காட்சி 20
காட்சி — 20
நீச்சல் குளத்தோட்டம்
72 பகுதிகளில்
**நீச்சல் குளத்தோட்டம்** (கோகிலா, உமா நீச்சல் குளக்கரையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள். உமா, நீரில் விங்கனின் உருவத்தைப் பார்த்தல்.... கற்பனையாக...அந்த நினைவில் லயித்திருக்கும்போது: அருகே வந்த கோகிலா...'உமா' எனக் குரல் கொடுக்க உடனே உமா, தன் நினைவைக் கலக்கி விட்டு விட்டு...சமாளிக்கிறாள்.) கோகிலா:— ஓகோ...புரியுது! புரியுது!...உமா!...நீரில் எழுதிய நினைவுச் சித்திரத்தை ஏன் கலைச்சிட்டே?...யார் அது? அம்மா தமயந்தி! யார் அந்த நளன்? சகுந்தலா! யார் அந்த துஷ்யந்தன்?... உமா:— போடி கோகிலா... கோகிலா:— உமா!...உமா!...என்கிட்ட மறைக்காதே! எனக்கு எல்லாம் தெரியும்!..கொஞ்ச நாளா நீ... உமா:— கோகிலா!...உன்கிட்ட சொல்லிடணும்னு எனக்கு மனசு துடிக்குது...ஆனா... கோகிலா:— என்ன?...யாரு?... உமா:— நீ என்னு நினைக்கிறே நம்ப செகரட்டரி விங்கன் இருக்காரே... (கோகிலா முகமாற்றம்) அவர் நம்ப ஜமீன் அந்தஸ்துக்கு சமமான அந்தஸ்து உள்ளவரா இருப்பாரா?...இல்லே...சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவரா இருப்பாரா?... விங்கனை நான் விரும்புறேன்!...ஆனா...அதே நேரம் அவர் ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்னு தெரிஞ்சு போச்சுன்னு... அடுத்த நிமிஷமே...என் நெஞ்சிலே இருந்து அவரைத் தூக்கி எறிஞ்சிடுவேன்!... கோகிலா:— ஏன் இவ்வளவு கஷ்டம்...அவர்...எப்படிப்பட்டவர்னு பூவா தலையா போட்டுப் பார்த்துடுவோமே!... (தன் ஜாக்கெட்டுக்குள் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து) தலைவிழுந்தா அவர் பெரிய குடும்பம்... பூ விழுந்தா...சாதாரண குடும்பம்...சரிதானு?... (உமா, மெளனமாகப் புன்னகை புரிகிறாள். கோகிலா நாணயத்தைச் சுண்டி விடுதல்...தலைப் பக்கம் விழுகிறது.) ஆ! தலை! தலை!... (உமா, சிரித்தவாறு, "போடி" என நாணிக்கோணி ஓடுகிறாள்..) பிள்ளையாரப்பா! இந்தத் தடவை பூ விழ நீ தான் அருள் புரியணும்! (கோகிலாவின் மன அலைகள் பேசுகின்றன — திரும்பி வந்து நாணயத்தை எடுத்து சுண்டுகிறாள்...இப்போது 'பூ' விழுகிறது...'பூ' பக்கமும் கோகிலா முகமும் மாறிமாறிக் காட்சியாகின்றன... நாணயத்தை எடுத்துத் தலைப்பாகத்தைப் பார்க்கிறாள்...அந்தத்தலை ஜார்ஜ் மன்னர் தலையாக இருக்கிறது. அந்தத் தலை விங்கன் தலையாக மாறுகிறது...நினைவு அலைகள்.. (விங்கன் — கோகிலா காதல் கீதம்) விங்கன்:— மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே! — நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே! மேனகை போலொரு பூங்கையை புதுப்பாட்டே! — உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே! கோகிலா:— பழுக்கப் பழுக்க-ரசம் பிழியப் பிழியப்-பழம் உள்ளூரக் கள்ளூறத் தள்ளாடுமோ? குடிக்கக் குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ? ஓடை மீது ஓடும் நீர் வேண்டும்! உறவில் நாடும் ஒருவன் நீ வேண்டும்! — மேடையில் விங்கன்:— ஓடிய ஓடிய இடை நெளிய நெளிய நடை, உல்லாசப் பல்லாக்கின் ஊர்கோலமோ? நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க எண்ணும் ஊடல்கள் யுவராணி ஒப்பாரமோ? மாலை இடலாமோ? மஞ்சம் வரலாமோ? சேலை தொடலாமோ? கைகள் படலாமோ? — மேடையில் கோகிலா:— நழுவ நழுவ எண்ணத் தழுவத் தழுவ வரும் வித்தைகள் கண்ணே! உன் வெள்ளோட்டமோ? விங்கன்:— மயக்கி மயக்கிப் பின்பு மறைத்து மறைத்து வைத்தல்— அன்பே! உன் செல்வாக்கின் அடையாளமோ? கோகிலா:— காதல் விளையாடக் காவல் இடையாதோ? விங்கன்:— காவல் தடைபோட்டால் ஆவல் மீறுதோ? — மேடையில் ★