காட்சி 24-பி

காட்சி-24-பி

டேவிட் மலைப்பங்களா உட்புறம்

72 பகுதிகளில்

**டேவிட் மலைப்பங்களா உட்புறம்** (விங்கன் விசிலடித்தபடி உள்ளே வந்து புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்கிறான். உமா கட்டிலில் படுத்திருக்கிறாள். விங்கன் உமாவைப் பார்த்துவிட்டு) விங்கன்:—அடடா! தச்! தச்!...தச்!... (உமா கட்டிலில் படுத்திருக்கிறாள். கண்ணைத் திறந்து பார்க்கிறாள்.) ஆஹா! ஆஹா! (உமா பார்த்தல்...திரும்பிப் படுத்தல்.) விங்கன் குரல்:—சபாஷ்!...ஆரம்பமே பிரமாதம்...எக்ஸ்லெண்ட்!.. (உமாவின் முதுகுப்புறம் இந்தக் குரல் ஒலிக்கிறது.) உமா:—என்னது...எக்ஸ்லெண்ட்?... விங்கன்:—பின்பகுதி ரொம்பப் பிரமாதம்!...அதாவது இந்தக்கதை போட்ட பின்பகுதி..ரொம்ப நல்லாயிருக்கு!...நான் உன் கிட்ட பேசலே!...எனக்கு நானே படிச்சு ரசிச்சுகிட்டு இருக்கேன்!.. உமா:—புத்தகத்தை தலைகீழாத்தான் படிப்பீங்களா? விங்கன்:—எனக்கு எப்போதும் முடிவு தெரிஞ்சுகிறதிலே இன்ட்ரஸ்ட் அதிகம்! கதையோட ஆரம்பத்தை நான் அப்புறம்தான் படிக்கிறது... உமா:—அது என்ன புத்தகம்—அதையாவது சொல்லுங்களேன்! விங்கன்:—ஹூஹூம்!...உன்கிட்ட சொல்லக்கூடாது. உமா:—ஏனும்? விங்கன்:—இது செக்ஸ் கதை...! (விங்கன் புத்தகத்தை முணுமுணுவென்று மந்திரம் ஜபிப்பதைப் போல் படித்துக்கொண்டிருக்கிறான்...சிரிக்கிறான் — ஓகோ! ஓகோ!! என்கிறான்—பொறுத்துப் பொறுத்துப் பார்த்த உமா, அவனைப் பார்த்து) உமா:—மழை காலத்துத் தவளை மாதிரி மந்திரத்தை ஜபிக்கிறீங்களே—கொஞ்சம் உரக்க படிச்சா என்னவாம்? விங்கன்:—செக்ஸ் கதையை மார்கழி மாதத்து பஜனை மாதிரியா எல்லார் காதிலேயும் விழும்படியா படிக்க முடியுமா?... (புத்தகத்தில் கண்ணைப் பாய்ச்சி) அதிலும் இந்த இடம் இருக்கே....ஆகா! ஆகா! என்ன சுவை! என்ன சுவை! தேன் கலந்து, பால் கலந்து, செங்கரும்புச் சாறு கலந்து, என் ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற சுவை! உமா:—அதைத்தான் படிக்கச் சொல்றேன்—இல்லேன்னு இங்க கொடுங்க; நான் படிச்சிக்கிறேன். (எனப் புத்தகத்தைப் பிடுங்கத் தாவிப் போகிறாள்—புத்தகத்தை அவளிடம் தராமல்...) விங்கன்:—எங்கப்பா! உனக்கு எவ்வளவு கோபம் வருது. இதிலே என்ன எழுதியிருக்கு தெரியுமா? அதாவது படிக்கிறேன் கேளு! (விங்கன் பேசுகிறான்.)