பொருளடக்கம்

39. பகுத்தறிவுப் பாதை!

கட்டுரை 39 / 50

பகுத்தறிவுப் பாதை!

The Path of Rationalism!

அச்சுப் பக்கம் 167–171

scan 167 shows no printed numeral

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

நான் எழுதி, 12 பதிப்புகள் வெளிவந்துள்ள “தொல்காப்பியப் பூங்கா”வில் 93வது மலராக “அன்றே வளர்ந்திருந்த அறிவியல்” எனும் தலைப்பில் வழங்கியுள்ள கருத்துக்களை நினைவூட்டி; பின்னர் இன்றைய “சிந்தனையும் செயலும்” பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

“தொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைகள், இன்றைக்கும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பும், ஒருசில; நவீனப் புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் ஒத்துவர இயலாத நிலைப்பாட்டாயினும் ஈராயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் பெருமிதம் கொள்ளும்போது அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”

(மரபியல் - நூற்பா :- 27)

இதன் பொருள் விளக்கம் :-

ஓரறிவுள்ள உயிர் உடம்பினால் அறியக் கூடியது. ஈரறிவுள்ள உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறியக் கூடியது. மூவறிவுயிராவது உடம்பினால் - வாயினால் - மூக்கினால் என மூன்றினாலும் அறியக் கூடியது. நாலறிவுயிராவது உடம்பு, வாய், மூக்கு, கண் ஆகியவற்றால் அறியக் கூடியது. ஐயறிவு உயிர் என்பது உடம்பு, வாய், மூக்கு, கண், செவி ஆகியவற்றால் அறியக் கூடியது. இவைகளேயன்னியில் ஆறாவதாக மனத்தினாலும் அறியக் கூடியதே ஆறறிவு எனப்படும். இவ்வாறு உயிர்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை பெற்றுள்ள உயிரினங்கள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிற பாங்கினை மரபியல் உணர்த்தும்போது எந்த அளவுக்கு மிகப் பழங்காலத்திலேயே அறிவியல் அடிப்படையில் வாழ்க்கை இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது என்ற மலைப்பு ஏற்படத்தான் செய்கிறது.

உலகில் வாழும் எல்லாவுயிர்களையும் அவற்றின் உடலில் அமைந்துள்ள ஐம்பொறிகளையும் உய்த்துணரும் உட்கருவியாகிய மனத்தினையும் கொண்டு அவ்வுயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவராகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினை நமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே வாழ்ந்த நுண்ணுணர்வாளர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தி யுள்ளனர். உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், மூக்கு, கண், செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாகவும் அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி எனும் ஐம்புலனறிவுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுணித்துணர்ந்து

அவற்றை அறுவகையுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப்பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும்.

“புல்லும், மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(மரபியல் - நூற்பா :- 28)

எனும் நூற்பா; புல்லும் மரமும் எனும் இருவகைத் தாவரங்களும் உடம்பினால் அறிந்து கொள்ளக் கூடிய ஓரறிவுடைய உயிர்களாகும் என்பதைக் குறிப்பிடுகிறது. ‘பிறவும்’ என இந்த இரண்டிலும் அல்லாத பிற உயிர்கள் என்றும் உணர்த்தப்படுகிறது. அவற்றுக்கும் உடலால் அறிந்து கொள்ளக் கூடிய ஓரறிவுதான். தாவரங்கள் பற்றியும் இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பே தமிழன் பெற்றிருந்த அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்பதற்கு இதைவிடச் சான்று வேறு எதுவும் தேவையா?

உடம்பால் உணர்ந்து கொள்ளக் கூடிய புழுக்கள், புற்கள், மரங்கள், கொடிகள், செடிகள் என்படும் ஓரறிவுடைய பட்டியலுக்கு அடுத்து;

“நந்தும் முரளும் ஈரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(மரபியல் - நூற்பா :- 29)

சங்கு, நத்தை, கிளிஞ்சல் போன்றவையும் ஈரறிவு உயிரினமாம். தாக்கப்படும்போது அறியும் உணர்வும், இரை கொள்வதால் வாயுணர்வுமென இரு அறிவு கூறப்படும்.

“சிதலும் எறும்பும் மூவறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

(மரபியல் - நூற்பா :- 30)

ஈசல், எறும்பு, கரையான் இவற்றுக்கும் இவற்றையொத்த பிற உயிர்க்கும் மூவறிவு.

உடலால், வாயால், மூக்கினால் அறியக் கூடிய உயிரினங்கள் இவை.

நண்டும் தும்பியும் நான்கறிவுடையவை எனவும், விலங்குகளும், பறவைகளும் ஐந்தறிவுடையவை எனவும் மரபியல் விளக்குகிறது.

மக்கள் ஆறறிவுடையோராவர் - ஆறில் ஒன்றிரண்டு குறைவதற்கும், நிலையாய் இருப்பதற்கும்; இந்த இலக்கணம் பொறுப்பல்ல!

- தொல்காப்பியப் பூங்கா (மலர் 93)

ஆறாவது அறிவைத்தான் பகுத்தறியும் அறிவு - பகுத்தறிவு என்கிறோம்.

பகுத்தறிவு என்றாலே பழைமை அனைத்தையும் பழிப்பது எனக் கருதிக் கொண்டு, பகுத்தறிவாளரைப் பழைமையாளர்கள் சிலர் பழிப்பதும் - அஃதே போல் பழைமையைப் பழித்தும் இழித்தும் விமர்சிப்பதுதான் பகுத்தறிவு என்று ஒரு சில பகுத்தறிவாளர்கள் எண்ணிக் கொள்வதும்; இன்றைய உலக நடப்பாக இருக்கிறது.

“பழைமையிலிருந்தே புதுமை தோன்றுவதற்கு எடுத்துக்காட்டுத்தான் வயல் வெளிகளில் குப்பை கூளங்கள் மற்றும் மக்கிய செடி கொடிகள் உரமாக மாறி புதிய பயிரை உருவாக்கப் பயன்படுவதாகும். எனவே புதுமை என்பது எங்கோ திடீரென வான வெளியில் தோன்றி விடுவதல்ல; பழைமையெனும் உரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தோன்றுவதுதான்” என மறைந்தும் மறையாத தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதை நினைவுபடுத்திக் கொண்டே; புதுமையை வரவேற்று மகிழ வேண்டும். அந்தப் பழைமையும் நல்ல எருவாக - விதையையே வீணாக்கி விடக் கூடிய நச்சுப் பொருள் கலக்காத உரமாக - அமைய வேண்டும்.

பகுத்தறிவைக் கொண்டு செயல்படுத்துவதென்பது மூடநம்பிக்கைகளை மக்கள் சமுதாயத்திலிருந்து அகற்று வதற்காக மட்டுமே என்றோ;

ஜாதி, மத வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்பதற்காக மட்டுமே என்றோ;

கடவுள் பெயரால் நடத்தப்படும் கண்மூடித்தனமான காரியங்களைக் கட்டோடு மறுப்பதற்காக மட்டுமே என்றோ;

நோய் நொடிகளைப் போக்கி சுகம் பெற கோயில் குளங்களைத் தேடி ஓடுவது தெளிவில்லாதோர் செயல் என விளக்குவதற்கு மட்டுமே என்றோ;

மந்திரம், தந்திரம், யாகம், யோகம், ஆவி, பேய், பூதம், பிசாசு என்று நம்பி நலிவுறும் பாமர மக்களைத் திருத்துவதற்கு மட்டுமே என்றோ;

பன்னீர்க் குளியலும் பழரச பானமும் கன்னியர் சூழ் கட்டிலறையும் இருந்தால்தான் சுவாமிகளுக்குத் தூக்கம் வருமென்றும், அதுவே தூய்மையான துறவறமென மக்களை ஏமாற்றும் மடாலய மாயையைத் தோலுரித்துக் காட்டுவதற்கு மட்டுமே என்றோ;

நாளும் வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமையுகத்தில் வருங்கால சமுதாயத்தின் அறிவை மேலும் மேலும் பெருக்குவதற்காக மட்டுமே என்றோ;

பகுத்தறிவு பயன்படுத்தப்பட்டால் மாத்திரம் போதாது; இவற்றோடெல்லாம் இணைத்து நினைத்துப் பார்த்திட; இன்றியமையாதது ஒன்றும் உண்டு - நம் ஊர் நிர்வாகத்தை நடத்திட யார் வேண்டும் - நகரின் நிர்வாகப் பொறுப்புத் தகுதி யாருக்கு - மாநகருக்கு, மாநிலத்துக்கு நிர்வாகப் பொறுப்பேற்கும் திறமையும் தெளிவும், நாட்டுக்குப் பாதுகாப்பும் அமைதியும் வளமும் வளர்ச்சியும் வழங்கிடக் கூடிய வல்லமையும் - வலிவான கொள்கை உறுதியும் கொண்டோர் - குழப்பமின்றி; கோணல்மாணலின்றி; ஒருவஞ்சனையின்றி; நடுநிலை தவறும் போக்கின்றி - உனக்கொரு நியாயம், எனக்கொரு நியாயம் என்ற ஒருதலைப்பட்சமின்றி - நிர்வாகத்தை நடத்தும் நெறியுடையோர் யார் என்று நிர்ணயிக்கத் துணை நிற்பதற்கும்; தவறு காணுமிடத்துத் தட்டிக் கேட்பதற்கும்; தடுத்து நிறுத்துவதற்கும்

பகுத்தறிவு பயன்படுத்தப்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டுவது; தொல்காப்பியம் எடுத்துக்காட்டும் ஆறாவது அறிவு இருப்பதால்தான் - ஆறாவது அறிவுடையோர்க்கு அதனை அறிவுறுத்தும் கடமையாகிறது. எனவே “திசையனைத்துக்கும் தேவை பகுத்தறிவுப் பாதை” என்பதை தெளிவுபடுத்துவதே; இன்றைய சிந்தனையும் செயலும்.

4 - 10 - 2005

★★★

கலைஞர் மு. கருணாநிதி · சிந்தனையும் செயலும். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்