பொருளடக்கம்

36. தீக்குச்சி தேடாதீர்!

கட்டுரை 36 / 50

தீக்குச்சி தேடாதீர்!

Don't Look for a Matchstick!

அச்சுப் பக்கம் 155–157

scan 155 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

தமிழ் மொழி காத்திடவும், தமிழர் உரிமை நிலை நாட்டிடவும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி திருச்சி மாநகரில் தீக்குளித்து மாண்டான். அவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ளும் முறை; ஏற்றத்தாழ வன்முறைக்கு ஒப்பானதுதான் என்று எடுத்துரைத்தும்கூட; அந்த மொழிப்போராட்டத்திலும் – அதன் பின்னர் தலைவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள், சிறை வாசங்கள், ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் நூறு பேருக்கும் குறையாத எண்ணிக்கையினர் தீயைத் தழுவியும், நஞ்சருந்தியும், உயிர்த் தியாகம் செய்துகொண்ட கொடுமையைத் தடுத்து நிறுத்திடத் திராவிட இயக்கத் தலைவர்கள் பாடாதபாடுபட்டனர். அந்தத் தியாகச் சுடர்களின் திருநாமங்களை இந்தத் திருநாடு என்றும் மறந்து விடாது என்று பெருமிதங் கொண்டு; அதே நேரத்தில் அந்த உயிர்கள் உலகில் இன்னும் பல நல்ல காரியங்களை ஆற்றுவதற்குத் தேவை; ஆகவே அவற்றை அழித்துக் கொள்ள முனையாதீர் என்ற அறிவுரையும் – அன்பான வேண்டுகோள்களும் விடப்பட்டன.

அந்தச் சோகம் சூழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். தீக்குளித்தோர் – அதனால் மாண்டு மடிந்தோர் கண்டு தீயிற்பட்ட புழுவாய்த் துடித்துமிருக்கிறேன்.

அந்த நெருப்பு மண்டலம் இப்போதும் நம்மைச் சுற்றி நீண்டுயர்ந்த சுவராக எழுந்து நிற்பது போன்ற காட்சியைக் காணச்

சகியாது கண்களை மூடிக் கொள்ளும்போதுகூட; நம்மைத் திடுக்கிட வைக்கும் ஓர் ஒலி கேட்கிறது.

“தீப்புகுதல் நன்று”

ஆம்; இந்த ஒலி ஓர் இலக்கியத்து வரியாக அமைந்து, நமக்குத் திகிலூட்டுகிறது.

உயிரனைய கணவன் இறந்தான்; இனி உயிர் வாழ்தல் இல்லையென; நீதிக்காக உயிர் துறந்த

நெடுஞ்செழியப் பாண்டியனின் நெஞ்சக மீதே வீழ்ந்து உயிர் விட்ட கோப்பெருந்தேவியைச்

சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.

கணவனையிழந்து கைம்மைக் கொடுமையை

அனுபவிப்பதோ என அலறித் துடித்து

ஆவிதனை

மாய்த்துக் கொள்வதே நன்முடிவு எனத் துணிந்த

பூதப் பாண்டியன் தேவியென –

புராதன காலத்திலிருந்து இந்தப் புதிய காலம்

வரையில் உடன்கட்டை ஏறி உயிர் விடுதல்

என்பது; பல்வேறு காரணங்களால் பழகிப்

போன ஒன்று எனினும் –

இதோ; “தீப்புகுதல் நன்று” எனும் இந்த வாசகம்; எந்தச் சூழ்நிலையில் வடிவெடுத்திருக்கிறது என்பதை “நான்மணிக் கடிகை” நமக்கு உணர்த்துகிறது.

நேற்று அருங்கருத்துகள் மூன்றினை அடுக்கி – சுக்கு, மிளகு, திப்பிலி என வகைப்படுத்தி வழங்கப்பட்ட “திரிகடுகம்” நூலிலிருந்து ஒரு பாடலை விளக்கி எழுதியிருந்தேன்.

இன்றைக்கு அதே “பதினெண்கீழ்க்கணக்கு” நூல்களின் வரிசையில் ஒன்றான “நான்மணிக்கடிகை” நூலிலிருந்து ஒரு பாடல் வரியைக் கூறிட முனைகிறேன்.

கி.பி. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் கால கட்டத்தில் விளம்பி என்ற ஊரில் பிறந்ததால் “விளம்பிநாகனார்” எனப்படும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற நூற்றி ஆறு வெண்பாக்கள் கொண்டதே “நான்மணிக்கடிகை” எனும் நூலாகும்.

வெண்பா ஒவ்வொன்றும் நான்கு மணிகள் கோத்தது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறுவனவாகும் என்பதால்; “நான்மணிக் கடிகை” ஆயிற்று!

“எதைவிட எது நன்று?” எனும் வினாவொன்றினை விளம்பிநாகனாரே கேட்டுக் கொண்டு; அதற்கு விடையாகத்தான் “தீப்புகுதல் நன்று” என்கிறார்.

இனிய இசை தரும் யாழ் எனும் கருவி அமையாதபோது பெரும் ஒலி முழக்கும் பறையோசை நன்று – பெருந்தன்மை இல்லாத ஆடவரை விட; நன்னெறியுடைய பெண்டிர் குலம் நன்று – பதங் கெட்டுப் போன பண்டத்தை உண்பதைவிட பசித் துயரைத் தாங்குவதே நன்று – என்பதாக மூன்று கருத்துக்களைக் கூறியதோடு நில்லாமல்; “தீப் புகுதல் நன்று” என எதற்காகச் சொல்லுகிறார் தெரியுமா?

“பசைந்தாரின்

தீர்தலின் தீப்புகுதல் நன்று”

அதாவது; “தம்மிடம் அன்புகாட்டி விரும்பி நேசித்தவரை விட்டு விலகி உயிர் வாழ்வதைவிட; தீயில் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் நன்று” என்கிறார்.

ஆம்; பேரன்பு கொண்டோரிடையே ஏற்படும் அந்தப் பிரிவுத் துயரம்; தீயில் விழுந்து உயிர்விட்டால்தவிர தீராது என்பதைத்தான்; புலவர் பிரான் அவ்வளவு அழுத்தம் கொடுத்து –

பண்ணமைந்த யாழோசை இல்லாத போது

பறையோசையைக் கூட

நன்று என்று கூறிட முடியும் –

ஆடவரிடம் காண முடியாத பெருமித்ததை

பெண்டிரின் பெருமையால் ஈடுசெய்ய முடியும் –

பாழ்பட்ட பண்டத்தை உண்ணாமல்;

பசித் துயரைத் தாங்கிக் கொள்ள முடியும்;

ஆனால்;

பேரன்பு பூண்டிருந்தவர்களிடையே விளையும்

பிரிவுத் துயரம்; தீக்குளித்தால்தான் தீரும்

என்று கூறுவதின் வாயிலாக –

பிரியா நட்பின் பெருமையை

உணர்த்துகிறார் என்றே எடுத்துக் கொண்டு

பிரியாமல் இருந்திட உறுதி மேற்கொள்ள

வேண்டுமே தவிர;

உடனே தீக்குச்சி மண் எண்ணெயைத்

தேடி அலையக் கூடாது.

*

“பறைநன்று பண்ணமையா யாழின் –

நிறைநின்ற

பெண்நன்று பீடிலா மாந்தரின் – பண்

அழிந்து

ஆர்தலின் நன்று பசித்தல் – பசைந்தாரின்

தீர்தலின் தீப்புகுதல் நன்று”

(பாடல் 15 – “நான்மணிக்கடிகை”)

பசைந்தார் = நண்பர்

27 - 9 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்