காட்சி 29

காட்சி-29

ஜமீன் மாளிகை

72 பகுதிகளில்

**ஜமீன் மாளிகை** (தரகர், மாப்பிள்ளை வீட்டார்—ஜமீன்தார் காரம் ததும்ப அமர்ந்திருக்கிறார்.) தரகர்:—(தாய், தந்தை இருவரையும் காட்டியவாறு) இவர்தான் மாப்பிள்ளையோட தாயார், தகப்பனார்!..உங்க பெண் உமாவுக்கு ரொம்ப பொருத்தமானவரு மாப்பிள்ளை! படிப்போ ஐ.சி.எஸ்..பதவியோ கலெக்டர் பதவி!.. ஜமீன்தார்:—கிருஷ்ணபுரம் ஜமீன்...சந்திரகிரி ஜமீன்...அங்கிருந்தெல்லாம் ஆள் மேல ஆள் வருது...உமாவைப் பெண் கேட்டு! அப்படி ஒரு ஜமீன்தார் வீட்டுக்குத்தான் சம்பந்தி ஆக முடியுமே தவிர..இப்படி கலெக்டர் தாசில்தார்—மிராசுதார்—மிட்டாதார்ன்னு...யாரையும் அழைச்சுகிட்டு வராதீர்! இது உமக்கு முதல்தடவையும் கடைசித் தடவையும்... தரகர்:—வர்றேங்க!.. ஜமீன்தார்:—ம்!..... (போகிறார்கள். ஜமீன்தார் திரும்புகிறார்—கோகிலா வருகிறாள்.) கேட்டியா கோகிலா...உமாவைப் பெண் கேட்க யாரோ கலெக்டர் வீட்டாம் கலெக்டர்!..கண்டிப்பா சொல்லி துரத்திட்டேன்..மாட மாளிகை, கூட கோபுரம் உள்ள ஒரு ஜமீன் குடும்பத்திலேதான் அவளுக்கு மாப்பிள்ளை வரமுடியுமென்று! என்ன சரிதானே?... கோகிலா:—ஆமாம்! நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி!...மாடமாளிகை கூட கோபுரம் உள்ள ஜமீன் குடும்பத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சு!... ஜமீன்தார்:—(துடிப்புடன்) என்ன? என்ன சொல்லுகிறாய்? கோகிலா:—செகரட்டரி விங்கன்...உங்கள் வருங்கால மாப்பிள்ளை!.. ஜமீன்தார்:—(கோகிலா கன்னத்தில் அடித்து...) மூடு வாயை! நீ விங்கனுக்கு வலைவிரிப்பார்த்து முடியாதகாரணத்தால் அவன்மீது பழிபோட்டு விரட்டியடிக்க..இப்படி ஒரு கதை கட்டிப் பார்க்கிறாயா?... கோகிலா:—கதை கட்டிப் பார்க்க நினைக்கவில்லை! உமாவின் கழுத்தில் விங்கன் தாலி கட்டிப் பார்க்க விரும்புகிறேன்!.. ஜமீன்தார்:—இங்கே நிக்காதே..போ! போய்விடு!.. (அவளின் தலைமயிரைப் பிடித்துத் தள்ளுகிறார்; அப்போது உமா ஓடிவந்து...) உமா:—அப்பா! அவள ஒண்ணும் செய்யாதீர்கள்!...அவள் நடந்ததைத்தான் சொல்லுகிறாள்!.. ஜமீன்தார்:—இல்ல! நடக்க முடியாததைச் சொல்லுகிறாள்; நடக்கக் கூடாததைச் சொல்லுகிறாள்! உமா:—(காலில் விழுந்து) அப்பா! விங்கன்தான் என் கணவராக முடியும்.. அதைத் தடுக்க யாராலும் முடியாது!.. ஜமீன்தார்:—என்ன சொன்னாய்?...எச்சில் இலை கோபுரத்துக் கலசத்தில் ஒட்டிக்கொள்வதா? உமா:—நான்தான் இப்போது எச்சில் பண்டம்!..நான் அவருக்குத்தான் உரியவள்!.. ஜமீன்தார்:—கனவிலும் நடக்காது!... உமா:—உங்கள் குடும்பப் பதம் பலிக்காது!..நான் இப்போது கர்ப்பவதியப்பா!... ஜமீன்தார்:—உமா!.. உமா:—அப்பா!..என்னை மன்னித்துவிடுங்கள்!..தயவு செய்து என்னை அவருக்கே திருமணம் செய்து வையுங்கள்!.. ஜமீன்தார்:—(குழப்பமுடன்) அய்யோ!..உமா..உமா..ஜமீன் குடும்பத்துக் கெளரவத்தைச் சந்திசிரிக்க வச்சுட்டியே அம்மா!..சந்தனத்தைப் பன்னீரில் கரைக்கிறதா? (சாக்கடை நீரில் கரைத்துத் தெளிக்கிறதா?)... (மரகதம் வந்தபடி) மரகதம்:—ஜமீன்தாரய்யா அவர்களே!..இது ஒண்ணும் பழைய காலமல்ல!..பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்றால்...ஒரு அப்பாவி பெண்ணுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு...அது யார் பெற்ற பிள்ளையோ என்று ஊருக்குத் தெரிவிக்க முடியாமல் அவளோ அடங்கி ஒடுங்கி விடலாம். இப்போது நடந்திருக்கிறது முழுக்க முழுக்க புதிய கதை!..ஒரு பிரபல ஜமீன்தார் குடும்பத்தின் கற்பைப் பற்றிய கதை! இதை ஊருக்குத் தெரியாமல் மறைக்கவும், உங்க கெளரவத்துக்குப் பங்கம் ஏற்படாமல் காக்கவும்..இருக்கிற ஒரே மார்க்கம்..விங்கன்—உமா கல்யாணம்தான்!.. ஜமீன்தார்:—(தவிப்புடன்) நீயும் அப்படியா சொல்றே?..அந்த விங்கன் யாருன்னு தெரியலியே?.. மரகதம்:—யாராயிருந்தாலென்ன?..இனிமேல் உங்கள் மருமகன்!.. உமா:—(காலில் விழுந்து காலை பிடித்துக்கொண்டு) ஆமாப்பா! என்னை மன்னிச்சிடுங்கப்பா.. ஜமீன்தார்:—சரிம்மா! உன் தலையில் எழுதியபடியே நடக்கட்டும்!.. ★