காட்சி 54

காட்சி - 54

ஜமீன்தாரின் அந்தரங்க மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன்தாரின் அந்தரங்க மாளிகை** (விங்கன், கம்பீரமாக நுழைகிறான்... விங்கன், சிலையைத் திருப்பி உள்ளே நுழைதல். வீறு மடி மீது படுத்திருந்த ஜமீன்தார் திடுக்கிட்டு எழுந்து....) ஜமீன்தார்:—விங்கன்!... நீயா?... இன்னும் உயிரோடு இருக்கிறாயா?.... (வீறு ஓடிவிடல்) விங்கன்:—நான் விங்கன் அல்ல; விங்கனின் ஆவி!... ஜமீன்தார் அவர்களே! உமக்குத்தான் ஆத்மாவில் நம்பிக்கை உண்டு—அந்த ஆத்மா தான் வந்திருக்கிறது.... நீர் தீயிட்டுப் பொசுக்கிய குடிசையிலே கருகி உருகிப் பிணமாக விழுந்த விங்கனின் ஆத்மா!... பேயுருவில் வந்திருக்கிறது; இந்தப் பிசாசை.... ஊருக்கு அடையாளம் காட்ட!.... ஜமீன்தார்:—எதற்காக வீண் பேச்சு? எங்கு வந்தாய்? எதற்காக வந்தாய்?.... விங்கன்:—“மாயை விலகும் மக்கள் உண்மை உணருவார்கள்” என்றபோது—“மணல் கயிறாகத் திரிக்கும் முயற்சி!” என்று கேலி பேசினீரே. இப்போது மணல்க் கயிறு திரிச்சுக்கிட்டு வந்திருக்கிறேன்! வெறுங்கயிறு அல்ல! உமக்கேற்ற தூக்குக் கயிறு! உமது வேஷத்தைக் கலைப்பேன் என்றபோது “வானத்தை வில்லா வளைப்பாயோ!” என்று வக்கணை பேசினிங்களே இப்போது வானத்தையல்ல; உமது மானத்தையே வளைத்துக் காட்ட வந்திருக்கேன்! “எரிமலையின் மீது நின்று மகுடி ஊதாதே!” என்று எச்சரித்தீரே; அந்த “எரிமலை மனிதன்” எழும்பு வேறு, நரம்பு வேறு நொறுக்கிப் போட்டுத்தான் வந்திருக்கிறேன்!... (ஜமீன்தாரின் சட்டையைப் பிடித்தபடி விங்கன் இருக்க) ஜமீன்தார்:—என்னடா வெறி பிடித்து விட்டதா? விங்கன்:—எனக்கு வெறி பிடித்தது இன்றல்ல! அன்று என் இளம்பிராயத்தில் பிள்ளை விளையாட்டில் உமது பெண்ணுக்குத் தாலிகட்டியபோது என்னை அடித்தீரே அப்போதே வெறி பிடிச்சிட்டது எனக்கு! என்னை அடித்த உன்னைத் தடுத்த அன்னையைக் கருத்தோடு அணைச்சு காப்பாட்டுன் கோபத்திலே தள்ளி என் பெற்ற தாயின் உடலைக் கிழிச்ச.... பாவி! நான் குடியிருந்த தாயின் வயிற்றிலிருந்து குருதி கொப்பளிச்சதே; அப்போதே அந்த ரத்தத்தின் சாட்சியாக நான் எடுத்துக் கொண்ட சபதத்திற்குப் பெயர் வெறியென்றால்!... அந்த வெறி தணியுமட்டும் எனக்கு வேறு வேலை இல்லை! வேறு வேலை இல்லை!.... ஜமீன்தார்:—என்ன சொல்றே? (இருவரிடையே சண்டை - ஜமீன்தார் ஆட்கள் சூழ்கிறார்கள் - சண்டை—ஆட்கள் அடிபட்டு விழுதல்—கண்ணாயிரம், மரகதம், உமா, சடையன், குடிசைவாசிகள் வருதல்—ஜமீன்தார் வெளியே ஓடுதல்.) ★