காட்சி 51
காட்சி -- 51
கோயில் வாசல்
72 பகுதிகளில்
**கோயில் வாசல்** (கோயிலுக்குள்ளேயிருந்து பூஜைக் கூடையுடன், வெளியே வந்து கொண்டிருக்கிறாள் கோகிலா... அப்போது விங்கன் வருகிறான்...) விங்கன்:—கோகிலா!... கோகிலா:—செளக்கியமாயிருக்கீங்களா?... உமா எப்படியிருக்கா?... விங்கன்:—அவளுக்கென்ன—நல்லாயிருக்கா! கோகிலா:—குழந்தையைக் கூட வந்து பார்க்க முடியலியே!... அம்மா சொன்னாங்க; நாளைக்குத்தான் ஜமீன்தாரு கிட்ட சொல்லிவிட்டு... குழந்தையைப் போய்ப் பாத்துட்டு வரணும்னு!... குழந்தை எப்படி?... உங்க களாட்டம் இருக்கா?... உமா மாதிரி இருக்கா?... சிகப்பா?... கருப்பா?... விங்கன்:—அதான் நேரா வந்து பார்க்கப் போறேன்லியே; வந்து பார்த்து தெரிஞ்சுக்கிடுவேன்... அதிருக்கட்டும்!... கோகிலா!... என்ன எதுக்கு அவசரமா இங்கு வரச் சொல்லி ஆள் அனுப்பினே? கோகிலா:—நானு உங்களையா?.. இல்லையே—இல்லவே இல்லையே!... விங்கன்:—ஆமாம்; கோகிலா... ஒரு ஆள் வந்து உட்டியே சொன்னான் — அதனால்தான் நான் அவசரமா ஓடி வந்தேன்... கோகிலா:—ஆச்சரியமாயிருக்கே!... நான் யாருகிட்டயும் சொல்லி அனுப்பவே இல்லியே!... (குதிரை வரும் குளம்படிச் சப்தம்) விங்கன்:—ம்... இதிலே ஏதோ விஷமத்தனம் நடந்திருக்கு! காளிங்கன் வர்றான்..உன்னையும் என்னையும் பார்த்தா கதை கட்டிடுவான். நான் அப்புறம் வர்றேன் கோகிலா! (விங்கன் அங்கிருந்து சென்று... ஒரு மண்டபத்திற்குப் பின்புறம்போய் நின்று கவனிக்கிறான். கோகிலா போய்க் கொண்டிருக்கிறாள்... காளிங்கன் குதிரையைக் கொண்டுபோய் அருகே நிறுத்தி...) காளிங்க:—கோகிலா!.. எங்கே போறே? நடந்து போறே?... குதிரையிலே ஏறிக்கியேன்... வா!... கோகிலா:—வேண்டாம்... வேண்டாம்... எனக்கு பாளையத்துக்கு வழி தெரியும்!.. காளிங்க:—கொஞ்சங்கூட ஜாடை புரியாத பெண்ணு இருக்கியே; ஒரு ஆட்டுனா கூப்பிட்டா ஆசையா தானே கூப்பிடுவான்... அப்படிங்கற அறிவு வேண்டாம்!.. நான் என்ன உன்னைக் கடிச்சா தின்னுடப் போறேன்!... கோகிலா:—மானேஜர் சார்!... காளிங்க:—அது என்ன உத்தியோகத்தைச் சொல்லிக்கிட்டு மேனேஜர்னு! "அலோ மை டியர் அத்தான்"னு கூப்பிடறது!.. இல்ல... "மை டியர் பாப்பா"ன்னு... மாமா வேண்டாம்... அத்தானே இருக்கட்டும்!... கோகிலா:—மரியாதையா நடந்துக்கிங்க!... காளிங்க:—ஏய் கோகிலா நில்லு!... நான் கூப்பிடறேன் போய்கிட்டே இருக்கே!... என் மனசுலே உன்னை வச்சு பூஜிப்பேன்!... வா என் மாளிகைக்கு! (கையைத் தொட்டிழுக்கிறான்... அவள் திருப்பிக்கொண்டு பூக்கூடை சிதறிக்கீழ்விழ, அவனை அறைந்துவிட்டுப் போகிறாள்.) காளிங்க:—போ! போ!... பகல்லே தப்பிச்சிட்டே... ராத்திரியிலே தப்பிச்சிக்க முடியுமா? வர்றேன்... உனக்கு உண்டு!... (காளிங்கன் போக — விங்கன் ஒரு முடிவிற்கு வருகிறான்.)