கட்டுரை 35 / 50
திரிகடுகம்
Thirikadugam
அச்சுப் பக்கம் 152–153
scan 152 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
நான் விழுவதற்குள்ளாக எழுந்துவிடும் பழக்கமுள்ள வனல்லவா, அதனால் அருகிலிருந்த புத்தகங்களின் முகத்தில்தான் முதலில் விழிக்க நேரிட்டது. அவற்றில் மேலாக இருந்தது, நேற்றைய தினம் சின்னக்குத்தூசி அவர்கள் கொடுத்த ‘திரிகடுகம்’ என்ற நூறு வெண்பாக்களைக் கொண்ட சிறிய நூல். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று கேள்விப்பட்டோரும் உண்டு. பலமுறை அவற்றைப் படித்தோரும் உண்டு.
பதினெண்கீழ்க்கணக்கு என்பது பதினெட்டு நூல்கள். அந்தப் பதினெட்டு நூல்களுள் ஒன்றுதான் “திரிகடுகம்” என்பதாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் எப்படி நோய் தீர்ப்பதற்கும் – வருமுன் தடுப்பதற்கும் பயன்படக் கூடியவை என்று கூறப்படுகிறதோ; அதுபோல “திரிகடுகம்” நூலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்கள் அமைப்பெற்று அவை உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆக்கம் தரக் கூடியவை என்று கூறப்படுகிறது.
இந்தநூலில் வரும் நூறு பாடல்களையும் இயற்றியவர் நல்லாதனார் எனும் புலவர்.
நற்குணங்களைப் பரிந்துரைப்பதாகவும் – நன்னெறிகளை போதிப்பவைகளாகவும் – பாடல்களின் நோக்கம் இருப்பினும்; பழைய கால கருத்துக்களின் பின்னணியும் சில பாடல்களில் தலைகாட்டத் தவறவில்லை இந்த நூலில்!
இருப்பினும் மேகங்களுக்கிடையே மின்னிடும் விண்மீன்களென விழுமிய கருத்துக்களும் நம்மை ஈர்த்திடத் தவறவில்லை.
இதோ; இன்றைய தமிழகத்தின் நிலைப்பாட்டைக் குத்திக் காட்டுவது போல ஒரு பாட்டு :-
“கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.”
இதன் பொருள் வருமாறு :-
கல்வி கற்றுத் தரும் ஆசிரியர் இல்லாத ஊரும்,
சிக்கலைத் தீர்க்கக்கூடிய மூத்தவரே
அறிவு முதிர்ச்சியில்லாதவராக உள்ள அவையும்,
பகுத்தளித்து உண்பவர் பக்கத்தில்
அமர்ந்திட அமையாத நிலையும் –
நலன் விளைவிக்காமல்; தீமை
விளைவிக்கக் கூடியவைகளேயாகும்.
ஊரும், உணவருந்தும்போது பக்கத்திலிருப்போரின் குணமும், ஊரார் கூடும் அவையும் எவ்வாறு அமைந்தால் நன்மை பயக்கும் என்பதையும் – அவ்வாறு அமையாவிடின் தீமையே பயக்கும் என்பதையும் நல்லாதனார் விளக்கும் விதம் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டால் மாத்திரம் போதுமா?
ஊர் மக்கள் கல்வியாளர்களாக – குறைந்த பட்சம் கற்றவர்களாகவாவது இருந்திடப் பாடுபட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு ஊரிலும் எழுத்தறிவில்லாதவரே இல்லை என்ற நிலை ஏற்பட எழுத்தறிவிக்கும் இறைவன்களாம்
கணக்காயர்கள் எனப்படும் ஆசிரியர்கள் போதுமான அளவுக்கு இருக்க வேண்டுமல்லவா?
அதைப் போலவே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாடு பற்றி நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையான கருத்தைத் தந்த அய்யன் வள்ளுவரின் அடியொற்றி; நம் வாயிலாக வழங்கப்படும் உணவு, உடை மற்றும் பொருள்களைப் பகுத்தளித்து விட்டு நாம் நமக்குரியதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர; எல்லாம் தமக்கேயென்று எடுத்தொளித்துக் கொள்ளக் கூடாதன்றோ?
மேலும் ஒரு கருத்தாக; இந்தப் பாடலில் அவைக்களத்தில் “பிணக்கறுக்கும் மூத்தோர் இருக்க வேண்டும்” என்பதை நல்லாதனார் அத்தகைய முதிர்ச்சியுற்றோர் இல்லா அவைக்களம் நன்மை பயக்கக் கூடியதாக அமையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
இதற்கான சான்று தேடி நாம் அலைய வேண்டியதில்லை; அயல் நாடுகளில் அவைக் களங்களில் எப்போதோ; என்றோ ஒரு நாள் நடக்கின்ற அமளி துமளி; நமது நாட்டில் உள்ள பாராளுமன்ற மாயினும்; சட்டப் பேரவையாயினும்; மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களிலாயினும் அன்றாடம் நடப்பதைக் காணும்பொழுது;
அறிவு முதிர்ச்சியுற்றோர் இல்லாத அவைக்களம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீமையே விளைவிக்கும் என்று நல்லாதனார் ‘திரிகடுக’த்தின் வாயிலாகத் தெரிவுபடுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையாகத்தானே இருக்கிறது.
26 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்