காட்சி 40
காட்சி - 40
டீக்கடை
72 பகுதிகளில்
**டீக்கடை** (கடைக்காரன் ஜமீன்தார் படத்தை கடையில் மாட்டுகிறான் அதைப் பார்த்துக்கொண்டே வரும்) கண்ணாயிரம்:—என்னய்யா முதலாளி! படம் மாட்டுறே படம்!?. கடைக்:—நான் மாத்திரமா மாட்டுறேன்....இந்த ஊர் பூரா இந்தப் புண்ணியவானுடைய படத்தை மாட்டுறாங்க!.களஞ்சியத்தில் இருக்கிற தானியத்தைப் பூராவும் தர்மம் பண்ணின வள்ளலாச்சே!...அவரு படத்தை மாட்டாம, உன் படத்தையா மாட்டுவேன்... ("பூங்கொடி பூங்கொடி!" என்று கத்திவாறு புலவர் ஓடிவருதல்.) புலவர்:—(கடைக்காரன், கண்ணாயிரம்! மற்றும் அங்குள்ளோரைப் பார்த்து) அய்யா!...என் மகப் பூங்கொடியைப் பார்த்தீங்களா?... கண்ணாயிரம்:—புலவரய்யா! என்ன விவரம் அதைச் சொல்லுங்கய்யா! புலவர்:—என் பொண்ணு சின்னப் பொண்ணு! ஜமீன்தார் வீட்டிலேயிருந்து வர்றவழியிலே யாரோ ரெண்டு முரடன்கள்...என்னை அடிச்சுப் போட்டுட்டு...என் பெண்ணைத் தூக்கிட்டுப் போயிட்டானுங்கய்யா... கண்ணாயிரம்:—ஜமீன்தார் வீட்டிலேயிருந்து திரும்புற போதா?...அப்ப...ஜமீன்தார் வேலையாத்தான் இருக்கும்!... புலவர்:—நீங்க யாரும் பாக்கலியா?...பூங்கொடி!...அம்மா பூங்கொடி!.... (ஓடுகிறார் அந்த இடத்தை விட்டு) கடைக்:—(கண்ணாயிரத்திடம்) ஏ, கண்ணாயிரம்!...ஜமீன்தாரைப்பத்தி என்ன சொன்னே?...என்ன சொன்னே?... கண்ணாயிரம்:—நீ படம்வச்சு கும்பிடுறியே! அவன் ஒருபாம்புன்னு பொறுக்கின்னு சொன்னேனே! (கடைக்காரன் அடிக்கிறான்..கண்ணாயிரமும் திருப்பி அடிக்கிறான். இருவருக்கும் சண்டை.....அப்போது ஜமீன்தாரும், காளிங்கனும் அவ்வழியே சண்டை ஓய்கிறது...) ஜமீன்தார்:—என்னப்பா இது...ம்?... கடைக்:—இந்தப் பய கண்ணாயிரம்...ஜமீன்தார் அய்யாவைப் பத்தித் தாறுமாறாப் பேசுறான்!...யாரோ பூங்கொடியுங்கிற பெண்ணும்!...அதை நீங்க... ஜமீன்தார்:—உஸ்....போதும்!...அதற்காக அவனே அடிக்கிறதா?...யார் எது வேண்டுமானாலும் பேசட்டும், எனக்குக் கோபமே வராது!...பாவம்விட்டு விடுங்கள்! (கண்ணாயிரத்தைத் தவிர எல்லோரும் வணங்குதல்...குதிரைகள் சிறிது தூரம் சென்றதும்) ஜமீன்தார்:—காளிங்கா!....அந்தக் கண்ணாயிரத்தை மக்களுக்கு நேரா மன்னிச்சுட்டேன்...ஆனால்...இன்றைக்கு இராத்திரியே அவனத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்! காளிங்க:—தீப்பந்தத்தாலே பொசுக்கி...சாம்பலாக்கிடுறேன்...சண்டாளப்பயல்!... ஜமீன்தார்:—சபாஷ்!...ம்...பூங்கொடி தயாராக இருக்காளா?... காளிங்க:—பூஜைக்கு வந்த மலர்!..தங்கள் வரவை நோக்கித் தயாரா இருக்கு!... (ஜமீன்தார் மகிழ்ச்சி) ★