பொருளடக்கம்

41. வலி அறிவிக்கும் வாயில்லா மொழி!

கட்டுரை 41 / 50

வலி அறிவிக்கும் வாயில்லா மொழி!

The Mute Language That Tells of Pain!

அச்சுப் பக்கம் 178–180

scan 178 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

என்ன அப்படிப் பார்க்கிறாய்? ஏன் திகைக்கிறாய்? எதற்காகக் காதைப் பொத்திக் கொள்கிறாய்?

பார்த்து ரசிக்கிறாய்; ஏன் செயல் கண்டு மகிழவும் செய்கிறாய்; மலைத்தும் போகிறாய் - பதைக்கிறாய், பதறுகிறாய் - பயந்து நடுங்குகிறாய், பல நேரங்களில் பரவசமடைகிறாய்.

என்னை உன் கண்ணுக்குத் தெரியாது - ஆனால் உன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் என் கைவண்ணம் என்பதைத் தெரிந்துகொள்.

என் பெயர் தெரியுமா உனக்கு? எனக்குப் பெயரே கிடையாது; பிறகு எப்படி நீ பெயர் சொல்ல முடியும்?

உன்னைப் போன்ற மானிடர்; உலகில் பல்வேறு தொகுப்புக்களாக இருப்போர்; அவரவர் விருப்பத்துக்கேற்ப ஒரு பெயரை எனக்குச் சூட்டி அழைப்பார்கள்.

‘ஓ! கண்டுபிடித்து விட்டேன் “கடவுள்” என்பதுதான் உன் பெயர்’ என்பாய் - அதனையும் “ஏற்போர்” - “மறுப்போர்” என்று இருபிரிவினர் இருப்பதால்; பொதுப் பெயராக - யாரும் மறுக்க வொண்ணாத பெயராக “இயற்கை” என்றே என் பெயர், அமைந்தது அமைந்ததாகவே இருக்கட்டும்.

அடையாளத்துக்காக அப்படி வைத்துக் கொள்வோமே!

“எங்கெங்குக் காணினும் சக்தியடா; எழுகடல் அவள் வண்ணமடா”

என்று பாவேந்தர் பாரதிதாசன், பாரதியாருக்கு அருகில் அமர்ந்து பாடியதாகச் சொல்வார்களே;

அந்த சக்தி எது என்பதை பாரதிதாசனே பகருவதைப் பார்!

“விரிந்த வானே, வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே, திரிந்த காற்றும் புனலும் - மண்ணும், செந்தீ யாவும் தந்தோய், தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச் செறிந்த உலகின் வித்தே, புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம் புதுமை! புதுமை! புதுமை!”

என்று அவர் பாடியதும், “இயற்கை” எனும் என்னைப் பற்றித்தானே - என் சக்தியைப் பற்றித்தானே!

நான் சுவாசிப்பதைத் தென்றல் என்பாய்; பெருமூச்சு விட்டாலோ; அதனைப் புயல், சூறாவளி என்பாய்!

ஆனந்தக் கண்ணீர் விடுவேன்; அருவியென்பாய்! கதறிப் புலம்பி, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வேன்; பூகம்பமென்பாய்! புதுமொழியில் “சுனாமி” என்பாய்; கடற்கோளினை!

இப்பொழுதாவது இயற்கையாம் என் சக்தியை உணருகிறாயா?

என்னை எதிர்த்து உன் மானிட வர்க்கம் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டம் இரு பக்கமும் இறுதி முடிவு காண முடியாத நிலையை நோக்கியே நிகழ்ந்து கொண்டிருப்பதால்தான்;

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்”

என்றும்;

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்”

என அய்யன் வள்ளுவரே; இயற்கையைத் தோல்வியுறச் செய்ய சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்; இயற்கையே வலிமை வாய்ந்தது என்றும் அதைவிட முதன்மையானது எதுவுமில்லையென்றும் என்னை பெரு வியப்புடன் புகழ்ந்துரைப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உலக மானிடருக்கும் எனக்கும் நடக்கும் போராட்ட முடிவு இறுமறி நிலையிலேயே இருப்பதை உணர முடிகிறதல்லவா?

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்” என்று இகழ்வாரைப் பொறுத்துக் கொள்பவருக்கு என்னை உவமை கூறிவிடுவதால் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ள முடியும் என்னால்? நீங்கள் அளவுக்கு மீறி சோதிக்க முனையும்போது, நான்தான் என்ன செய்ய முடியும்.

இந்தியாவிலேயே மிகப் பழைய கணக்கு முப்பது கோடி மக்கள் தொகை, இப்போது நூறு கோடியைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றால் - உலக முழுதும் உள்ள நாடுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால்; அதற்கேற்ப வசதி வாய்ப்புகள் வாழ்வதற்கான சாதனங்களின் தேவையை நிறைவு செய்திட; என்னிடம்தானே கும்பிட்டுக் கேட்கவோ; அல்லது கொள்ளையடித்து எடுத்துக் கொள்ளவோ; அல்லது போர் நடத்திக் கைப்பற்றிக் கொள்ளவோ திட்டமிட்டு செயல்பட மானிட சாதி மந்திராலோசனையில் ஈடுபட்டிருப்பதை நீயும் நானும் அறிய மாட்டோமா என்ன!

நான்தான் என் செய்வேன்; இரக்கமுள்ள ஜென்மம் - இருக்கும் வரை கொடுக்கிறேன் - எடுத்துப் போவதையும் கூடிய மட்டும் தடுத்து நிறுத்தாமல் இருக்கிறேன். என்ன இருந்தாலும் எறும்பு ஊர்ந்திடக் கல்லும் தேயும் என்பது போலக்கூட அல்லாமல் - யானைகளின் ஊர்வலமே அடிக்கடி நடந்தால் காடும் தேயுமே - நாடும் தேயுமே - உலகு சூழல்வதே ஒருநாள் ஓயுமே!

இயற்கையாம் என்னை என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ஆகாரத்துக்கான பசி என்றால்; மாமிசச் சப்பி மழலையர் பாலை அருந்திக் களிப்பர் - உங்களுக்கேற்பட்டிருப்பது அறிவுப் பசியன்றோ; அதனால் மக்களின் தேவைகளையும்

விருப்பங்களையும் நிறைவு செய்திட, மார்பில் ஊறும் பால் எங்கிருந்து உற்பத்தியென்றே தேடுகின்றீர்; அதனால் ஏற்படும் உபாதையில் நான் அழுகின்றேன் - துடிக்கின்றேன் - அலை மோதுகின்றேன் - வெகுண்டெழுந்து வெடிக்கின்றேன் - இயற்கையான எனக்கு இந்தச் செயல்பாடுகள்தான் என் வலியை அறிவிக்கும் வாயில்லா மொழி!

செயற்கை வழிச் செயல்படும் நீவீர்; சிறிது அடக்கம் காட்டி என்னையும் அடக்கி வைத்து; என்னழகைப் பருகிப் பயனடையலாமே!

அப்படி இல்லாமல் அடக்கி வைத்திட அடிமைப் பெண் கிடைத்தாள் என்று; அடி மேல் அடி கொடுத்துக் கொண்டிருந்தால் “சாது மிரண்டால் காடுகொள்ளாது” எனும் பழமொழிதான், மானிட வர்க்கத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும்!

10 - 10 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்