கட்டுரை 50 / 50
சிந்தனை செய் மனமே
Think, O Mind
அச்சுப் பக்கம் 221–224
scan 221 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போட்டுக் கொண்டு; கடைசியில் பாம்பு செத்து விடும் என்றாலும்; கீரியின் உடலில் பாம்பின் விஷம் பரவியிருக்குமென்றும் - அந்த விஷத் தன்மையைப் போக்கிக் கொள்ள கீரி; தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு மூலிகையின் மீது விழுந்து புரண்டு உடலைத் தேய்த்துக் கொண்டு விஷத்தின் வலிமையைப் போக்கிக் கொள்ளும்” என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது - ஆனால் நான் நமது பகுத்தறிவு இயக்கத்தில் இனமான உணர்வுடன் பணியைத் தொடருபவன் என்பதால் பல முனைகளில் இருந்து பல்வேறு வகையான கணைகள் பாய்ந்து; அதனால் ஏற்படும் காயங்களின் நச்சுத் தன்மையைப் போக்கிக் கொள்ள; கீரிக்குக் கிடைப்பதாகக் கூறப்படும் மூலிகை போல; எனக்குக் கிடைத்திடும் மூலிகையாகத் தந்தை பெரியாரைத்தான் கருதிக் கொள்கிறேன்”
பெரியார் திடலில் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற விழா ஒன்றில்; அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த நான் கலந்து கொண்டு, எனக்குச் சிலை அமைத்திடப் பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையாருக்கும் - ஆருயிர் இளவல் வீரமணி அவர்களுக்கும் அன்பு ஆணை பிறப்பித்து; அதற்கான நிதி வகையையும் அவர் கையாலேயே ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சியில்தான்;
நான் இந்தக் “கீரி - பாம்பு சண்டை” விஷம் போக்கும் “மூலிகை” பற்றிப் பேசினேன்.
பேசுவதும் எழுதுவதும்தானே என் போன்றோர் மனப் புழுக்கத்தை விரட்டுவதற்கான மெல்லிய பூங்காற்றை உள்ளே அனுப்புகிற பலகணிகளாகப் பயன்படுகின்றன.
மூலிகை மட்டுமா பெரியார்? மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்த மூட நம்பிக்கைக் கந்தகக் கிடங்கில் மூட்டப்பட்ட தீப்பிழம்புக்கு; முதன் முதலாகக் கிழிக்கப்பட்ட தீக்குச்சி அல்லவா! ஊழிக் காற்றெனப்படுவதால் உரசப்பட்ட எரிமலைகளைக்கூட; உதை பந்தாக உருட்டித் தள்ளும் பலம் வாய்ந்த பகுத்தறிவுத் தலைவரல்லவா!
1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பிறந்து; 1891-92ஆம் ஆண்டுகளிலேயே தனது 12ஆம் வயது முதற்கொண்டு,
“எனக்குச் சிறு வயது முதல் சாதியோ, மதமோ கிடையாது; அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால், நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே, கடவுளைப் பற்றியும், மனத்தில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய எதையும் - கடவுள் கோபிப்பாரே என்றோ, தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி - மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன், இதற்கு முன்பும் பலதடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து எனக்கு இவற்றில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன்; கண்டு பிடிக்கவே முடியவில்லை”
என்று பலமுறை குறிப்பிட்டுள்ள பெரியார் அவர்கள்; 1907ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இயக்கப் பற்றாளராக இருந்து, 1919ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராகவே ஆகி; பல போராட்டங்கள் - சிறைவாசங்கள் - எனத் தன் பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு; எதிர்நீச்சல் போடுவதில் இன்பம் கண்டு; காங்கிரசில் இருந்து கொண்டே - வைக்கம் வீரராகி - சேரமாதேவி குருகுலத்தில் சாதி வெறியை எதிர்த்துக் குரலெழுப்பி - வகுப்புரிமைக்காகப் போராடி தனது வகுப்புரிமைத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தால் - 1925ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
பெண்ணுரிமைப் போராட்டம் - இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் - சாதி ஒழிப்புப் போராட்டம் - மூட நம்பிக்கை ஒழிப்புக் கிளர்ச்சி - சமத்துவ சமதர்ம முழக்கம் - இவையனைத்திலும் இவரே பெரியாராகத் திகழ்ந்ததால் 1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் என பட்டம் சூட்டிப் பாராட்டப் பெற்றார்.
நான் யார் ?
என்று பெரியார் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது;
“ஈ.வெ. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு அதே பணியாய் இருப்பவன்.
அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும்
வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.
சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.”
என்று குறிப்பிட்டிருப்பதை இன்றைக்கும் பெரியார் நினைவிடத்தில் காணலாம். அவரது கையெழுத்துடன் கூடிய அந்த “சாசனம்” நண்பர் ஆனைமுத்துவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற அரும் பெரும் நூலிலேயும் காணலாம்.
அறிஞர் அண்ணா அவர்கள் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றபோது; நியூயார்க் மருத்துவமனையிலிருந்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில்
பேரன்புடைய பெரியார் அவர்களுக்கு,
வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. சென்னை மருத்துவமனையிலும், விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும் கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான் கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதைத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில், மனச் சோர்வுடன் துறவியாகி விடுவேனோ என்னவோ என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.”
1949 என்ற ஆண்டு; தந்தையையும் தனயனையும் பிரித்தது என்றாலும்; தன்மானக் கொள்கைப் பற்றும் - தமிழகம் பகுத்தறிவு பூமியாக - பண்பார்ந்த நிலமாக - வளம் பெற்றிட வேண்டுமென்ற குறிக்கோள் உறுதியும் - 1967ல் இருவரையும் ஒன்று சேர்த்து விட்டது.
இருவரும் இன்றில்லாவிடினும் கொள்கை உருவில் நம் இதயங்களில் குடிகொண்டிருக்கிறார்கள் - அவர்களை நினைத்தாலே நம் நெஞ்சத்தில் எந்தச் சுமையெனினாலும் அதிலும் ஒரு சுவை காணும் இயல்பு நமக்குத் தானாகவே வரும்.
இந்தச் சிந்தனையுடன் செயல்படுவோம்.
31 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்