காட்சி 42-எ

காட்சி — 42-எ

தேவாலய உட்புறம்

72 பகுதிகளில்

**தேவாலய உட்புறம்** (புலவர் மகள் பூங்கொடி மணமகளாகக் குனிந்தவாறு உட்கார்ந்திருக்கிறாள்...அருகே மணமகன் உட்கார்ந்திருக்கிறான்...மந்திர ஒலி - மணமேடை - இதனைக் கண்டவர்கள் வியந்து நிற்கிறார்கள்.) ஜமீன்தார்:—வாங்க மாப்பிள்ளை...வாங்க!...அடடே! புலவரே!...எங்கய்யா போயிட்டீங்க?...நான் சொன்னபடி உமது பெண்ணுக்குத் திருமணம் நடக்குது பார்த்தீரா? புலவர்:—ஜமீன்தாரய்யா! மன்னிக்கணும்-நான் உங்களைப் பத்தி தப்பா நினைச்சுட்டேன்-இதோ, உங்க மருமகப்பிள்ளை விங்கன் பேச்சைக் கேட்டது என் குற்றம். ஜமீன்தார்:—போதும் போதும் அளவுக்கு மீறிப் புகழாதீர் புலவரே இதெல்லாம் என் கடமை!... சடையன்:—(விங்கனிடம் ஜமீன்தாரைக் காட்டி) என்னப்பா, இப்ப என்ன சொல்றே?...என் தெய்வத்தின் திருவிளையாடலைப் பாத்தியா?...அவசரமும் ஆத்திரமும் உன் அறிவை மறைச்சிட்டே இருக்கு!..இந்தக் கலியுகத்திலே எங்கும் காண முடியாத கருணை வடிவமடா இது!..இப்படாவது காலில் விழுந்து மன்னிப்புக்கேளு! ஊர்ப்பெரியவர்:—(விங்கனிடம்) இந்தப் புண்ணியவான் மேலே புழுதி வாரித் தூற்றுறதே உன் வேலையாப்போச்சு!..உன் பேச்சைக் கேட்டு நாங்களும் பைத்தியக்காரனு ஆயிட்டோம்..எஜமான் எங்களை மன்னிச்சிடுங்க!... ஜமீன்தார்:—மனிதன் மனிதன் மன்னிப்பதா?..வேண்டாம்! தேவையில்லை!..முதல்ல உங்களை நீங்க திருத்திக்குங்க! அப்புறம் என்னைப் புரிஞ்சுக்குங்க, எல்லோரும் போய் வாருங்கள்! உமா:—வாருங்கள்! வணக்கம்!... (ஒவ்வொருவராக எல்லோரும் போகிறார்கள். சடையனும் போய்விடுகிறான் அவர்களுடன். புலவரும், விங்கனும் இருக்கிறார்கள்..) ஜமீன்தார்:—(ஒரு பெருமிதச் சிரிப்புடன் அருகே வந்து) என்ன விங்கன்..என் அருமை மாப்பிள்ளை!... விங்கன்:—மாயை விலகத்தான் போகிறது! மக்கள் உண்மையை உணரத்தான் போகிறார்கள்!... ஜமீன்தார்:—மணலைக் கயிறாகத் திரிக்கும் முயற்சி! விங்கன்:—அதையும் பார்க்கிறேன்!... (வேகமாகப் போகிறான் விங்கன்.) (போனதும் கதவு மூடப்படுகிறது.) புலவர்:—(மணவறைக்கு ஓடி) பூங்கொடி! உன்னை எங்கெல்லாம் தேடி அலைந்தேனம்மா—தேவி சன்னிதானத்திலே நீ மணக்கோலத்தில் இருக்கிற இந்த தெய்வமான காட்சியைப் பார்க்க எனக்கு வரங்கொடுத்த வள்ளலம்மா, இவர்!.....எழுந்திருச்சி அவருக்கு நமஸ்காரம் பண்ணும்மா! வாம்மா!.... (புலவர் போய்த் தொடுகிறார்—குனிந்த தலை நிமிராமல் கீழே விழுந்து விடுகிறது பூங்கொடியின் பிணம்.) புலவர்:—ஆ! பூங்கொடி!..பூங்கொடி!...அய்யய்யோ, மோசம் போயிட்டேனே!..நான் மோசம் போயிட்டேனே (ஜமீன்தாரைப் பார்த்து) அடப்பாவி! கொன்னுட்டியா?... (என்று குத்துவிளக்கை எடுத்து ஜமீன்தாரைக் குத்தப்போக அய்யர் வேடத்தில் இருந்தவன், பூணூலைக் கழற்றி எறிந்துவிட்டு தலை டோப்பாவையும் கழற்றி எறிந்துவிட்டு—புலவரின் வயிற்றில் கத்தியால் குத்துகிறான். புலவர், வீறிட்டுச் சாய்கிறார்.) ஜமீன்தார்:—ம்!..இரண்டையும் தூக்கிப்போய்..யார்கண்ணிலும் படாமல் புதையுங்கள்.