கட்டுரை 33 / 50
தொண்டுள்ளம்
Spirit of Service
அச்சுப் பக்கம் 145–146
scan 145 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
தொண்டன் எப்படித் தலைவனாகிறான் ? இந்தக் கேள்விக்குப் பதில்: ஒரு தொண்டனின் தொண்டுள்ளம் தொடர்வதால் அவன் தலைவனாக முடிகிறது.
32வது எண் அமைந்த “சிந்தனையும் செயலும்” தலைப்பில் நான் நெல்சன் மண்டேலாவின் இளமைக் காலத் தொண்டுள்ளத்தையும், பொதுநல வேட்கையையும், இன உணர்வின் எழுச்சியையும், தியாக மனப்பான்மையையும் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேனே; அவையெல்லாம் தலைவனாக வேண்டுமென்ற குறிக்கோளுடன் அல்ல; தனக்குற்ற இயல்பான தொண்டு மனப்பான்மை, தியாகச் செயல் இவைகளே மண்டேலாவை மாபெரும் தலைவனாக ஆக்கிற்று என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே!
இப்படித் தொண்டுள்ளம் கொண்டோர் நமக்குத் தொலை தூரத்து வெளிநாடுகளில் இருந்தும் -
நமது நாட்டிலேயே நமக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களில் இருந்தும் - அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும்
தலைவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். உயர்ந்த பிறகும் அந்தத் தொண்டுள்ளத்தைத் துறவாது ஒளியுமிழ்ந்து வழிநடத்தியிருக்கிறார்கள்.
அவர்தம் இளமைக்கால வரலாற்று நிகழ்வுகளை இளைஞர்கள் படித்துணர்ந்து அந்தப் பாதையில் நடந்திடப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வரலாற்று நாயகர்கள் இன்றைக்கு
இல்லாமல் படங்களாக, சிலைகளாக, நினைவுச் சின்னங்களாக மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் விட்டுச்சென்றுள்ள வீர வரலாறு - தியாக வரலாறு - அறிவுப் புரட்சி வரலாறு - தென்னை மரத்தில் காணப்படும் வடுக்களைப் போல; கவனமாக நம்மால் - நமது இளைஞர்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.
தென்னம் பிள்ளை நடப்பும்போது இரண்டொரு மட்டைகள் தோன்றும்; பின்னர் அவை ஒவ்வொன்றாக விழும் - மட்டைகள் விழுந்து விழுந்து; மரம் உயரமாகத் தோன்றும் - மட்டைகள் முதிர்ந்து ஒவ்வொன்றாக விழ விழ; மரத்தின் உயரமும் அதிகமாகும் - இடையிடையே பழுத்து விழுகின்ற மட்டைகள் ஒலைக் கீற்றுகளாகப் பயன்படும் - ஏழையர் வீட்டுக்கு நிழலாகும் - மரபு கருதி பச்சை மட்டைகளும் மற்ற நிகழ்வுகளுக்காக வெட்டப்படுவதுண்டு - எல்லாமே பொது நலப் பயன்தானே!
மறைந்த மட்டையானாலும்; மரம் அறவே மறையாதிருக்கும் வரையில் அந்த வடுக்களும் மறையாதிருக்கும்; என்பது மட்டுமல்ல; தென்னையின் உச்சி வரை சென்று இளநீரோ தேங்காயோ பறிப்பதற்கு; கால்கள் பதித்து ஏறுவதற்கேற்ற படிகளாக அமையும் - வடுக்கள், படிகள் ஆவது போலவே வாழ்வை முடித்த பெரியவர்கள் - தியாகிகள் - வீரர்கள் - ஆக்கப்பணி புரியும் இளைஞர்கட்கு வரலாற்று ஆதாரமாகிறார்கள். வடுக்களைப் படிகளாக்கிக் கொள்வதுபோல அவர்தம் வரலாற்றை வாலிபர்கள் வழிகாட்டிகளாக்கிக் கொள்ள வேண்டும்.
இதை எழுதும் நான்; தலைவனாக விளங்குகிறேனோ இல்லையோ; இளமைதொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன். ‘மானமிகு’ இல்லையேல் ‘மாண்புமிகு’க்கு மதிப்பில்லையென்று அறிந்தவன்.
தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைத்தான் பாராட்ட முடிகிறது; பிஞ்சிலேயே பழுக்க முனைவது பேராசையாகி நிராசையாகவும் ஆகிவிடுமல்லவா? பூவாகிப் பிஞ்சாகிக், காயாகிக் கனியாகும் வரையில் காத்திருந்திடாமல் ஒவ்வொரு பருவத்திலும் தொண்டு செய்து பழுத்த பழம் என்பதால்தானே அந்தப் பகுத்தறிவுப் பழம், மனிதர்க்குப் பல்சுவை தரும் விருந்தாகவும் - பயனளிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. வழித்தோன்றல்களையும் உருவாக்கியுள்ளது.
அவர் பிறந்த நாளையும், அவருடன் இணைந்து பணிபுரிந்த நாளெல்லாம் தனக்குச் சிறந்த நாள் என்று கூறியவரும், இளைஞர்களை ஈட்டி முனைகளாக ஆக்கியவருமான அறிஞர் அண்ணா பிறந்தநாளையும் கொண்டாடுவது அரசியல் ஆர்ப்பாட்டமல்ல; இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஊற்றுப் பெருக்காய்ப் பீறிட்டெழும் இலட்சிய முழக்கமாகும்!
இளமைப் பெறும் தொண்டுள்ளம் - இலட்சியவாதிகளை இப்படித்தான் உருவாக்குகிறது; தலைவர்களாக - ஒரு நாட்டின் அதிபர்களாக - வழிகாட்டிகளாக!
எனவே இளைஞனே! நீ காற்றைப் போல் வீசிக் கொண்டிரு; தென்றலாகவும் மக்களுக்கு சுகம் தருவாய்! புயலாகவும் மாறி பொல்லாங்குகளை இடறி எறிவாய்!
15 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்