காட்சி 36

காட்சி — 36

72 பகுதிகளில்

(விங்கன் ஊர்மக்களிடையே பாடுகிறான்) உழைக்கும் இனமே! உடன்பிறப்பே! என்னோடு வாருங்களே! — பகலின் உருவில் ஊரில் உலவும் புலியைக் காட்டுவேன்; பாருங்களே! மனிதரில் சிலபேர் புனிதரைப் போலே இருப்பார் புவிமேலே! மான்களின் கண்ணே மயங்கிட வைக்கும் கானல் நீர்போலே! — உழைக்கும் இனமே ஏட்டைப் புரட்டி சுயநலக்காரனைக் கேட்பேன் நாடொரு கேள்வி! — அவன் பூட்டைத் திறந்து காட்டுவதற்கு என்னிடம் உள்ளது சாவி! எப்படிவன் தன்னை மேய்ப்பவன் என்று — எண்ணியிருக்கும் ஆடு!—நல்ல ஆறறிவுள்ள மனிதரும் அது போல் இருந்தால் சிரிக்கும் நாடு! — உழைக்கும் இனமே மின்மினிப் பூச்சி வெளிச்சத்தினிலே இருட்டில் பாதை தெரியாது!—அட; மின்னுவதாலே உப்புக்கல் தான் வைரம் போலே ஆகாது! சிங்கக் கூட்டம் தூங்கி யிருந்தால் சிறு நரி ஆட்டும் வாலே!—அதன் தூக்கம் கலைந்தால் நடப்பது என்ன? சரித்திரம் சொல்லும் நாளே! — உழைக்கும் இனமே ★