கட்டுரை 49 / 50
அந்தாதி பாடிய அருதகுட்டி நாடார்
Aruthakutti Nadar Who Sang an Anthathi
அச்சுப் பக்கம் 214–219
scan 214 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நேற்று வரையப்பட்ட “சிந்தனையும் செயலும்” எழுத்தோவியம்; வழக்கம்போல் கருத்தோவியமாகவும் அமைக்கப்பெற்று, நல்வழிப்பாடல் ஒன்றுக்கு நாட்டாரய்யா வழங்கியுள்ள உரை வாயிலாக, தமிழில் உள்ள சொற்கள், இடத்துக்கு ஏற்றவாறு எப்படியெல்லாம் பொருள் கொள்ளத் தக்கவைகளாக உள்ளன என்பதை அகராதியை ஆதாரமாகக் கொண்டு விளக்கியிருந்தேன்.
இன்றையதினம் “சிந்தனையும் செயலும்” அருதகுட்டி நாடார் என்னும் கவிராயர் இயற்றியுள்ள “சிதம்பர அந்தாதி கதைப் பாடல்” பற்றியதாகும்.
முதலில் சிற்றிலக்கியங்களின் வரிசையில் ஒன்றாக விளங்கும் “அந்தாதி” இலக்கியத்துடன் அருதகுட்டி நாடார் இயற்றியுள்ள ‘சிதம்பர அந்தாதி’ எனும் அரிய கதைப்பாடல் தொகுப்பையும் சேர்ப்பதற்குப் பாடுபட்டு வெற்றி கண்டு; சென்னை ‘நாம் தமிழர்’ பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள திருமிகு தி. இராஜரத்தினம் அவர்களுக்கு நன்றிகூறவேண்டும்.
நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் - கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திரு. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“சந்தத்தாலும் எளிய சொல் சேர்க்கையாலும் இந்த அந்தாதி மனத்தைக் கவரும் நிலையில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாடார் சமுதாயத்தினர் பெருவாரியாக வாழ்வதால் அப்பகுதியில் உள்ள வழக்குச் சொற்கள் இடம் பெற்று உள்ளன. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் நாடார் சமுதாயத்தினரிடையே கல்வியறிவு குறைவாக இருந்ததால் இந்த மதச் செய்திகள், இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் அவற்றால் அச்சமூகத்தினரிடையே மதப்பிடிப்பு ஏற்படுமாறு புலவர் இந்தநூலைச் செய்துள்ளார்”
எனக் குறிப்பிட்டுள்ள திரு. வ.அய். சுப்பிரமணியனார் அவர்கள்,
“புதுமை நோக்கத்துடன் மேலும் பல நூல்களை நூலாசிரியர் (தி. ராஜரத்தினம்) அவர்கள் செய்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”
எனவும் தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்நூலில் காணப்படும் “அருதகுட்டி நாடார் கவிராயர் வரலாறு” எனும் துணைத் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களாவன :-
“தென்னாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை, குமரி மாவட்டங்களில் ஆவி வழிபாடு நாகரிகமற்று இருந்தது. கிராமங்களில் உள்ள தேவதைகளுக்குச் சரியான வரலாறு கிடையாது. கிராம தேவதைகளை வணங்கிய மக்களும் ஒற்றை முரசு கொட்டி ஆடு, கிடா, கோழி இவைகளைப் படையலிட்டு மாடன் போன்ற கிராம தேவதைகளை வழிபட்டார்கள்; கொடைகளை நடத்தினார்கள்.
இந்த நிலைமையை மாற்றி ஆலயங்களில் வில்லிசை மூலம் கிராம தேவதைகளின் வரலாற்றை எடுத்துக் கூறி புதிய எழுச்சியை ஏற்படுத்தியவர்தான் அருத(ன்) குட்டி நாடார் ஆவார். இவர் நெல்லை மாவட்டம் (தற்போது தூத்துக்குடி) உடன்குடி சமீபம் உள்ள தாங்கையூரில்
வாழ்ந்து வந்தார். இவர் வில்லிசைக்காகக் கதைகளைத் தேர்வு செய்து பாடல்களை எழுதினார்.
மற்றும் கிராமங்களில் உள்ள தெய்வங்களுக்கு வில்லிசைப் பாடல்கள் பல எழுதியுள்ளார். இவை அனைத்தையும் தன் சீடரான சிந்தாமணிப் புலவர் என்பவருக்குக் கற்றுக் கொடுத்து வில், குடம், உடுக்கு, ஜால்ரா, கட்டை போன்ற இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இசைக் குழு ஆரம்பித்து முதன் முதலாகக் கொல்லம் ஆண்டு 798இல் மாசி மாதம் 4ம் தேதி வெள்ளிக் கிழமை (கி.பி. 1623) தாங்கையூரில் அவரது குலதெய்வம் செண்பக நாச்சியார் திருக்கோயிலில் வில்லிசை அரங்கேற்றம் செய்தார்”.
ஆய்வு முன்னுரையாக எழுதப்பட்டுள்ள பல செய்திகளில் முக்கியமானதாக - “சிதம்பர அந்தாதி”யைப் பதிப்பிக்க எத்துணை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; எத்தனை சுவடிகள், யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
“சிதம்பர அந்தாதியைப் பதிப்பிக்கத் தேர்வு செய்து சுவடிகளைத் தேடியபோது, நண்பர், ஆய்வாளர், சு. தாமரைப் பாண்டியன் அவரது பெரியப்பாவும், வில்லிசைக் கலைஞருமான சிவசுப்பிரமணியபுரம் திரு. அ. அப்பாவு நாடாரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் ஒரு கையெழுத்துப் பிரதி இருந்தது. அங்கேயே இருந்து படி எடுத்தேன். மேலும், சுவடி தேடி உடையார் புலவர் என்பவரிடம் போனேன். அவரிடம் ஒரு காகிதப் பிரதி இருந்தது. மேலும், சாத்தான் குளம், விஜயராமபுரம், வில்லிசைப் புலவர் திரு. துரைராஜ் புலவரிடம் சென்றேன். அவரிடம் ஓலைச்சுவடி ஒன்று இருந்தது. அதனை அவரது வீட்டில் வைத்துப் படியெடுத்தேன். இம்மூன்று சுவடிகளும் ஒரே குடிவழியைச் சேர்ந்தன. நல்வழி அ. கருப்பசாமி அவர்களிடம் சென்றேன். அங்கு ஒரு கையெழுத்துப் பிரதி இருந்தது. அது ஒரு குறைச்சுவடி ஆகும். முழு ஓலைச்
சுவடியை அவர் தம் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகக் கூறினார். இவர் பல செய்திகளைக் கூறினார். அருதக் குட்டி அடிகள் தம் முன்னோர் என்றும், அருதக் குட்டி அடிகளின் குலதெய்வமான செண்பக நாச்சியார் அம்மனே தங்கள் குல தெய்வம் என்றும் கூறினார். அருதக்குட்டியடிகள் இயற்றியதாகக் கூறப்படும் பல சுவடிகள் அவரிடம் இருக்கின்றன”
இத்தனை உழைப்பினை நல்கிச் சிறிதும் அயர்வின்றி இந்த “சிதம்பர அந்தாதி” கதைப் பாடல் நூலைத் தந்துள்ளவர்களைப் பாராட்டத்தானே வேண்டும். கதையும்; அதை விளக்கிடும் பாடல்களும் அக்காலத்தைப் படம் பிடிப்பவைகளாயினும் அந்தச் சூழலிலும் அருத குட்டி நாடார் போன்ற கவிராயர்களின் ஆற்றலை வெளிப்படுத்துபவைகளாகவே அமைந்துள்ளன.
‘அந்தாதி’ என்றால் என்ன?
அந்தம் - ஆதி என்ற இரு சொற்களால் அமைவதாகும்.
முதல் பாடலின் ஈற்றடியை, அடுத்த பாடலின் முதல் அடியாகக் கொண்டு இயற்றப்படுவதே அந்தாதி எனப்படுகிறது - அந்தம் = ‘முடிவு’, ‘எல்லை’ என்றும் பொருள்படும். ஆதி = ‘முதல்’ என்றும் ‘தொடக்கம்’ என்றும் பொருள்படும். இதன் வழி வரும் சொற்றொடரே ‘அந்தாதி’ என அமைக்கப்படுகிறது.
இதற்கான எடுத்துக்காட்டு; இதோ இந்த ‘சிதம்பர அந்தாதி’யிலிருந்தே தரப்படுகிறது-
“பாரெங்கும் போற்றுஞ் சிதம்பரநாதர் பவனி தான் வரவே ஆரம்பு மாலைத் திருக்கொடி ஏத்தினார் ஆனி உத்திரத்தில்”
இதனைத் தொடர்ந்து அடுத்த பாடல்; அதாவது முடிவைத் தொடர்ந்து முதலாவதாக - அந்தத்தையொட்டி ஆதியாக;
“ஆனி உத்திரந் தன்னில் சிதம்பர ஆனந்தத் தாண்டவனார்
மேனி எங்குந் திரு வெண்ணிறமங்கிட வெம்புலித் தோலுடுத்தான்”
என நீள்கிறது, “இறைவன் உலா வருதல்” பகுதி; பல பாடல்களாக! அதில்;
“தில்லைக் கோவிந்தர் தெருவுங் கடந்தார் சிதம்பரத் தாண்டவனார் நல்ல முத்தலியார் தன் மடந்தன்னில் நாடியெழுந்தருள்”
அவ்வமயந்தான் ஒரு தாய்க்கும் மகளுக்குமிடையே ‘ஏசல்’ ஆரம்பமாகிறதாம்! ஏன்? மகள், உலா வரும் சிதம்பரத் தாண்டவனின் உருவுகண்டு மயங்கி, பெருமையுணர்ந்து பித்துப் பிடித்து அந்த ஊர்வலத்தினிடையே ஓட முனைகிறாள். அவளைத் தாய் தடுத்து;
“எல்லாருங் காண மகளே நீ சந்தியில் செல்லாதே யென்றனளே”
அந்தத் தாய் மேலும் சொல்கிறாள் மகளிடம்!
“ஆண்டி தனக்காசை கொள்வது மாதர்க்கு கூடவல்லவே மகளே!”
என்று கூறிடும் தாய்க்கு அந்த மகள் பதில் சொல்லும் விதமாக,
“அடவல்ல வென்றவுன் தில்லைச் சிதம்பரத் தாண்டி அழகைக் கண்டால் உடை தான் நெகிழவே ஆசை கொள்ளாத பேருண்டோ மாதாவே!”
என்கிறாள். மகளின் பதில் கேட்டுத் தாய்க்குக் கோபம் வருகிறது. கூறுகிறாள் அந்தத் தாய்:-
“சிறுத் தொண்டன் பத்தியறிந்திட வேண்டியே சீராள தேவனைத் தான்
அறுத்துக் கறியாய்ச் சமைக்கவே சொன்னான் அநியாயக் காரனல்லோ?”
எனக் குமுறுகிறாள்.
“அநியாயமல்ல தாயே நீ கேளா யந்தச் சீராளனுக்கே முனிவோரி லொன்றாக செங்காட்டு நங்கைக்கு முத்தி பதங் கொடுத்தோன்”
என விடையளித்து; மகள், தன் தாயை சமாளிக்கிறாள்.
மகளோ; மகேசனின் ஆனந்தத் தாண்டவத்தைப் புகழ்ந்து மயங்குகிறாள். அதையும் ஏற்றிடாத அந்தத் தாய்;
“ஆனந்தக் கூத்துமழுகுங் கண்டே சிறி தாசை மடமானாய் ஈனங்கள் சொல்லியே யேசுவார்க்கெல்லா மிடமாக்கி விட்டாயே”
என்று கண்கலங்குகிறாள்.
தன் ஆசை வெறி அடங்காது என்பதை அந்த மகள் தாயிடம் திட்டவட்டமாகக் கூறி விடுகிறாள்.
“ஏசுவார்க்கெல்லா மிடமாக்கி விட்டாலு மின்று மடலெடுத்து தில்லை யீசனைச் சேராதிருந்திடில் மாறி வெழுந்ததுதான் கொங்கையோ?”
அதுகேட்டு தாய், சீறும் புலியாகிப் பேசுகிறாள்:-
“ஒருருவாகி நெடுமாலுந் தானு முருவமும் ரண்டாகி தாருகா வனந் தன்னில் மடந்தையர் தங்களைக் கற்பழிக்க”
என்றவுடன்; தாய்க்கு மகள் விளக்கம் சொல்கிறாள்.
“தங்களில் மங்கையர் மோகித்தே வீழத் தாருகாவனத்தில் எங்கள் சிதம்பரார் செய்த பெருமையை யெண்ணத் தொலையாதே”
இப்படி ‘சிதம்பர அந்தாதி’ சிற்றின்பச் சுவைகளை சாடை காட்டி; பேரின்பம் பெறுகின்ற மார்க்கத்தையும் வலியுறுத்துகிறது.
“அந்த அவனி முனிவர்களெல்லொரு மாதரா யென்றே தொழ இந்திர லோகத்தில் பூமாரி சிந்த யிமையோர்க்களேந்திடவே சிந்தை மகிழச் சிதம்பரத் தாண்டவர் சிறப்பாக வீற்றிருந்தார் இந்திரர் தேவரிமையவ ரெல்லொரு மினிதாக வீற்றிருந்தார்.”
என்று கதைப் பாடல், பக்திப் பரவசமாக நிறைவுறுகிறது. கம்பரின் கவி நயம் இன்றுரைத்து - அதற்காக அவரைப் புகழ்வதுபோல புலமை மிக்கோர் போற்றுமளவுக்கு சிதம்பர அந்தாதி பாடியுள்ள அருதகுட்டி நாடார் எனும் கவிராயரையும் புகழத்தானே வேண்டும்.
30 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்