காட்சி 24-எ

காட்சி 24-எ

72 பகுதிகளில்

(உள்ளே உமா பயந்து நடுங்குதல். விங்கனும் ஜம்புவும் வெளியே பல மிருகங்களைப் போலக் கத்துதல். உமா பயந்து, எழுந்து வருகிறாள். விங்கன் ஜம்புவை மறைத்துக்கொண்டு கத்தச் சொல்ல, ஜம்பு அவ்விதமே கத்த, விங்கன் படுத்துக்கொள்கிறான். உமா கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகிறாள். விங்கன் தூங்குவதுபோல பாசாங்கு செய்ய, அவன் மீது சேலைத் தலைப்பைப் போட—அவன் அலறியடித்துக்கொண்டு எழுகிறான்.) விங்கன்:—நீயா? உமா:—எல்லா மிருகமும் இப்படிக் கத்துதே!...உங்களுக்கு பயமே இல்லையா? விங்கன்:—எனக்கென்ன பயம்? ஒரு பயமும் இல்லே!—புலி வந்தா என்ன வாயாலே கிழிக்கும். யானை வந்தா ஒரே மிதி மிதிக்கும். மிச்சம் ஏதாவது எலும்புங்க இருந்தா ஓநாய்களெல்லாம் தின்னுட்டுப் போயிடும்!... நீ ஏன் கவலைப்படுறே? நீ போயிப் படுத்துத் தூங்கு போ! (உமா போகிறாள். ஜம்புவிடம் கத்தும்படி விங்கன் சைகை காட்ட—ஜம்பு யானைபோல் கத்த—உமா அலறியடித்து ஓடி வந்து விங்கனைக் கட்டிக்கொள்கிறாள்.) உமா:—நீங்க தயவு செஞ்சு உள்ளே வந்து படுத்துக்குங்க!... விங்கன்:—ஹூஹூம்!...ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது ஒரு ஆணும் அதே ரூம்லே இருக்கிறதா? தர்மமாகாது. உமா:—ஒரு ஆணை அறியாமலாச் சாகவிடுறது ஒரு பொண்ணுக்கும் தர்மமாகாது. நீங்க இப்பவே உள்ளே வந்து படுக்கப் போறீங்களா இல்லையா? விங்கன்:—அப்படிச் சொல்றியா? அதிலேயும் நியாயம் இருக்கு! உனக்கு எந்தப் பழியும் வரக்கூடாதுங்கறதுக்காக நான் அங்கே வந்து படுக்கிறேன்! (இருவரும் உள்ளே போக ஜம்பு மகிழ்தல்.) ★