காட்சி 41
காட்சி - 41
வெளிப்புறக் காட்சி இரவு
72 பகுதிகளில்
**வெளிப்புறக் காட்சி இரவு** (கண்ணாயிரம் தனியாகப் போய்க் கொண்டிருக்கிறான்— "முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே... யானுமிட்ட தீ...." என்ற பாட்டை முணு முணுத்துக் கொண்டு—எதிரே தீப்பந்தமுடன் ஒருஆள் வருதல்.) கண்ணாயிரம்:—தீ! தீ!.... (திரும்புகிறான்.) (பின்னால் ஒரு ஆள் தீப்பந்தமுடன் எதிரே வருகிறான்.) கண்ணாயிரம்:—தீ! தீ!... (இவ்வாறே நாலு திசையிலிருந்தும் தீப்பந்தங்களுடன் ஆட்கள் சூழ்தல்.) ஆட்கள்:—டேய்!...பொடியா!....நீ எங்க ஜமீன்தாரைப்பத்தியா தப்புப் பிரச்சாரம் பண்ணுறே?...இதோ இந்தத் தீயிலே குளிச்சு சாவு!... (கண்ணாயிரம் நடுங்குதல் - தீப்பந்தங்களுக்கு நடுவே சிக்கித் திக்குமாறாகும் நேரத்தில்...அங்கே விங்கன் பிரவேசித்து சண்டை போடுதல்...தீப்பந்தக்காரர்கள் விரட்டப் படுகிறார்கள்....சண்டையின் போது, ஊரார் கூடி விடுகிறார்கள்...புலவரும் அங்கே வந்துவிடுகிறார்...) விங்கன்:—(ஊராரிடம்) வாங்கப்பா வாங்க! நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்!...யாரோ புலவர் மகளாம்; பூங்கொடியென்ற பருவ மங்கையாம்...அவளை ஜமீன்தார், ஆட்களைவைத்து தூக்கிக் கொண்டு போய் விட்டார் என்ற உண்மையை—இந்தக் கண்ணாயிரம் சொல்லிவிட்டான். அதற்காக...இவனைத் தீவிட்டுப் பொசுக்குமாறு ஜமீன்தார் உத்தரவு... புலவர்:—ஐயா நான்தாங்க...அந்தப் புலவன்! பூங்கொடியோட தகப்பன்—பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண உதவி கேட்டு வந்தேன்—வந்த இடத்திலே யாரோ என் மகளைத் தூக்கிட்டு போயிட்டானுங்க!.. விங்கன்:—யாருமில்ல! காட்டான் ஜமீன்தாரேதான்! (அப்போது சடையன் வண்டி ஓட்டி வருதல்...விங்கன் வண்டியை எதிரே நின்று நிறுத்துகிறான்...) சடையன்:—என்னப்பா இது ரகளை?... விங்கன்:—உங்கள் கண்கண்ட தெய்வம் ஜமீன்தார் எங்கேயப்பா இருக்கிறார்? சடையன்:—அவர் தேவாலயத்தில் தேவி பூஜையில் இருக்கிறார்!...ஏன்?...எதுக்காக?... விங்கன்:—ஊர் மக்களே!...புலவரே!...அந்ததேவாலயத்தில்தான் பூங்கொடியின் கற்பை...ஜமீன்தார் சூறையாடிக் கொண்டிருக்க வேண்டும்...தயவு செய்து என்னோடு வாருங்கள்!...இப்போதாவது உண்மையை உணருங்கள்!...ம்... (விங்கன் ஓடுகிறான். புலவரும், ஊராரும் பின்தொடருதல்.) ★