காட்சி 38

காட்சி — 38

ஜமீன் மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** (ஊர் மக்கள், சீமான்கள் ஹாலில் கூடியிருக்கிறார்கள்! மரகதம், கோகிலா, உமா, காளிங்கராயன், சடையன் ஆகியோரும் இருக்கின்றனர்.) ஜமீன்தார்:—எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி, இந்தப் பிறந்த நாள் விழாவில் நான் என்றும்போல் உத்தம குணத்தோடும், உதார உள்ளத்தோடும் ஒழுக்க சீலனாக விளங்கி உங்களுக்காகப் பாடுபவன் என்று கூறிக் கொள்கிறேன்!...ஆண்டவன் நாமம் வாழ்க! காளிங்:—நாமம்!... மக்கள்:—வாழ்க!.. காளிங்:—நாமம்!.. மக்கள்:—வாழ்க!.. ஒருவர்:—ஜமீன்தார் ஐம்புலிங்க பூபதிக்கு மக்கள்:—ஜே! புலவர்:—(பூங்கொடியுடன் நின்றவாறு) போற்றி! போற்றி!... புனிதனே போற்றி!... புண்ணியனே போற்றி!... கண்ணியனே போற்றி!.. கடையேழு வள்ளல்களே வென்றவனே போற்றி!... கலியுகக் கர்ண மகாராஜனே போற்றி!... என்னய்யன் ஏழைகளின் தெய்வம் ஐம்புலிங்க பூபதியாருக்கு..இன்னும் பல பிறந்தநாள் விழாக்கள் வரவேண்டும்!.. நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாட வேண்டும், அதிலும் அடியேன் வந்து வாழ்த்துகின்ற பேற்றினைப் பெறவேண்டும்!! ஜமீன்தார்:—(கண்களை அகலத் திறந்து) காளிங்கா! யாரது?.. காளிங்:—நம்ம ஜால்ராப் புலவர்!...தமிழை எடுத்து அப்படியே தட்டுறார். (ஜால்ரா போல கையை காட்டி) ஜமீன்தார்:—ஓ..புலவரா?..செளக்கியமா?... புலவர்:—வணக்கம். வாழ்க பல்லாண்டு!...பிறந்த நாள் பரிசு வேண்டி சமுகம் வந்துள்ளேன்!... ஜமீன்தார்:—ஓ..அப்படியா? (பூங்கொடியைப் பார்த்து) இதுயார்? புலவர்:—அடையாளம் தெரியலையா? பத்துப்பதினைந்து வருஷத்துக்கு முன்பு! பச்சைக் குழந்தையா தூக்கிட்டு வந்த என் பெண் பூங்கொடி!... காளிங்:—மறந்துட்டீங்க? அப்போ அந்தக் குழந்தை புசுபுசன்னு நல்லாயிருக்கும். சின்னது..நீங்க மாரோடு மார் சேத்து தமாஷா விளையாடுவீங்க!...அது மூக்கச் சிந்தி என்மேலே போட்டுங்க!...மறந்துட்டீங்க...அப்போ சின்னது! இப்போ பெரிய பொண்ணாயிடுச்சு!... புலவர்:—இப்போது வயது வந்த பெண்ணுவிட்டாள்!...இவள் திருமணத்தைத் தாங்கள்தான் முயற்சி எடுத்து.... ஜமீன்தார்:—நடத்திவைக்கிறேன்!.தடையேதுமில்லை...காளிங்கா! புலவர்களுக்கு நாம் தரும் மதிப்பை இந்தப் புவியே அறியும்!...புலவரையும்..குழந்தை பூங்கொடியையும் அழைத்துப்போய்...(கண் காட்டல்) தக்க உபசாரம் செய்... காளிங்:—புரிகிறது பிரபு...புரிகிறது! புலவரே..வாரும்!...அம்மா பூங்கொடி வா!...நீ அதிர்ஷ்டக்காரப் பொண்ணும்மா! ஜமீன்பார்வை உன்மேலே விழுந்தாச்சு..இனிமேதான் இருக்குது வா!... (காளிங்கன் புலவரின் பெண் பூங்கொடியை அழைத்துப் போகிறான். பலரும் பல்வேறுவிலையுயர்ந்த பரிசுகள் வழங்குதல்.) ஜமீன்:—என்ன உமா? உமா:—அப்பா!...அத்தான் சார்பாக, இந்தப் பிறந்தநாள் பரிசை உங்களுக்கு வழங்குகிறேன்!... ஜமீன்தார்:—மாப்பிள்ளை கொடுத்தாரா?..ரொம்ப நன்றிம்மா! உமா மாப்பிள்ளை எங்கே? உமா:—இப்போது வந்து விடுவாரப்பா!... (பரிசுப் பொருளைச் சுற்றியிருக்கிற தாளைப் பிரிக்கிறார் ஜமீன்தார். ஒரு பெண்ணை மாடுமுட்டிக் கொல்வது போன்ற ஓவியம்..) ஜமீன்தார்:—ஆஹா...மிக அழகான ஓவியம்! ஆனால் இது இருக்க வேண்டிய இடம் சடையன் வீடுதான்..சடையா!...சம்பந்தி! என் மாப்பிள்ளை விங்கன் கொடுத்த பரிசு!...இதை உன் வீட்டிலேயே மாட்டிவை! ரொம்ப நல்லா இருக்குதுல்லே!...இந்தா! (சடையன் அதை வாங்கிப் பார்க்கிறான்.) ★