கட்டுரை 38 / 50
செய்ந்நன்றி
Gratitude for Help Received
அச்சுப் பக்கம் 163–165
scan 163 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
தமிழில் மூன்றெழுத்துச் சொற்களாக விளங்குகிற அன்பு, அறிவு, காதல், வீரம், வெற்றி எனத் தொடரும் பெரும் பட்டியலில், இன்னும் பல சொற்கள் இடம்பெற்றாலும்கூட; நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தக் கூடியதாகவும் - அதற்கெனத் தனியொரு சிறப்பு இல்லாததாகவும் - சொல் ஒன்று உண்டென்றால் அது ‘நன்றி’ என்ற சொல்லாகவே ஆகிவிட்டது எனலாம்.
கடிகாரம் கட்டியிருப்பவரிடம் மணி என்ன என்று கேட்டு; அவர் ‘நாலு’ என்று சொன்னால்; ‘நன்றி’ என்கிறோம்.
சிற்றுண்டி விடுதியில் நாம் கேட்ட பண்டத்தையோ, பானத்தையோ கொண்டு வந்து வைக்கிற விடுதிச் சிப்பந்தியைப் பார்த்து ‘நன்றி’ என்கிறோம்.
சாப்பிட்டு முடித்து விட்டு விடுதியிலிருந்து வெளியே வரும்போது முன்பகுதியில் அமர்ந்திருக்கிற காசாளரிடம் காசினை நீட்ட, அவர் ‘நன்றி’ என்று கூறியவாறு அதை வாங்கி, கணக்கு போக மிச்சத் தொகையை தரும்போது ‘நன்றி’ என்று சொல்லிக் கொண்டே அதை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
அங்கிருந்து நேராகப் பேருந்து நிற்குமிடம் வருகிறோம் - ‘அண்ணா நகர்’ என்றதும்; நடத்துனர் பயணச் சீட்டு கிழித்துக் கொடுக்கிறார் - கட்டணத்துக்கான காசினைக் காசினியாகத் தராமல் சில்லறையாக எண்ணிக் கொடுக்கிறோம். நடத்துனர்;
“நன்றி” கூறியவாறு வாங்கிக் கொண்டு அடுத்த பயணியிடம் சென்றுவிடுகிறார். நாம் பேருந்தில் உட்கார இடம் தேடுகிறோம். ஒருவர் நகர்ந்து அமர்ந்து கொண்டு நமக்கு இட ஒதுக்கித் தருகிறார். ‘நன்றி’ எனச் சொல்லியவாறு அந்த இடத்தில் உட்கார்ந்து கொள்கிறோம்.
பேருந்திலிருந்து இறங்கி நடந்தே வீட்டுக்குச் செல்கிறோம் - “என்ன இப்படி வியர்த்துக் கொட்டுகிறது!” என்று கேட்டவாறு துணைவியார் மின் விசிறியைப் போடுகிறார் - ‘நன்றி’ என்று கூறியபடி சட்டைப் பொத்தான்களைக் கழற்றி விட்டுக் கொண்டு காற்றாடச் சாய்ந்து கொள்கிறோம் சாய்வு நாற்காலியில்!
அருகில் உள்ள திருக்குறள் உரைநாலை எடுத்துத் தருமாறு அருமை மகனைக் கேட்கிறோம். மகன் எடுத்துத் தர; அதற்கோர் நன்றிகூறியவாறு புத்தகத்தைப் புரட்டுகிறோம். காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பு, படித்துவிட்டு அடையாளம் வைத்து விட்டுப் போன அந்தப் பக்கமே கண்ணில் படுகிறது.
‘செய்ந்நன்றி அறிதல்’ என்ற அதிகாரத்தில் “உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்” என்று பொருள் கூறும்.....
“உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து”
எனும் குறட்பாவை திரும்பத் திரும்பப் படித்தால்; அது “செய்ந்நன்றி அறிதல்” எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற குறள் என்பது எத்தனை ஆழமான சிந்தனைக்கு நம்மை ஆளாக்கிவிடுகிறது.
அன்றாட வாழ்க்கையில்; அடிக்கடி பயன்படுத்தப்படுகிற ‘நன்றி’ என்ற சொல்லை; ஆங்கிலத்திலோ அதேபோல் வேறு அன்னிய மொழிகளிலோ; ஏன் நமது அன்னைத் தமிழ் மொழியிலோ உச்சரிக்கும்போதும் - அல்லது எழுதுகிற மடல்களின் இறுதியில் முடிவுரை போலக் குறிப்பிடும்போதும்; அந்தச் சொல் லுக்கான உயிர்ப்போ, தாக்கமோ இருப்பதில்லை.
இருமும் ஒலிக்கு, கனைக்கும் ஒலிக்கு, தும்மல் ஒலிக்கு என்ன முக்கியத்துவம் தருவோமோ அதே அளவுதான் ‘நன்றி’ எனும் சொல் ஒலிக்கும்போதும் தருகிறோம். இல்லை; இல்லை - உளமாரத்தான், உள்ளன்புடன் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்றால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுகிற செயலேயாகும்.
வேண்டுமானால் “நன்றி” என்று கூறுவது ஒரு பண்பாடு என எடுத்துக்கொள்ளலாம் - ஆனால் ஒன்று; நன்றி கூறுவதற்கும், நன்றி காட்டுவதற்கும் - வேறுபாடு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அதே நேரத்தில் நாம் செய்திடும் இந்த உதவிக்கு, உதவியைப் பெற்றவர்கள் - நாம் செய்த உதவியை அப்படியே மூலதனமாக வைத்துக் கொண்டு பெருந்தொழில் நடத்தி; உரிய வட்டியும் சேர்த்துத் திரும்ப வழங்குவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவும் கூடாது.
ஆனாலும் அய்யன் வள்ளுவர்; என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிடாமல் “அன்பு காரணமாக செய்யும் உதவி கடலை விடப் பெரிது” என்றும்; ஒரு குறளில் கூறிவிட்டு - அடுத்த குறளிலேயே “ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக் கூட அதனால் பயன் பெறுவோர் பனையளவாகக் கருத வேண்டும்” என்றும் குறிப்பிடுகிறார்.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது”
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.”
இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்தாழத்தை வியந்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது;
மனைவியின் குரல் கேட்கிறது - “சாப்பிட வரவில்லையா? இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த வத்தல் குழம்பு!”
“அப்படியா? வத்தல் குழம்பா? ரொம்ப ‘நன்றி!’ என்று குறள் புத்தகத்தை, இருந்த இடத்தில் வைத்து விட்டு - எழுந்து செல்கிறோம் உள்ளே!
“முதலில் கையை கழுவிக் கொள்ளுங்கள்” - மனைவி, தண்ணீர் சொம்பைத் தருகிறார்.
“நன்றி” என்பதை முகக்குறிப்பால் காட்டிக் கொண்டே, அந்தத் தண்ணீர்ச் சொம்பை வாங்கிக் கை கழுவிக் கொண்டு; வத்தல் குழம்பு சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கிறோம் -
“எப்படி; வத்தல் குழம்பு?”
“பிரமாதம்! நன்றி!”
இந்த மாதிரி “நன்றி” எனும் சொற்கள் எல்லாம் வெறும் வாய்ச்சொற்களாக வருபவை!
இந்த நன்றிகள் எல்லாம் சொல்லப்படுபவைதான் -
காட்டப்படும் நன்றிதான்;
காலத்துக்கும் நிலைத்து நின்று -
கல்லில் செதுக்கிய எழுத்தாக;
கடற்கோள்களாலும் அழிக்க முடியாததாக அமையும்.
2 - 10 - 2005
★★★
கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்