கட்டுரை 37 / 50
சிலம்பும் மணியும்!
The Anklet and the Gem!
அச்சுப் பக்கம் 159–161
scan 159 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
ஆசைகளைக் துறந்திட வேண்டும்; அவற்றில் மண்ணாசை பொன்னாசையைவிட வெகுவாக பெண்ணாசையை வெறுக்க வேண்டும் என்று வலியுறுத்திடத்தான்; பெண்ணைப் பெருமளவுக்கு அங்கம் அங்கமாக இழிவுபடுத்துகிற பாடல்களை, பற்றற்ற துறவிகள் இயற்றியுள்ளனர். குறிப்பாக நாலடியார் பாடல்களை வழங்கியிருப்பவர்களின் பட்டியலில் சமண சமயப் புலவர்கள் பெருமளவும் இடம் பெறுகின்றனர். அழியும் உடலின் அழகில் மயங்கி அறநெறி தவறிவிடக் கூடாது என்பதை வற்புறுத்தவே அவர்கள் அவ்வழி மேற்கொண்டுள்ளனர் என்பதை அப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. நானூறு புலவர்கள் பாடியதும் நானூறு வெண்பாக்களைக் கொண்டதுமான நாலடியார் தொகுப்பில்; இந்த என் கூற்றுக்குச் சான்றாக, இதோ இரண்டு பாடல்கள்.
“குடருங் கொழுவும் குருதியும் என்பும்
தொடருந் நரம்பொடு தோலும் – இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்”
குடல், கொழுப்பு, குருதி, எலும்பு; அவற்றுடன் தோலும் நரம்புகளும் இவற்றுக்கிடையே தசையும் நிணமும் கொண்டவளைப் பார்த்து; “குளிர்ந்த மாலையணிந்த குமரியே” என்று கொஞ்சுவதில் என்ன ரசிகபுத் தன்மை இருந்து
தொலைக்கிறது? எனக் கடுப்பாகக் கேட்கிற கருத்தமைந்த பாடலிது!
மற்றுமொரு பாடல் வருமாறு :-
“ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புண்ணும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தை – பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னும் மீப்போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு”
ஊறி நாறுகின்ற அழுக்குக் குழம்பு வெளிப்படுகிற ஒன்பது துளைகளையுடைய உடலென்கிற ஒரு குடத்தைப் பார்த்து; குறைமதியுடையோர் கவர்ச்சியால் கவரப்பட்டு; அவளை பெருத்த தோளையுடையவளே என்றும், வளையல்கள் அணிந்த வஞ்சிக்கொடியே என்றும் பிதற்றுகிறார்கள்.
நாலடியாரில் நாம் காணுகின்ற இந்த இரண்டு பாடல்களைப் போலவே, சமணப் புலவர் பெருமக்கள் பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
அவற்றுக்கிடையேயேதான் அயம்பெருங்காப்பிய வரிசையில் இடம் பெற்றுள்ள சிலப்பதிகாரமும், சீவக சிந்தாமணியும் வருகின்றன.
சிலப்பதிகாரம் இயற்றிய புலவர் பெருமான் இளங்கோவடிகளும் சீவக சிந்தாமணி தந்த சீர் திருத்தக்கத் தேவரும் சமண சமயம் சார்ந்தவர்களேயாவார்கள்.
இந்தச் சமணப் பெரியோர் இயற்றியுள்ள பாக்கள்; நாலடியார் இயற்றிய சமணப் பெரியோர்களைப் போல மாதரை – அதிலும் குறிப்பாக மகளிரை வெறுத்தொதுக்கிட வேண்டுமென்கிற அளவுக்கு அமைந்தவையல்ல; என்பது மட்டுமின்றி – கவர்ச்சி நிறைந்த கற்பனைகளுமாகும்.
“மின் தெளித்து எழுதி அன்ன விளங்கு
நுண்துகிலின் நல்லார்
பொன்தெளித்து எழுதி அன்ன பூம்புறப் பசலை
மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத்
தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த கறவையின்
கலிந்து நின்றார்”
மின்னலைக் கரைத்துத் தெளிவித்து அதனால் உறுப்புக்களை உருவாக்கியதுபோல் விளங்குகின்ற மெல்லிடையுடைய மகளிர்; தமது பொலிவுமிக்க மேனியில் பொன்னைத் தெளிவித்து எழுதியது போல் தோன்றிய பசலையில் ஆழ்ந்து; சீவகனின் தோள்களுக்கு மலைகளும் இணையாக முடியாது என்று மறைந்து ஒளிவது கண்டு கன்றினைப் பிரித் திடும்போது கத்தி நிற்கும் பசுக்களைப் போல் உருகி நின்றனர்.
சிலப்பதிகாரம் தந்த சமணப் புலவர் இளங்கோவடிகளோ; கண்ணகியும் கோவலனும்; கட்டிலறைக் காவியம் படித்ததை எவ்வளவு இன்ப உணர்வுடன் விளக்குகிறார் தெரியுமா?
“மண் மீது வாழ்வின் நிலையாமையை எண்ணி, அன்றைக்கே அனைத்தையும் துறந்திட முனைந்து பெயர்பட்டியலிட முடியாத எல்லா இன்பங்களையும் அனுபவித்தனர் – அதுவும் எப்படி? வெறி கொண்ட பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு தழுவுதல் போல்; கண்ணகியும் கோவலனும் காமர் மனைவியெனக் கை கலந்து”
என்று கற்பனையின் உச்சத்திற்கே செல்கிறது; இந்தச் சிலப்பதிகார வெண்பா!
“தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லென
வொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து – நாமம்
தொலையாத வின்பமெலாம் துன்னினார் மண்மே
நிலையாமை கண்டவர் போ லின்று”
சமண சமயத்தினர்; துறவறம் பற்றிப் பாடுதற்கு வல்லவர்களே தவிர, இன்பம் பொங்கும் அகப் பொருள் பாடல்களை இயற்றிட அறியமாட்டார் என்று அக்காலத்துப் புலவர் பெருமக்கள் தெரிவித்த கருத்துக்களுக்குச் சிறந்த பதிலடிகளாகத்தான் திருத்தக்கதேவரும், இளங்கோவடிகளும் முறையே சீவக சிந்தாமணியையும், சிலப்பதிகாரத்தையும் அகப்பொருள் அருமையும் விளங்கிட இயற்றியுள்ளனர் போலும்!
பொருள்கள் :-
தடியும் வழும்பும் = தசையும் நிணமும்
பணிகள் = பாம்புகள்
29 - 9 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்