காட்சி 28

காட்சி-28

தோட்டத்துக்குளம்

72 பகுதிகளில்

**தோட்டத்துக்குளம்** (விங்கன் புறாக்களில் ஒன்றைப் பிடித்து தன் முகத்தருகே கொண்டுவந்து ரசித்தல்—பிறகு அதனைத் தூக்கி எறிந்து பறக்க விடுகிறான்...பறந்த புறா, தூக்கி எறியப்பட்ட வேகத்தில் — கூலிங் கிலாஸ் அணிந்தவாறு அங்கே வரும் உமாவின் நெற்றியில் நகத்தால் பிராண்டிவிடுகிறது..அவள் புறாவைத் தள்ளி விடுகிறாள்...உமா, நெற்றியைத் தடவிப் பார்த்துக்கொள்கிறாள்.) விங்கன்:—அடேடே உமா..நெற்றியிலே கீறிட்டுதா?...எங்கே?... (நெற்றியைப் பார்க்கிறான். அவள் முகத்தை இருகைகளால் பிடித்தபடி.) உமா:—(சோகமாக) புறா, நெத்தியில தான் கீறிச்சு!...ஆனா, நீங்க என் நெஞ்சிலேயே கீறிட்டீங்க!... விங்கன்:—அதெல்லாம் சின்னக்காயம்! இன்னுமா ஆறும் இருக்கு? அந்தக் காயங்களைப் பாத்துப் பாத்து ரசிச்சு ஊமைப் புண்ணை புரியிறது பெண்களுக்கே ஒரு தனி இன்பம்னு நம்ம இலக்கியங்கள் கூறுகின்றன!.. உமா:—அந்த இன்பத்தின் விளைவுதான் என்னைத் துன்பத்தின் எல்லைக்கே துரத்திவிட்டது!.. விங்கன்:—என்ன சொல்றே?... உமா:—நாம் ரெண்டு பேரும் செஞ்ச தவறு.. விங்கன்:—தவறு ஒண்ணுமில்ல...நீ தணலா இருந்தே!..நான் மெழுகா இருந்தேன்!... உமா:—நான் ஒண்ணும் தணலா இல்லே!.. விங்கன்:—சரி..நான் தணலா இருந்தேன்!..நீ மெழுகா இருந்தே!.. உமா:—(கோபமுடன்-உருக்கமுடன்) மெழுகா இருந்ததினால்தான் உருகிப் போயிட்டேன்!.. விங்கன்:—அதான் அன்னைக்கே உருகிட்டியே; அப்புறம் இப்ப ஏன் உருகுறே!.. உமா:—நான் உருகிப் போனது மாத்திரமல்ல; ஒரு உயிரையும் சுமந்துகிட்டு நிக்கிறேன்!.. விங்கன்:—(சாதாரணமாக) உமா! உமா:—நான் கர்ப்பமாயிருக்கேன். விங்கன்:—கர்ப்பமாயிருக்கேன்!.. விங்கன்:—சபாஷ்!... (சிரிக்கிறான்—பெருஞ்சிரிப்பு - வெற்றிச்சிரிப்பு—அந்தச் சிரிப்பு ஒலியில் புறாக்களும்—பறவைகளும்—வாத்துக்களும் சிறகடித்து சத்தமிட்டவாறு சிதறுகின்றன...அந்தச் சிரிப்பொலியும் சிதறிப் போகும் பறவைகளின் ஒலியும் ஒன்றுகலக்கின்றன. கோகிலா இவைகளை மறைந்திருந்து கவனிக்கிறாள்.) **(இடை வேளை)**