காட்சி 52
காட்சி -- 52
ஜமீன் மாளிகை-கோகிலா அறை / இரவு
72 பகுதிகளில்
**ஜமீன் மாளிகை-கோகிலா அறை** **இரவு** (கோகிலா அறையின் கதவு தட்டப்படுகிறது... படுத்திருந்த கோகிலா விளக்கைத் தூண்டிவிட்டு... எழுந்து சென்று கதவைத் திறக்கிறாள்... விங்கன் உள்ளே வருகிறான்.) கோகிலா:—நீங்களா?... இந்த நேரத்தில்... விங்கன்:—அதிர்ச்சி அடையாதே!... மாளிகையில் உன்னை வழியிலே மடக்கி.. காளிங்கன் பேசியதைக் கவனிச்சுக்கிட்டுத் தானிருந்தேன்... உன் கற்பை எப்படியும் சூறையாடுவதுன்னு திட்டம் போட்டிருக்கும் அந்தத் தீயவன் இன்றிரவு இங்கே வரத்தான் போகிறான்!... அவனுக்குச் சரியான பாடம் கற்பித்து அனுப்பவே நான் வந்திருக்கேன்!... நீ பயப்படாமல் இரு!... (என்று சொன்னபடி கதவைச் சாத்திவிட்டு, கதவோரத்து மூலையில் ஒளிந்து கொள்கிறான். கதவு தட்டப்படுகிறது..) விங்கன், சைகை மூலமாக கோகிலாவிடம் "போய்க் கதவைத் திற!" என்கிறான்... கோகிலா, ஒருவகை பீதியுடன் சென்று கதவைத் திறக்கிறாள்... தோளில் குழந்தையுடன் குடிசைவாசியாக சாதாரண உடையுடன் உமா வருகிறாள்...) கோகிலா:—உமா! நீயா?... உமா:—நான்தான் எங்கே அவர்?... உன் கள்ளக்காதலர்?... (ஒளிந்திருந்து வெளியே வரும் விங்கனைக் கண்டு) ஓ... இங்கே தான் இருக்கிறீங்களா?... விங்கன்:—உமா!... தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு எதையும் அக்கிரமமா பேசிவிடாதே!... (ஜமீன்தார், காளிங்கன், சடையன் வருதல்...) காளிங்க:—அக்கிரமம் நடக்கலாம்... அதைக் கண்டிச்சுப் பேச... கட்டின மனைவிக்கு உரிமை கிடையாதோ?... கோகிலா:—உமா!... அவர் இங்கே வந்தது... உமா:—விளக்கம் தேவையில்லையடி விசுவாசக்காரி!... இரவு நேரம்!... தாள் போட்ட கதவு!... தனியறையில் ஒரு இன்ப ஜோடி!... இந்த வெட்கங்கெட்ட வேலைக்கு விளக்கம் வேறு சொல்லப் போகிறாயா?... விங்கன்:—உமா!... மனம்போன போக்கில் பேசாதே!... நான் சொல்லுவதைக் கேள்!.. உமா:—கேட்கத் தேவையில்லை!... மனைவிக்குத் துரோகம் செய்து விட்டு... கையும் களவுமாகப் பிடிபட்ட பிறகு... நீங்கள் சொல்லப் போகும் எந்தக் கதையையும் நான் கேட்கத் தேவையில்லை!... விங்கன்:—வீட்டுக்கு வா! விவரம் சொல்லுகிறேன். உமா:—அது இனிமேல் நடக்காத காரியம்!... ஒரு துரோகியோடு வாழ நான் விரும்பவில்லை!.. விரும்பவே இல்லை! விங்கன்:—(உமாவின் கையைப் பிடித்து) வருகிறாயா இல்லையா?... உமா:—விடுங்கள் கையை!.. ஜமீன்தார்:—(உறுமலுடன்) மிஸ்டர் விங்கன்!.. மாப்பிளே!.. காளிங்க:—இவ்வளவு நாளா எங்க கண்ணுலே மிளகாய்த் தூளைத் தூவிட்டு கோகிலாவோட கள்ளக்காதல் பண்ணிகிட்டிருக்கிறே! (விங்கன், உமாவை விட்டு — ஜமீன்தாரிடம் திரும்பி) விங்கன்:—என்ன சூழ்ச்சி இதெல்லாம்? ஜமீன்தார்:—கேட்டாயா சடையா!... சூழ்ச்சி செய்கிறேனும் நான்!.. சடையன்:—ஏண்டா பாவி!.. சின்ன ஜமீன்தாரிணியையே உனக்கு மனைவியாக்கின தெய்வமடா இவரு!... அந்தத் தெய்வத்துக்கே அடுக்காத செயலைச் செய்துட்டு பேச்சு வேறயா பேசுறே!... விங்கன்:—அப்பா உங்க கண்ணைத் திறக்கிறது ரொம்பகஷ்டம்! ஆனா ஒரு நாளுக்குத் திறக்கத்தான் போகிறேன்!.. காளிங்க:—சடையன் கண்ணைத் திறக்கிறது இருக்கட்டும்... இவ்வளவுநாளா எங்க எல்லாருடைய கண்ணிலேயும் மண்ணைத் தூவிட்டு... கோகிலாவோட கள்ளக் காதல் நடத்தியிருக்கியே!... கோகிலா:—அய்யோ அம்மா! (காதுகளைப் பொத்திக் கொண்டு கதறல்) உமா!.. என்னை நம்பு!.. (உமா, கோகிலாவைத் தள்ளிவிடுதல்..) உமா:—ஓ!.. (அப்போது மரகதம் வந்து) மரகதம்:—ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதி... தனக்குத் தெரிந்த சகல வித்தைகளையும் காட்டுகிறார்!... அவரது... சதிவேலைக்கு என்மகள் கோகிலா பலியாகவேண்டுமா? ஜமீன்தார்:—கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை!... உன் மகளும், விங்கனும் உல்லாச கேளிக்கை நடத்தியதை உமாவே, தன் கண்ணாலே பார்த்துவிட்டாள்!.. சடையன்:—எம்மா!.. இந்த உத்தமரோட சோற்றைத் தின்னு நீங்களும் வளர்ந்தீங்க... உங்க மகனும் வளர்ந்துச்சு...(மகனைக் காட்டி) இதோ.. இந்த ஊதாரிப் பயலும் வளர்ந்தான்; ஏன் இந்த ஊரே வளர்ந்துச்சு!.. அவருக்கு துரோகம் பண்ணலாமா?... மரகதம்:—உங்களைப் போல பத்து வைத்தியக் காரர்கள் சேர்ந்தால் ஊரையடிச்சு உலையில் போடுறவன்... கள்வன்... காமுகன்... கொள்ளைக்காரன்... கொலைகாரன்... எல்லோரையுமே உத்தமர்களாக்கிடுவீங்க. ஜமீன்தார்:—(ஆவேசமாக) மரகதம்!.. மரகதம்:—உங்களைச் சொல்லவில்லை!.. அதாவது பதினஞ்சு... பதினாறு ஆண்டுகளுக்கு முன்... ஜமீன்தார்:—(அடங்கி விடுதல்) சரி... சரி...போதும்! மாப்பிளே! மிஸ்டர் விங்கன்!... உமா, கோபம் தணியிற வரை நீயும் இங்கேயே இருக்கட்டும்... ஏதோ நடந்தது நடந்துவிட்டது... உமாவை நான் சமாதானப்படுத்தி பிறகு அனுப்புறேன்!... காளிங்க:—ஆங்!... நல்ல யோசனை!... விங்கன்:—உமா கடைசியாகக் கேட்கிறேன், எங்கூட வரப் போகிறாயா இல்லையா?... உமா:—முடியாது... இதோ... கோகிலா! அவளை அழைச்சுக்கிட்டுப் போங்க!... விங்கன்:—அழைச்சுக் கிட்டுத்தான் போகப் போகிறேன்!... கோகிலா என்சகோதரிங்கிறதை நீ உணரும் வரையில் இந்த ஊரார் விழிகளும், என் தந்தையின் விழிகளும் ஒளிபெறும் வரையில்... கோகிலாவும் மரகதம் அம்மாவும் என்னோடு தானிருப்பாங்க!.. நீ... உன் இஷ்டப்படி இங்கேயே இரு!... என் குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு!... (பிடுங்க முயற்சி — உமா தடுத்தல் — இறுதியில் குழந்தையைப் பறித்துக் கொண்டு) விங்கன்:—மரகதம் அம்மா!.. இனிமே நீங்க இங்கே இருக்கிறது நல்லதல்ல. தயவுசெய்து நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க! (குழந்தையுடன் வேகமாகப் போகிறான் விங்கன்.) ஜமீன்தார்:—கோகிலாவுடன் செல்லும் மரகதத்தைப் பார்த்து) மரகதம்!... மரகதம்:—உத்தமரோட சரித்திரத்தின் கடைசி அத்தியாயம் எழுதப்படுகிறது... வருகிறேன்!... (போய்விடுகிறார்கள். காளிங்கனிடம் ஜமீன்தார் பேசுகிறார்.) ஜமீன்தார்:—கடைசி அத்தியாயம்;; யாருக்கென்று விரைவில் தெரிந்துவிடும்!.. காளிங்கா!... நான் போட்ட திட்டமும்... நீ ஆடிய நாடகமும் வெற்றி!... அந்த ஓட்டைக் குடிசைப் பகுதியிலிருந்து நம் உமாவைப் பிரித்துவிட்டது!... இனி நமது எண்ணப்படி எரியட்டும்... அந்தக் குடிசைகள்!... எரிநெருப்பில் விழுந்து கருகட்டும் நமது எதிரிகள் கூட்டம்! நெருப்பு! நெருப்பு! என் வெறுப்புக்குரியவர்கள் விழுங்கட்டும்... அந்த நெருப்பு!.. ஹா!.. ஹா!.. ஹா!... ★