிலிருந்து தமிழ்ச் சொற்களுக்கு; ஒன்றுக்கொன்று வேறுபாடான - மாறுபாடான - முரண்பாடான பொருள்கள்; அச்சொற்கள் பெறும் இடத்துக்குத் தக்கவாறு அமைவதை அகராதி வாயிலாக அறிய முடிகிறது என்பதற்காகவே அதனை எடுத்துக்காட்டும் பணியை இந்த நல்வழிப் பாடலையும் இதற்கு நாட்டாரய்யா அவர்கள் எழுதியுள்ள உரையையும் பயன்படுத்தி, மேற்கொண்டேனேயன்றி; வேறு நோக்கம் எதுவும் கிஞ்சிற்றுமில்லை.
உதாரணமாக; தமிழ் அகராதியில் “கானவர்” என்றால் “குறிஞ்சி நில மாக்கள்” என்றும், “முல்லை நில மாக்கள்” என்றும், “பாலை நிலத் தலைவர்” என்றும், “வேடர்” என்றும் பொருள்கள் காணலாம்.
“கானவர்” என்பதை “கானவன்” என்று மாற்றிப் பொருள் தேடினால் அதே அகராதி; “குரங்கு” என்றும் குறிப்பிடுகிறது.
“மக்கள்” என்றால் “மனிதர்” என்கிறது அகராதி - அதே மக்களுக்குக் கால் முளைத்து “மாக்கள்” என்றால்; “பகுத்தறிவு இல்லாதவர்” என்றும், ஐயறிவு மக்கள் என்றும் - ஏன்; ‘மாக்கள்” என்றாலும் “மனிதர்” தானென்றும் அதே அகராதி பொருள் கூறவும் தவறவில்லை.
“ஏல்” என்பதற்கு “ஒப்புக் கொள்ளுதல்” என்றும் பொருள் உண்டு - “மாறுபடுதல்” என்றும் பொருள் உண்டு. “இச்சை” என்பதற்கு “ஆசை” என்றும் “பொய்” என்றும் பொருள் கூறுகிறது
அகராதி! “இல்” என்றால் “வீடு” என்றும் பொருளாகும். அது “இல்லாமை”யும் ஆகும்!
என்ன விந்தை? ஒரு “கேவலப் பொருள்” தமிழில் எத்தனை சொற்களுக்கு எத்தனை விதமான பொருள்கள் இருப்பதை எடுத்துக்காட்டப் பயன்படுத்தியிருக்கிறது பார்த்தீர்களா?
இதை விளக்கும் வாய்ப்பையும், இந்த விவரங்கள் அறியும் வாய்ப்பையும் எனக்கும் உங்களுக்கும் அளித்தது; “நல்வழி” பாடும், நாட்டாரய்யா தீட்டிய உரையுமல்லவா!
29 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்