காட்சி 53-டி
காட்சி -- 53 டி
72 பகுதிகளில்
(குடிசைப் பகுதியில் தீ பரவியவாறு இருக்கிறது - தீப்பந்தமுடன் ஓடுகிற காளிங்கராயனை மரகதம் பிடித்துக் கொண்டு-அங்கு கிடந்த ஒரு அரிவாள்மனையை ஓங்கி....) மரகதம்:—உண்மையைச் சொல்!.... இந்தக்கொடுமைச்செய்யச் சொன்னது யார்?.... காளிங்க:—அய்யோ! என்னைக் கொன்னுடாதிங்க!... உன் பழைய லவ்வர் ஜமீன்தார் உத்திரவு! (அரிவாள் மனைக்கட்டையாலடிக்கப்போக அதற்குள் ஆட்கள் ஓடிவந்து காளிங்கராயனைத் தூக்குகின்றனர்) மரகதம்:—ஜமீன்தார்!... ஜமீன்தார்!.... எல்லாம் அவர் வேலைதானு? ஆட்கள்:—நீங்க விட்டுடுங்கம்மா அவனை நாங்க, பாத்துக்கிறோம். (எரிகின்ற ஒரு குடிசையில் காளிங்கராயனை ஆட்கள் தூக்கிப் போடுதல். கோகிலா குழந்தையுடன் ஓடிவரும்போது... அவள் உடையில் தீ பிடிக்கிறது.. எரியும் மரத்துண்டு அவள்மேலே விழுகிறது..... கோகிலா, குழந்தையை இரு கைகளாலும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, தீப்புண்களுடன் வெளியே வருகிறாள். - “என் குழந்தை!.. என் குழந்தை!”... என அலறியவாறு ஓடிவருகிறாள் உமா,) உமா:—கோகிலா! (என அலறுகிறாள்)...... கோகிலா:—உமா!.. வந்துட்டியா? இதா உன் குழந்தையைப் பிடி!.... (உமா, குழந்தையை வாங்கிக் கொள்கிறாள்.. கோகிலா கீழே சாய்கிறாள்.) கோகிலா:—உமா! என்னைப்பத்தியும், உன் கணவரைப் பத்தியும் தப்பா நினைக்காதே!... நான் விங்கனை முதல்ல காதலிச்சது உண்மை! அப்புறம் அவர் உனக்குச் சொந்தம்னு ஆனபிறகு... எங்க ரெண்டுபேரு உள்ளத்திலியும்... அப்படிப்பட்ட எண்ணமே ஏற்பட்டதில்லே!... உமா:—கோகிலா!......! (மரகதம் ஓடிவந்து ‘கோகிலா’ எனக் கதறுகிறாள்!) கோகிலா:—அம்மா!... என் வாழ்க்கை முடிஞ்சுட்டுது.... இனிமே உங்களுக்கு உமாதான் சொந்தப் பெண்ணு! இதோ இதுதான் உங்க பேரக்குழந்தை!... மரகதம்:—கோகிலா!.... கோகிலா:—அம்மா!... அம்மா!!... விங்கன்!... (என்று அவன் கையைப் பிடிக்கப் போனவள் உயிரை விடுகிறாள்.) மரகதம்:—கோகிலா! கோகிலா!... போய்ட்டியாம்மா!? (குடிசைவாசிகள் கூட்டம் கூடிவிடுகிறது.) தம்பி!..என் கோகிலாவைத் தீ விழுங்கிட்டுது!..இல்ல! அந்தத் தீயவன் ஜம்புலிங்க பூபதி விழுங்கிட்டான்! எந்தப் பெண்ணுக்காக இதுவரையில் உயிர் வாழ்ந்தேனோ; எந்தப் பெண்ணின் வாழ்வு மலர்ந்து மணம் வீச வேண்டுமென்று.... இந்த ஜமீன் மாளிகையின் மர்மங்களே மறைத்துக் கொண்டிருந்தேனோ; எந்தப் பெண்ணுக்காக நான் யார் என்றுகூடச் சொல்லாமல் நடைப்பிணமாகத் திரிந்து கொண்டிருந்தேனோ; அந்தப் பெண்ணே போய்விட்ட பிறகு இனி என்ன இருக்கிறது? இந்த ஊரே உத்தமர்னு நினைச்சுக்கிட்டிருக்கிற ஜம்புலிங்க பூபதி - யார்?... குடிகாரன்!....கொலைகாரன்!...கொள்ளைக்காரன்!...கயவன்!...காமாந்தகாரன்!...கன்னியர் கூட்டக் கடைச்சரக்கென்று மதிக்கும் மனிதமிருகம்!...அந்த மனித மிருகத்தின் மஞ்சத்துப் பதுமையாக ஆக்கப்பட்டவள்தான் இந்த மரகதம்! எங்களுக்குப் பிறந்த குழந்தைதான் கோகிலா!...நீ போன பிறகு எனக்கு என்ன இருக்கிறது? இதோஇப்போதே புறப்படுகிறேன் அவனுடைய அந்தரங்க மாளிகைக்கு! ஆலயங்கிறபேரு அங்கே ஒரு அம்மன் சிலை; அதைத் திருப்பினால் உள்ளே அந்த அக்கிரமக்காரனின் சல்லாப மண்டபம்! எத்தனையோ இளம்பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்தவன்; ஏழைகள் வாழ்கிற குடிசைகளுக்கும் தீயிடக் கட்டளை யிட்டு நம்மை உயிரோடு கருக்கிவிடத் திட்டம் போட்டவனைப் பழிக்குப் பழி வாங்குகிறேன்!... (ஆவேசமாக) பழிக்குப் பழி வாங்குகிறேன்!... விங்கன்:—அம்மா!... அந்த வேலை உங்களுக்கு வேண்டாம்மா! அதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருக்கேன்! (சடையனிடம்) அப்பா!.... இப்போதாவது உங்கள் தெய்வம் - கலியுகக் கடவுள்... அந்த ஜமீன்தாரின் உண்மை உருவம் உங்களுக்குத் தெரிகிறதா?... சடையன்:—தம்பி!.... இறுக மூடிக்கிடந்த என் இமைகள் திறந்து கொண்டன.... விங்கன்:—ஏய், ஜம்புலிங்க பூபதி! (விங்கன் ஓடுகிறான் மற்றவர்கள் பின் தொடருதல்)