கட்டுரை 32 / 50
மண்டேலா
Mandela
அச்சுப் பக்கம் 139–143
scan 139 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
1990 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் காலை திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது; மகிழ்ச்சி பொங்கிட துள்ளிக் குதித்துக் கொண்டு மேடையிலிருந்த ஒலிபெருக்கியின் முன்னால் நான் வந்து நின்றேன். அலைகடலெனக் குழுமியிருந்த தமிழ் மக்களைப் பார்த்துச் சொன்னேன்.
“தமிழ்ப் பெருங்குடி மக்களே!
கழக உடன்பிறப்புக்களே!
எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி;
27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
தென்னாப்பிரிக்கா நாட்டின் கறுப்பர் இனத்தலைவன்
நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு
விட்டார் - இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட
மாநாட்டுப் பந்தலில் குழுமியிருப்போர் அனைவரும்
எழுந்து நின்று தொடர்ந்து கையொலி செய்யுங்கள்”
இந்தக் கருத்தமைந்த என் வேண்டுகோள்கேட்டு; மண்டேலா விடுதலையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோர் மாநாட்டில் “நான்
போதும் போதும்” என்று கையமர்த்தும் வரையில்; கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழக்கத்தைச் செய்தனர்.
உலகமே அந்த ஒரு மனிதனின் சிறைவாசத்தைப் பற்றித்தான் அப்போது பேசிக் கொண்டும்; கண்கலங்கிக் கொண்டுமிருந்தது. தென்னாப்பிரிக்கா நமது அண்ணல் காந்தியடிகள் இந்திய மக்கள் உரிமைக்காக குரல் எழுப்பி அறப்போர் முறையை அறிமுகப்படுத்திய மண்! அண்ணல் நடத்திய அந்தப் போராட்டத்தில் இந்திய நாட்டின் தமிழ் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான நாகப்பன், நாராயணசாமி என்ற வாலிபர்களும், தில்லையாடி வள்ளியம்மாள் என்ற பெண்மணியும்; சிறை புகுந்து, உடல் நலிந்து, உயிர் விட்டார்கள் என்பது வரலாறு - அந்த வரலாறு என்றும் நினைக்கப்படும் வண்ணம் கழக ஆட்சியின் கைவண்ணத்தால் உருவான அரிய சின்னங்கள் இன்னும் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன. தென்னாப்பிரிக்காவிலும்கூட நமது இந்தியப் பிரதமராக நமது அணியின் நாயகராக விளங்கிய திரு. குஜ்ரால் அவர்கள் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் அந்தத் தியாகிகளின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது உணர்ச்சிமிக்க ஓர் நிகழ்ச்சியாகும்.
அந்தத் தென்னாப்பிரிக்காவில் கறுப்பர் இன விடுதலைக்காக வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிர்த்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா; பின்னர் விடுதலைக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றது பற்றியும் - அவரது துணைவியர்கள் அவரது தியாகப் போருக்குத் துணைநின்றது பற்றியும் - அவரது வாழ்க்கை வரலாறு கூறும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியும் - எதுவும் விளக்க வேண்டிய அவசியமின்றி; அந்த மாவீரனின் வைர நெஞ்சம் - அவன் வளர்ந்த சூழ்நிலை - ஏற்றுக் கொண்ட அடக்குமுறை - கட்டிக்காத்த தன்மான உணர்வு - வழுக்கல் இல்லாத பொது வாழ்வு - இவையனைத்தும் அவரது இளமைக் காலத்திலேயே வாய்க்கப் பெற்றவைகளாக இருந்ததை எண்ணி, வியப்பு அடைகிறோம் - அவ்வழி வளரும் இளைஞர்கள் எவராயினும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.
1918 ஜூலை 18 மண்டேலா பிறந்த நாளாகும் - கறுப்பின மக்களிடையே நெல்சன் மண்டேலா குடும்பத்தினர் ஃகோசா இன வகையைச் சேர்ந்தவர்கள். அக்குலத்தின் தலைவராக மண்டேலாவின் தந்தை இருந்தார். அவர் பெயர் ஹென்றி கான்யிஸ் வா காட்லா என்பதாகும். அவருக்கு நான்கு மனைவிகள் - பனிரெண்டு குழந்தைகள் - மூன்றாம் மனைவியின் மகன்தான் நெல்சன் மண்டேலா.
குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர் - குடும்பத்துக்கு மொத்தம் மூன்று சின்னஞ்சிறு குடில்கள் - ஒன்று சமைத்திட; ஒன்று பொருள்களை சேமித்திட - ஒன்று உறங்கிட! பாய்களில்தான் படுக்கை அவர்கள் அனைவருக்கும்!
ஆரம்ப வயதில் ஆடு, மாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுத்துப் படிக்க அறியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பி வைத்தார்.
1928 ஆம் ஆண்டுக்குள் மண்டேலாவின் தந்தை இறந்து விடவே, அந்தத் தந்தையின் மைத்துனரான “ஜோங்கின்டாபா” என்பவர், மண்டேலாவின் படிப்பைக் கவனித்துக் கொண்டார்.
கயூனு எனப்படும் மண்டேலா பிறந்த ஊரில் ஓய்வு நேரங்களில் பெரியோர்கள் கூறும் தமது இனத்தவர் பற்றிய பழைய கதைகளையும், வெள்ளையர்களால் தம்மின வரலாறுகள் மறைக்கப்பட்டதையும், வெள்ளையர் நுழைவுக்கு முன்பு அங்கிருந்த கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறைகளையும் பெரியோர்கள் கூறிடக் கேட்டு புத்துணர்ச்சி பெறும் மண்டேலா, படிப்பையும் விடவில்லை; ஆடு மாடு மேய்க்கும் வேலையையும் தொடர்ந்தார்.
அதே சமயம் தமது இனத்தாரின் துயர்துடைத்து, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்று அந்த இளம் வயதிலேயே அழுத்தமான உறுதி பூண்டார் மண்டேலா.
1938 ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன் கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் “ஹெல்ட் டவுன்” கல்லூரியிலும் - பிறகு “போர்ட் ஹேர்” கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார்.
அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விட்டுத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப்போரில் கிடைத்த முதல் தண்டனை அது!
மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார் மண்டேலா.
பின்னர் தனது மாமன் மகன் ஜஸ்டிஸ் என்பவருடன் சேர்ந்து ஜோகன்ஸ்பெர்க் நகருக்குச் சென்று தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார். அங்கிருந்தும் அவரது உறவினர் தூண்டுதலால் வெளியேற்றப்பட்டதால்; மண்டேலா சட்டம் படித்திட முனைந்தார். ‘லாசா சிடிங்ஸ்கி’ என்ற வெள்ளைக்கார வழக்கறிஞரிடம் சட்டக் கல்வியில் பயிற்சி பெற்று திறமையாளரானார்.
மண்டேலா வாழ்க்கை கட்டுப்பாடுமிக்கது என்றும், அதிகாலையில் எழும் வழக்கமுடையவர் என்றும் - நாளும் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொண்டவர் என்றும் - எளிமையான உணவே அருந்தி, எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர் என்றும் - பெண்களுக்குத் துணையாக அடுக்கலை வேலைகளில்கூட ஈடுபடுவார் என்றும் - அவரது சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
கறுப்பர் இன மக்களுக்கும் வெள்ளையருக்குமிடையே கடுமையான புகைச்சலும் - மோதுதல்களும் இருந்தபோதிலும்; மண்டேலா, இருதரப்பு மாணவர்களிடமும் பரந்த மனத்துடனும் பண்பாட்டுடனும் நேசமாகப் பழகி, அமைதியாகக் காந்திய வழியிலே அறப்போர் நடத்தி இன வேற்றுமைக் கொடுமையை அகற்ற நினைத்தார்!
1948ஆம் ஆண்டு மண்டேலா இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில்; கறுப்பின மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அவர்
கண்களை உறுத்தின. “காஃபிர்” என்ற இழிந்த வார்த்தையினால் கறுப்பின மக்கள் அழைக்கப்பட்டதையும் - தெருக்களில் நடமாட முடியாமல் தடுக்கப்பட்டதையும் - மண்டேலாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமா ? கறுப்பின மக்களின் நிலங்களை வெள்ளையர் பறித்துக் கொண்டனர் - வெள்ளையர் கறுப்பரிடையே காதல் மற்றும் கலப்பு மணங்கள் - சட்ட விரோதமாயின - இனப்பகை; பெரும் பகை - கறுப்பினத்தாருக்கு வேலைகள் மறுக்கப்பட்டன - கேளிக்கை இடங்களில் அவர்களுக்கு அனுமதியில்லை - மீறினால் கடும் தண்டனை.
இந்தக் கொடுமைகளை எதிர்த்து; 1948ல் இளைஞர் அணியின் செயலாளரான மண்டேலா; 1949ல் கூடிய மாநில மாநாடு ஒன்றில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றினார்.
அதைத் தொடர்ந்து அவர் 1951ல் இளைஞர் அணியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார்.
வெள்ளையர் வெறித்தனத்தை எதிர்த்து அமைதியாக அரும்பிய மண்டேலாவின் அறப்போர்; புரட்சி மலராகவும் பூத்திடத் தவறவில்லை.
கறுப்பு இன மக்களின் மாணவர் போராட்டமும் தொடங்கியது.
புரட்சிகள் - கிளர்ச்சிகளின் விளைவாக - சிறைப்பட்ட மண்டேலாவை நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால்; விடுதலை செய்வதாக தென்னாப்பிரிக்க வெள்ளையர் அரசு கூறியது.
அதற்கு மண்டேலா மறுப்புரைத்து, “எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைப்பட்டுள்ள சிறைச்சாலையே திருப்பி அளிக்கக்கூடியது” என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள
நேர்ந்தது. சிறையில் ஆரம்ப நிலையில் கேவலமான உணவு, அதுவும் பசியை அடக்கக் கூடியதல்ல - கல் தரையின் மீது உறங்குவதற்கு ஒரு பாய் - நாளேடுகள் வைத்திருந்தால் சிறை சட்டப்படி தண்டனை - நாள் முழுவதும் வேலை - ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் உடைகள் அவிழ்க்கப்பட்டு சோதனை - இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த மண்டேலா இளமை முதல் அவர் கொண்ட வைராக்கியத்தின் எதிரொலியாக சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் சொன்ன வாசகம் பின் வருமாறு :-
“சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்”
என்பதாகும்.
மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏராள இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும்.
12 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்