பொருளடக்கம்

34. மகளிர் பேரணி!

கட்டுரை 34 / 50

மகளிர் பேரணி!

Women's Rally!

அச்சுப் பக்கம் 148–150

scan 148 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

1928 ஆம் ஆண்டு ‘குடியரசு’ பத்திரிகையில் பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கமே பெண்கள் உரிமைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் ஆண்கள் குரலெழுப்புவது வெறும் பாசாங்குதான்; உண்மையான உணர்வுடன் ஆண்கள் எவரும் அதற்காகப் பாடுபடுகிறவர்கள் அல்லர் - என்று குறிப்பிட்டு ஆண் ஆதிக்கத்தின் போலிக் குரலில் பெண்கள் ஏமாறக் கூடாது என்று எச்சரித்ததுடன்; அதே தலையங்கத்தில் பெண்களுக்காக பெண்கள் உரிமைக்குரல் முழக்குவதும் அப்படித்தான் பயனற்றுப் போய்விடும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அய்யா பெரியார் அவர்கள் இப்படித்தான் ஓர் அழுத்தம்திருத்தமான பொதுவான கருத்தைக் கொண்டிருந்தார் என்று நாம் ஓர் அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

பாவையர் உரிமைக்கு பாடுபடுவதாக யாரும் வேடம் போட்டுக் கூடாது என்பதே தந்தை பெரியாரின் அடி மனத்தில் பதிந்திருந்த ஆணித்தரமான அபிப்பிராயமாகும்.

கடவுள் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு அந்தக் கடவுளின் பெயராலேயே கயமைச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை அடையாளம் காட்டுவதைப் போலத்தான்; பெண்ணுரிமைக்காகப் பேசுவதாக நடிப்பவர்கள்; கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதிகளாக இருப்பதைப் பெரியார் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். அந்த ஆணாதிக்கத்துக்கு ஒத்துப்போகிற அடிமை மனப்பான்மையில் காலம் காலமாகப் பெண்களும் ஊறித்

திளைத்துவிட்ட காரணத்தால் அந்தச் சிறையிலிருந்து விடுபட அவர்களாலும் அவ்வளவு எளிதில் முடியாது என்பதையும் பெரியார், அவருக்கேயுரிய; உண்மையை உரத்த குரலில் எடுத்துரைக்கும்பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நாம் கருத வேண்டும்.

ஆணாதிக்கம் - பெண்ணுரிமை என்ற சொற் பிரயோகங்களும், ஆணாதிக்கத்தை அகற்றிப் பெண்ணுரிமையை நிலைநாட்டுவோம் என்ற சூளுரைகளும் - ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக வாழ்க்கை முறை வகுத்துக் கொண்டு வாழ்கிற நிலையை அடியோடு குலைத்து விட்டு, அவர்களில் ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் தங்களிஷ்டம்போல் திரிந்து; தேவைக்கேற்ப - அது உணவுத் தேவையானாலும் - அல்லது உடலுறவுத் தேவையானாலும் - உடல் நிலை பேணக்கூடிய தேவையானாலும் - அவற்றுக்காக மட்டுமே சேர்வதும் பிரிவதும் என்ற நிலையை இருபாலரும் கடைப்பிடிக்கிற வாழ்க்கை முறையில்தான் ஆணாதிக்கம் அகற்றப்படுகிறதென்றோ; பெண்ணுரிமை கொழிக்கிறதென்றோ பொருள் கொண்டுவிடுதல் பழைய பழைய மிகப் பழைய காட்டுமிராண்டிக் காலத்திற்கு நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

எனவே ஆணோ பெண்ணோ இஷ்டம்போல் திரிந்து வாழ்வது என்ற நிலையிலிருந்து இணைந்து வாழ்வது என்ற நிலைக்கு மாறிய பிறகு; ஒருவர் புரியும் செயலால் ஒருவர் மனம் புண்படும்போது ஒருவரையொருவர் பிரிவதே பாபம்; சாபம் வந்து சம்பவிக்கும் என்ற எந்த மிரட்டலுக்கும் இடமின்றி - சட்டப்படி அதற்கான சம்மதம் பெற்றுக்கொள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை வாய்த்துள்ளது இரு பாலார்க்கும் ஏற்றதொரு நன்மையே ஆகும்.

தங்களின் வாழ்க்கைக்காக வழி வகுத்துக் கொள்ளவும் - அதில் வழிதவறி விட்டதை உணர்ந்தால்; வழி மாற்றி வகைப்படுத்திக் கொள்ளவும் சட்ட சம்மதம் பெறுவதற்கு ஆடவர்க்கும் மகளிர்க்கும் சம வாய்ப்பு இருக்கும் சமுதாய

அமைப்பில்; அவர்கள் பொதுத் தொண்டு புரிந்திட பொது வாழ்வில் ஈடுபட சம உரிமை இல்லை என்பதுதான் பெருங்குறையாடு!

அப்படியொரு தடையிருப்பதாக யார் சொன்னது? மக்களுக்கான பொது நலப் பணியாற்றுவதற்குக் கூட ஆட்சி மன்றங்களுக்குச் செல்லவேண்டுமென்றால் ஆணோ பெண்ணோ பொதுவில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று சென்றிடலாமே என்றுதான் கூறத் தோன்றும்! அது உண்மை நிலை என்றாலும்; உபயோகமற்றுப் போன துருப்பிடித்துக் கிடக்கும் உண்மை நிலை என்பதுதான் பொருத்தமானதாகும்.

அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் பொதுத் தொகுதிகளில் எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் போட்டியிடக்கூடிய சமத்துவ உரிமை ஆணுக்கும், பெண்ணுக்கும் இருப்பினும்கூட; ஆண்களே மிக அதிக இடங்களை ஆக்ரமித்துக் கொள்ளும் நிலைமை; பெண்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை காரணமாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1996 முதல் தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்பட்டு; அந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. தலித் இன மக்களுக்கான தனித் தொகுதி முறையும் நீடிக்கிற வகையில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் நடைமுறையில் இருந்து வருகிறது.

பொதுத்தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்து; அவர்களும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் - 33 சதவிகித அளவினாவது இடம்பெற; மகளிர் ஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் இன்றைய மகளிர் கோரிக்கை.

இந்தக் கோரிக்கை நிறைவேறிட; சட்டம் இயற்றாமலே; அரசியல் கட்சிகளே மகளிர்க்கு என இடங்களை ஒதுக்கலாம்

என்பது நடைமுறை சாத்தியமல்ல என்பது அனுபவ ரீதியாக உணரக் கூடிய ஒன்று.

நூறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அமருகிறவர்களில் 33 பேர் மகளிர்களாக இருப்பதற்கேற்ப சட்டமியற்றி; தேர்தல் விதிமுறைகளையும் அமைப்பதால் என்ன ஆபத்து வந்துவிடும்!

சக்தி வாய்ந்த தெய்வங்கள் மாரி, காளி என்ற பெண் தெய்வங்கள் என்கிறார்கள்.

செல்வத்துக்கு இலக்குமி, கல்விக்கு சரசுவதி, வலிமைக்கு பார்வதி என்கிறார்கள்.

“தந்தையா நாடு” என்று பாரதி மட்டுமே பாடினார் -

மற்ற எல்லோரும் “தாய்நாடு” என்றே அழைக்கிறோம்.

தாய்நாட்டில் தாய்க்குலத்துக்குரிய நியாயமான உரிமைக்குத் தடைக்கல்லாக விளங்குவது தருமா? முறையா?

ஆண் பாதி - பெண் பாதியெனும் அர்த்தநாரீசுவர தத்துவத்தை ஆகாயமளாவப் புகழ்கிறார்கள்; அரிவையர்க்கு 50 சதவிகிதமல்ல; 33 சதவிகிதத்தையாவது ஆதரிக்க முன்வரக்கூடாதா?

அனைத்திந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் தடவையாக மூன்று லட்சம் பேர் மகளிர் மட்டுமே கலந்து கொண்டு நடத்திய மகத்தான பேரணியைப் புகழ்ந்து பாராட்டக்கூடத் தேவையில்லை; அந்த உரிமைக் குரலின் உணர்வையாவது புரிந்து கொண்டு பெரியார் தொடங்கிய பெண்ணுரிமைப் போருக்கு - அண்ணா வழியில் பெரு வெற்றி கிடைத்திடப் போராடுவது பெண் வயிற்றில் பிறந்தோரின் பெருங்கடமை என உணர்வீராக! உணர்ந்து செயல்படுவீராக!

22 - 9 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்